தி.மு.க.வில் புதியவர்களை இணைப்பதில் கரூர் முதலிடம்
மாநிலம் முழுவதும் ஓரணியில்_தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் அமைச்சர்கள் முதல் அடிமட்ட திமுக தொண்டர்கள் வரை தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது திமுகவில் புதியவர்களை சேர்ப்பதில் கரூர் மாவட்டம் முதலிடத்தில் இருப்பதாக செந்தில் பாலாஜியை மு.க.ஸ்டாலின் புகழ்ந்துள்ளார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மேனாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்தில் ஆயிரக்கணக்கானோரை திமுகவில் இணைத்துள்ளார்.
பெண்களுக்கு இலவச வாகன ஓட்டுநர் பயிற்சி
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சாலைப் போக்குவரத்து நிறுவனத்தின் (Institute of Road Transport) மூலம் பெண்களுக்கான இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஆக.20-க்குள் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த அரிய வாய்ப்பை ஒவ்வொரு பெண்களும் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காரில் பெண்ணுக்கு தொந்தரவு… சிக்கிய பாஜக தலைவர்
உத்தரப்பிரதேசத்தில் உள்ளூர் பாஜக தலைவர் ராகுல் வால்மிகி, காரில் பெண்ணிடம் தொந்தரவு செய்து கொண்டிருந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுடுகாட்டில் தனியாக நின்ற காரை சந்தேகத்துடன் உள்ளூர் மக்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திருமணமான பெண் ஒருவருடன் அவர், பாலியல் சேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரை ஊர் மக்கள் தாக்கிய காட்சிப் பதிவாகி வைரலாகி வருகிறது.
தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது. மு.க.ஸ்டாலினின் பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.எம்.மூர்த்தி அறிவித்துள்ளார். திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகரிக்கும் ஆர்.எஸ்.எஸ். தலையீடு… பிரதமர் மோடி பதவிக்கு சிக்கலா?
மோடியின் பிரதமர் பதவியை பறிக்க ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு இருப்பதையே மோகன் பகவத்தின் பேச்சு காட்டுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த முதல் 10 ஆண்டுகளில் பா.ஜ.க.வில் ஆர்.எஸ்.எஸ். தலையீடு பெரியளவில் இல்லை என்றும், தற்போது கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு ஆர்.எஸ்.எஸ். தலையீடு அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் பாஜக தேசியத் தலைவர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லையாம்.