பெரம்பலூர், ஜூலை 15 கடந்த 12.7. 2025 அன்று மாலை 6 மணி அளவில் பெரம்பலூரில் ‘‘பெரியார் பேசுகிறார்’’ எனும் 11 ஆவது மாதாந்திர கருத்தரங்கக்கூட்டம் மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையில், மாவட்ட செயலாளர் மு.விசயேந்திரன் வரவேற்புரையோடு, மாவட்ட காப்பாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் அரங்கராசன், மாவட்ட துணைச் செயலாளர் துரைசாமி, பகுத்தறிவாளர் கழகத் மாவட்ட தலைவர் நடராசன் ஆகியோர் முன்னிலையில், வணிகவரித் துறையில் ஓய்வு பெற்ற ஆ. துரைசாமி ‘‘காரணம் பெரியார்- காரியம் காமராசர்’’ என்னும் தலைப்பில் சிறப்பான கருத்துகளை எடுத்துரைத்தார்.
தோழர்கள் மருத்துவர் கருணாகரன், மருத்துவர் ஜெயலட்சுமி, மருத்துவர் விஜயன், மருத்துவர் தமிழ்ச்செல்வி, ஆகியோரும் கலந்து கொண்டனர். பெரம்பலூர் நகரத்தில் உள்ள பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்புச் செய்தனர். பெரம்பலூர் மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர் பொ. பிறைசூடன் நன்றி கூற, கூட்டம் இனிதே நிறைவுற்றது.
லடாக், அரியானா, கோவா ஆகிய
மூன்று மாநிலங்களுக்குப்
புதிய ஆளுநர்கள் நியமனம்
மூன்று மாநிலங்களுக்குப்
புதிய ஆளுநர்கள் நியமனம்
குடியரசுத்தலைவர் உத்தரவு
புதுடில்லி, ஜூலை 15- லடாக், அரியானா, கோவா ஆகிய 3 மாநிலங்களுக்கு புதிதாக ஆளுநர்களை நியமித்து குடி யரசுத்தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
புதிய ஆளுநர்கள்
லடாக் யூனியன் பிரதேசத்தின் ஆளுநராக இருந்த பி.டி. மிஸ்ரா பதவி விலகியுள்ளார். அவரது பதவி விலகல் கடிதத்தை குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் புதிய ஆளுநரை அங்கு நியமித்துள்ளார். இதுபோல அரியானா மற்றும் கோவா மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமனத்துக்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி லடாக் யூனியன் பிரதேச ஆளுநராக ஜம்மு – காஷ்மீர் மேனாள் துணை முதலமைச்சர் கவிந்தர் குப்தா நியமிக்கப்பட்டு உள்ளார். அரியானா மாநில ஆளுநராக மேற்கு வங்காள பா.ஜனதா மேனாள் தலைவர் ஆஷிம் குமார் கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கு இவருக்கு முன்னதாக பண்டாரு தத்தாத்ரேயா ஆளுநராக இருந்தார்.
விஜயநகர வாரிசு
இதுபோல கோவா மாநில ஆளுநராக மேனாள் ஒன்றிய அமைச்சரும், விஜயநகர சமஸ்தான வாரிசுதாரருமான அசோக் கஜபதி ராஜூ நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்த நியமனங்கள் அந்தந்த அலுவலகங்களில் அவரவர் பொறுப்பேற்கும் தேதிகளில் இருந்து அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிஜேபி ஆளும் உத்தரப்பிரதேசத்தில் குடிபோதைக்கு அடிமையான தந்தை இரு மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடுமை!
காலிலாபாத், ஜூலை 15 குடிபோதைக்கு அடிமையான தந்தை, தனது 13 வயது மற்றும் 15 வயது மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காலிலாபாத் கோட்வாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் கணவன், மனைவி மற்றும் இரண்டு மகள்கள் கொண்ட குடும்பம் வசித்து வருகிறது. இந்த குடும்பத்தின் கணவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. நாள்தோறும் குடிபோதையில்தான் வீட்டிற்கு வருவார்.
கடந்த 11.7.2025 அன்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மாடியில 2 ஆவது மகள் (வயது 13) தூங்கிக் கொண்டிருந்தார். போதையில் மகள் என்று கூட பார்க்காமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தந்தையே தனதுவாழ்க்கையை சீரழித்து விட்டாரே, இதை எப்படி வெளியில் சொல்வது என பயந்து, மறைத்துள்ளார்.
ஆனால், அதை சாதகமாக்கிக் கொண்ட கொடூர தந்தை, கடந்த 12.7.2025 அன்று குடிபோதையில் வந்து மூத்த மகளை (வயது 15) பாலியல் வன்கொடுமை செய்துள்ளா். இது அவரது மனைவிக்கு தெரியவர, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் காவல்துறையினர் அந்தக் கொடூர தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.