கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் செய்தி!
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியைத் தடுக்கும் நவீன வருணாசிரம வாரிசுகளுக்கு இடம் தராது,
தமிழ் மண்ணைக் காப்பாற்றிட ஓரணியில் திரண்டு,
தமிழ்நாட்டுக் கல்விப் புரட்சி யுகத்தைத் தடையின்றித் தொடருவோம்!
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியைத் தடுக்கும் நவீன வருணாசிரம வாரிசுகளுக்கு இடம் தராது,
தமிழ் மண்ணைக் காப்பாற்றிட ஓரணியில் திரண்டு,
தமிழ்நாட்டுக் கல்விப் புரட்சி யுகத்தைத் தடையின்றித் தொடருவோம்!
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியைத் தடுக்கும் நவீன வருணாசிரம வாரிசுகளுக்கு இடம் தராது, தமிழ் மண்ணைக் காப்பாற்றிட, ஓர் அணியில் திரண்டு, தமிழ்நாட்டுக் கல்விப் புரட்சி யுகத்தைத் தடையின்றித் தொடருவோம்! இதுவே கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாளில் நாமெடுக்கும் சூளுரை என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தம் ஆட்சியை கல்விக்கென அர்ப்பணித்த
கல்விப் புரட்சியாளர் காமராசர்
கல்விப் புரட்சியாளர் காமராசர்
பச்சைத் தமிழர் காமராசர் என்று தந்தை பெரியார் அவர்களால் கூறப்பட்டு, குலக்கல்வித் திட்டத்தைக் குழிதோண்டிப் புதைக்க தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்று ஆச்சாரியார் மூடிய 6000 ஆரம்பப் பள்ளிக் கூடங்களைத் திறந்து, அதற்கு மேலும் 6000 பள்ளிகளையும் சேர்த்து மொத்தம் 12,000 பள்ளிகளைத் திறந்து, தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் காமராசர்.
நீதிக்கட்சி என்ற திராவிடர் ஆட்சியின் அஸ்தி வாரத்தில், மனுதர்மத்திற்கு இடமின்றி ஒரு புரட்சி யுகத்தைத் தொடர்ந்ததினால், அறிஞர் அண்ணா, கலைஞர், இன்றைய முதலமைச்சர் ஆட்சிகளால் இன்று இந்தியாவிலேயே தமிழ்நாடு ஒப்பற்ற கல்வி வளர்ச்சியைப் பெற்றுள்ளதற்கு அடிப்படை அன்றைக்குத் தம் ஆட்சியை கல்விக்கென அர்ப்பணித்த கல்விப் புரட்சியாளர் காமராசர் ஆவார்.
அன்று 1954 இல் இராஜாஜியின் குலதர்மக் கல்வித் திட்டம், தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கங்களும் ஒன்றுபட்டுப் போராடியதால் ஒழிக்கப்பட்டது. இன்று உலகின் பற்பல நாடுகளிலும் பலரும் பெரும் பதவி களில் இருப்பதற்கு முக்கிய திருப்பமாக அந்தக் குலக்கல்வி ஒழிக்கப்பட்டது அமைந்து கல்வி நீரோடை நாடெல்லாம் பாய்ந்தது!
காமராசரால் கொண்டுவரப்பட்ட
பகல் உணவுத் திட்டம்!
பகல் உணவுத் திட்டம்!
நீதிக்கட்சி காலத்தில் சர்.பிட்டி.தியாகராயர், மாநகராட்சித் தலைவராக இருந்தபோது, மதிய உணவு தொடங்கப்பட்டு, பிரிட்டிஷ் ஆட்சி நிதி தராத காரணத்தால், மேலும் பரவவும், தொடரவும் வாய்ப்பில்லாமல் போனது. அதுவே பகல் உணவுத் திட்டம் என, கல்வி வள்ளல் காமராசரால், அவரது ஆட்சியில் மீண்டும் பரவியது.
அது பிறகு எம்.ஜி.ஆர். ஆட்சியில், சத்துணவு திட்டமாகத் தொடர்ந்து, முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் 2 முட்டை (அ) 2 வாழைப் பழம் என்று விரிவடைந்த நிலையில், இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சியில் அதோடு, காலைச் சிற்றுண்டியையும் குழந்தைகளுக்கு வழங்கும் திட்டத்தால், பள்ளிக்குப் பிள்ளைகள் வருகை, வகுப்பில் கவனம் எல்லாம் பரவி, நல்ல கல்வி வளர்ச்சி பெருகுகிறது. இதை அழிக்கவே ஒன்றியத்தில் உள்ள மனுதர்ம
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு மும்மொழி என்ற திணிப்பு வேலைகளைச் செய்து வருகிறது.
காமராசர் பிறந்த நாளான இன்றைய (ஜூலை 15) நாளைக் கல்வி வளர்ச்சி நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொணடாடத் தனிச் சட்டமே இயற்றினார் கலைஞர் – கட்சி, அரசியல் கண்ணோட்டமின்றி!
சமதர்ம சமூகம் – ‘அனைவருக்கும் அனைத்தும்’ என அலைகடல் போல, கல்வித் துறையில் அமைதிப் புரட்சி ஏற்பட்டமை அந்த கர்ம வீரரின் ஒப்பற்ற தொண்டறத்தால் அல்லவா?
காமராசரின் 123 ஆம் ஆண்டில் – தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியைத் தடுக்கும் நவீன வருணாசிரம வாரிசுகளுக்கு இடம் தராது, தமிழ் மண்ணைக் காப்பாற்றிட, ஓர் அணியில் திரண்டு, தமிழ்நாட்டுக் கல்விப் புரட்சி யுகத்தைத் தடையின்றித் தொடரச் செய்வோமாக!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
15.7.2025