‘‘நமது மண், மொழி, மானம் காக்க ஓரணியில் இணைவோம்!’’ என்று தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
முதலமைச்சர் கூறியுள்ள இந்த மூன்றுக்கும், ஒன்றிய பிஜேபி அரசினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை நடைமுறையில் எண்ணிப் பார்க்கும்போது, முதலமைச்சரின் கருத்து, குரல் எவ்வளவு முக்கியமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
‘நமது மண்’ என்று சொல்லும் பொழுது – இப்பொழுது ஏற்பட்டிருக்கும் சவால் நம்மைச் சிந்திக்க வைக்கிறது.
ஒன்றிய பிஜேபி அரசு ‘ஒரே நாடு’ என்பதை முன்னிறுத்தும் போது, அதில் உள்ள அபாயத்தைப் புறந்தள்ள முடியாது.
‘ஒரே நாடு’ என்றால் மாநிலம் என்பதன் ஆணி வேர் அறுக்கப்பட்டு விடும்.
ஒன்றை இந்த இடத்தில் நாம் நினைக்க வேண்டும். இந்தியா என்பது ஓர் உபகண்டமே தவிர ஒரே நாடு அல்ல; புவியியல் ஞானமும், வரலாறும் தெரிந்தவர்களுக்கு இது நன்றாகவே புரியும் – விளங்கும்.
ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் கூற்றுப்படியே பார்த்தாலும் 56 தேசங்களை உள்ளடக்கியதுதான் இந்தியாவாகும்.
வெள்ளைக்காரன் தன் ஆட்சியின் நிர்வாக வசதிக்காக துப்பாக்கி முனையில் ஒன்றிணைக்கப்பட்டதுதான் இந்தியா.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும்கூட பல சமஸ்தானங்களை இராணுவப் பலத்துடன் இந்தியாவுக்குள் கொண்டு வந்தவர்தான் வல்லபாய் படேல்.
இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்பு என்றுதான் இந்தியாவின் அரசமைப்புச் சட்டமே கூறுகிறது. இந்த நிலையில், இந்தியா ஒரே நாடு என்பது ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி வகையறாக்கள் கூறுவது – அரசமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் விரோதமே!
‘மொழி’யைப் பற்றியும் நம் முதலமைச்சர் கூறியிருக்கிறார். தேசிய கல்வி என்ற பெயரால் ஹிந்தி – சமஸ்்கிருதத்தைத் திணிக்கும் நோக்கம் உள்ளே புதைந்திருக்கிறது. இதன் மூலம் மாநில மக்களின் தாய்மொழி இரண்டாம் தரத்துக்குத் தள்ளப்படும்.
அதன்படி தமிழ்நாட்டு மக்கள் இரண்டாம் தரக் குடி மக்களாக்கப்பட்டு விடுவார்கள்.
ஆர்.எஸ்.எஸ். குருநாதரான எம்.எஸ். கோல்வால்கர் தமது ‘ஞானகங்கை’ நூலில் (Bunch of Thoughts) இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதமே என்று அடித்துக் கூறியுள்ளார்.
சமஸ்கிருதம் என்பது ஏதோ ஒரு மொழி என்று கடந்து போகக் கூடிய ஒன்றல்ல; அது ஒரு கலாச்சாரப் படையெடுப்பாகும். சமஸ்கிருதத்தின் ஊடுருவலால், தமிழ்மொழியேகூட தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்று பிளவுபட்டன.
சமஸ்கிருத வழிமொழிகள் ஹிந்தி, மராத்தி, பஞ்சாபி, நேபாளி, பெங்காலி, குஜராத்தி, சிந்தி என்று மொழியியல் ஆய்வாளர்கள் அறுதியிட்டுக் கூறுகின்றனர்.
பீகார் மாநிலத்தில் போஜ்புரி, மைதிலி, மாஹி போன்ற மொழிகளும் சமஸ்கிருத ஊடுவலால் உருவான மத்திய இந்தியாரிய மொழிகளாகும்.
இவற்றை எல்லாம் வரலாற்று ரீதியாகவும், தொலைநோக்காகவும் துல்லியமாக உணர்ந்த, அறிந்த காரணத்தால்தான் எப்பொழுதெல்லாம் தமிழ்நாட்டில் ஹிந்தித் திணிப்பு நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஏற்பட்டாலும் குபீர் என்று தீ பிடித்தது போல இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாடு மட்டும்தான் பொங்கி எழுந்தது, ஹிந்தித் தணிப்பைப் பொசுக்கி சாம்பலாக்கியது என்பது நெடுங்காலமாகவே இருந்து வரும் நிதர்சனமான வரலாறாகும்.
‘மானம் காக்க’ என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டின் சுயமரியாதையையாகும்.
தமிழ் மண்ணுக்கு என்று தனிப் பெரும் வரலாறு உண்டு; பண்பாடு உண்டு; இந்த நிலையில் ஒரே நாடாக்கி; ஒரே மொழியாக்கி; மாநிலத்துக்கென்று வரலாற்று ரீதியாக உள்ள பண்பாடு, தனித் தன்மைகளை நிர்மூலமாக்க முனைந்தால் அதைக் கை கட்டி வேடிக்கை பார்க்கும், சோற்றாலடித்த பிண்டங்களல்ல தமிழர்கள் – தமிழ்நாடு என்பதை பீரங்கி முழக்கமாக, கம்பீரமாக சொல்லுவதுதான் – சமூக நீதிக்கான சரித்திர நாயகராம் நமது ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் சமூகவலைதளத்தில் பதிவு செய்துள்ள மண், மொழி, மானங் காக்க ‘ஓரணியில் இணைவோம்!’’ என்ற எழுச்சி முழக்கமாகும்.
தந்தை பெரியார் பிறந்த நாளை ‘சமூக நீதி’ நாளாகவும், அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை ‘சமத்துவ’ நாளாகவும் ‘திராவிட மாடல்’ அரசின் முதல் அமைச்சர் பிரகடனப்படுத்தியதன் நுட்பத்தைப் புரிந்து கொள்ளாமல், ஜனநாயகத்திற்குச் சவக்குழி வெட்டி, ஒரே நாடு என்பதன் மூலம் அதிபர் ஆட்சி முறையைக் கொண்டு வந்து, இந்தியாவையே ஹிந்து ராஷ்டிரமாக்கும் மிகப் பெரிய சதித் திட்டத்தைப் புரிந்து கொண்ட நிலையில்தான் நமது முதலமைச்சர் மண், மொழி, மானம் என்ற மூன்று சொற்கள் அடங்கிய மிகப் பெரிய வரலாற்றுக் கருவூலத்தைப் பதிவு செய்துள்ளார்.
இது ஏதோ தமிழ்நாட்டுக்கானது மட்டுமல்ல; மாநில உரிமைகளை நிலை நாட்ட வேண்டிய அனைத்து மாநிலங்களுக்குமான வழிகாட்டும், வழிநடத்தும் காலங் கருதிய கல்வெட்டாகும்.
தந்தை பெரியார் விதைத்த சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம், பாலியல் உரிமை என்பன இப்பொழுது உலகம் தழுவியதாக ஆகி விட்டது. தமிழ்நாடு அதற்கு முன் மாதிரியான மண் என்பதை நமது ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை பாசிச பிற்போக்கு மதவாத சக்திகள் புரிந்து கொள்ளத் தவறினால் நட்டம் அவர்களுக்குத்தான் எச்சரிக்கை!