நேரம் மிகுதியாகி விட்டதால் நான் உங்களை அதிகமாகக் காத்திருக்கச் செய்ய விரும்பவில்லை. எனினும் நீங்கள் என்னை முக்கியமாய் பேசும்படி வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதை முன்னிட்டு உங்களுக்கு ஒன்றை மட்டும் குறிப்பாக எடுத்துகாட்டி பேச விரும்புகின்றேன். ஆதி திராவிட மக்களாகிய நீங்களும் மனிதர்களேயாயினும் சமூக வாழ்க்கையில் மிருகங்களைவிடக் கேவலமாகத்தான் நடத்தப்படுகின்றீர்கள் என்பதை நீங்களே ஓப்புக் கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். உங்களுள் சிலர் ராவ் பகதூர்களாயும், ராவ் சாகிப்களாயும், மோட்டார் வாகனங் களிலும், கோச்சுகளிலும் செல்லத்தக்க பணக்காரர்களாயு மிருக்கலாம். மற்றும் உங்களுள் ஞானமுள்ள அறிவாளி களும், படிப்பாளிகளுமிருக்கலாம். எவ்வாறிருந்தாலும் அத்தகையவர்களையும் பிறந்த ஜாதியையொட்டித் தாழ்மையாகத் தான் கருதப்பட்டு வருகின்றதென்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள். அதற்கு ஒரே ஒரு காரணந்தான் இருக்கிறதென்று சொல்ல வேண்டும். அது ஜாதி வித்தியாசக் கொடுமையே ஆகும்.
ஆதி திராவிடர்கள் என்றால் கோயிலருகிலும் வரக் கூடாதென்கிறார்கள். அவர்களும் இந்துக்கள் தாமென ஒப்புக் கொள்ளப் பட்டபோதிலும் அவர்களை இழிவு படுத்திக் கொடுமை செய்வதில் ஒரு சிறிதும் பின் வாங்குவ தில்லை. இந்து வென்று சொல்லப்படும் திரு.முனுசாமி என்னும் ஆதிதிராவிடரும் மனிதர்தான். அவர் ஆலயத் தருகில் வந்தால் ஆலயம் தீட்டுப்பட்டு சாமி செத்துப் போகுமாம். ஆனால், பிறவியில் மிருகமாய்ப் பிறந்ததும் ஜாதியில் நாய் என்று அழைக்கப்படுவதுமான மலம் உண் ணும் கேவலமான ஜந்துவையும் தாராளமாக விட்டுவிடும் போது ஆறறிவுள்ள மனிதனாய்ப் பிறந்து இந்துவென்றும் சொல்லிக் கொள்ளும் ஆதிதிராவிடர் எனப்படும் முனி சாமியை அவர் பிறப்பின் காரணமாக ரஸ்தாவிலும்விட மறுக்கப்படுவது என்ன கொடுமை? இக்கொடுமையைத் தடுத்துக் கேட்டால் அவர்கள் இந்துக்களாய் பிறந்துவிட் டார்கள், அவர்களைக் குறித்து மனுதர்ம சாஸ்திரத்தில் இப்படிச் சொல்லுகிறது. வேதத்தின் கர்ம காண்டத்தில் அப்படிச் சொல்லுகின்றது என்று சாஸ்திரக் குப்பைகளின்மீது பழியைப் போடுவதோடு, மதத்தையும் தங்கள் கொடுமை களுக்கு ஆதரவாக்கிக் கொள்ளுகின்றார்கள். இவ்வாறு மதத்தின் பேராலும் சமயநூல்கள், சாஸ்திரங்கள், புராணங் களின் பேராலும் செய்யப்படும் கொடுமைகளுக்கு அள வில்லை. மற்றும் “பெரியவர்கள் சொல்லி விட்டார்கள்; கட வுளால் வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் எழுதி வைக்கப் பட்டு விட்டது. அதைப்பற்றி அதிகமாகக் கேட்கா தீர்கள்” என்று கொடுமைகளுக்குச் சாக்குச் சொல்லிக் கொண்டு, ஆயிரக்கணக்கான வருடங்களாய் மக்களில் சில சார்பாரைப் பெரும் கொடுமைக் குள்ளாக்கப்பட்டும் வருகின்றது.
பெரிய சமூகம்
கொடுமைக்குட்படுத்தப்பட்டு வருகிறது
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் மதத்தின் பெயராலும், சாஸ்திர புராணங்களின் பெயராலும் ஒரு பெரிய சமூகம் கொடுமைக்குட்படுத்தப்பட்டு வரு கின்றது. ஆதிதிராவிடர் களாகிய உங்களை விட சற்று உயர்ந்த ஜாதியார் எனப்படும் எங்களையும் கேவலப் படுத்தாமல் விட்டார்களா? அதுவுமில்லை. எங்களை விட உயர்ந்த ஜாதியார் என்பவர்கள் போகுமிடத்திற்கு எங்களை விடக்கூடாதென்ற ஏற்பாடில்லாமல் போக வில்லை. உங்களைத் தொட்டால் தீட்டுப்பட்டுவிடும், குளிக்க வேண்டும் என்பது போலத்தான் எங்களைத் தொட்டாலும் குளிக்க வேண்டுமென்கிறார்கள். அதோடு எங்களைச் சூத்திரர்கள், வேசி மக்கள், பார்ப் பனனுக்கு அடிமை செய்யப் பிறந்தவர்கள் என்று இழி பெயர்களுமிட்டழைக்கிறார்கள். இக்கேவலச் செயலுக்குக் கடவுளால் எழுதி வைக்கப்பட்ட சாஸ்திரம் ஆதாரமென் கிறார்கள். நம் மக்களுள் அநேகர் எவர் எப்படிச் செய்தாலென்ன? நம் ஜீவனத்துக்கு வழியைத் தேடுவோமென்று இழிவையும் சகித்துக் கொண்டு உணர்ச்சியில்லா வாழ்க் கையில் ஈடுபட்டிருப்பதனால்தான் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாய் இக்கொடுமைகள் ஒழிய வழியில்லாதிருந்து வந்திருக்கின்றது.
இதற்கு முன்னால் பல பெரியவர்கள் தோன்றி ஜாதிக் கொடுமைகளையும் வித்தியாசங்களையும் ஒழிக்கப் பாடுபட்டபோதிலும் அவர்களும் மதத்தின் பெயராலும் வேறு சூழ்ச்சிகளாலும் அடக்கித் துன்புறுத்தப் பட்டு மிருக்கின்றனர். ஒவ்வொருவரும் நமக்கென்ன? நம் ஜீவனத்துக்கு வழியைப் பார்போமென்று இழிவுக்கிடங் கொடுத்துக் கொண்டு போகும்வரை சமூகம் ஒரு காலத்திலும் முன்னேறாது. ஜாதிக் கொடுமைகள் ஒரு போதும் ஒழிய மார்க்க மேற்படாது என்பது திண்ணம்’ கேளுங்கள்! ஜாதிக் கொடுமைகளை ஒழித்துச் சமத்து வத்தை நிலைநாட்டும் பொருட்டுத்தான் தென்னாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றியது. சுயமரியாதைக்காரர்கள் கோயில் குளம், சாமி இல்லை என்கிறார்கள்; மதமில்லை என்கின்றார்கள்; இவர்கள் நாஸ்திகர்கள்; இவர்களால் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்ற கட்டுப்பாடு போய்விடும் போலிருக்கிறது, சுவாமி போய்விடும் போலிருக்கிறது என்று பலவாறு நம் விரோதிகள் அலறிக் கூக்குரலிடு கின்றார்கள். பலர் கிளம்பி கூலிகளுக்கும் காலி களுக்கும் பணம் கொடுத்தும் நமக்கு விரோதமாய் விஷமப் பிரச்சாரம் செய்வதற்காகத் தூண்டிவிட்டு மிருக்கிறார்கள். அவர்கள் சூழ்ச்சிகளையும் கூலிப் பிரச்சார மோசத்தையுமுணராது அவர்கள் பிதற்றல் களை நம்பி நமது பாமர மக்கள் ஏமாறி அவர்கள் சொல்லுவது போல சிலர் சுயமரியாதை இயக்கம் கடவுள் இல்லை என்னும் இயக்கமெனவும் சொல்லு கிறார்கள். சுயமரியாதை இயக்கம் நாஸ்திகர்கள் இயக்கமென்று சொல்வது அற்பத்தனமான செய்கை என்பதை அறிவுறுத்துகின்றேன். உண்மையில் ஆஸ்தீக நாஸ்தீகம் என்பவைகளைப் பற்றி நாம் கவலைப்படு வதில்லை. உலகத்தில் அவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன் என்று பந்தயம் போட்டுக் கொண்டு ஜாதி வித்தியாசக் கொடுமைகளை நிலைநாட்டி சமுக முன் னேற்றத்திற்கும் விடுதலைக்கும் தடையாயிருக்கும் எந்த சாஸ்திர புராணங் களையும் சுட்டெரிக்கச் சுயமரியாதைக் காரர்களாகிய நாங்கள் தயாராயிருக்கிறோம்.
கடவுளைத்தான் ஒழிக்க வேண்டுமென்கிறோம்
மக்கள் முன்னேற்றத்தில் மதம் வந்து தடை செய்தால் அது எந்த மதமாய் இருந்தாலும் அதனை ஒழித்துத் தானாகவேண்டும் (கேளுங்கள்) கடவுள் உன்னைப் பறையனாய்ப் படைத்தார்; சுவாமி என்னைச் சூத்திரனாய்ப் படைத்தார்? அவனைப் பார்ப்பனனாய்ப் படைத்தார் என்று கடவுள் மேல் பழிபோட்டுக் கொடுமைகள் நிலைக்கச் செய்வதை விட்டுக் கொடுத்துக் கொண்டு அக்கொடுமை களுக்கு ஆதரவாயும் அக்கிரமங்களுக்கு அனுகூலமாயுமி ருக்கும் கடவுளைத்தான் ஒழிக்க வேண்டுமென்கிறோம். சும்மா கிடக்கும் கடவுளையும் மதத்தையும், சாஸ்திரத்தையும் நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை. (பெருத்த கரகோஷம்) கொடுமை செய்யும் மதத்தையும் சாஸ்திரத்தையும் கடவு ளையும் ஒழிப்பதற்கு பயந்தோமானால் நாம் நிரந்தரமாய்ப் பறையனாயும், சூத்திரனாயும், தாழ்ந்தவனாயும் பல கொடுமைகளுக்குட்பட்டுக் கேவலமாகத் தானிருந்தாக வேண்டும். நம்மை இத்தகைய கேவலமான நிலைமைக்குக் கொண்டுவந்த கடவுளும் மதமும் போகவேண்டியதுதான். இதை ஒளித்துப் பேசுவதில் பயனில்லை. (கரகோஷம்)
சமீபத்தில் நேப்பியர் பார்க்கில் கூடிய ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாட்டில் இந்துக்கள் எனச் சொல்லிக் கொள்ளப்படும் 6 கோடி மக்களாகிய ஆதிதிராவிடர்களை ஜாதிக் கொடுமையால் ஆலய உரிமையின்றி கொடுமைப் படுத்தப்படுவதால் இந்து மதத்தில் அவர்களுக்குச் சம உரிமையில்லாவிட்டால் வேறு மதத்தில் சேருவதுதான் உசிதமென்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. சம உரிமையில்லாதிருப்பதைவிட சாவதே மேல் என்று நினைப்பவர்களின் சுதந்திரத்திற்கு ஒன்றும் தடையாயிருக்க முடியாது. அதற்குத் தடையாயிருக்கும் கடவுளும், மதமும், மோட்சமும், நரகமும் அவர்களுக்கு அக்கரையில்லை. ஜாதிக் கொடுமைகளை ஒழிக்க நமது பெரியோர்கள் எவ்வளவோ பாடுபட்டு வந்தார்கள். சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னிருந்த கபிலர் காலத்திலும், திருவள்ளுவர் காலத்திலும், அதற்குப் பின்னரும் ஜாதி யில்லை. ஒழுக்கத்தினால்தான் உயர்வு தாழ்வு என்று எவ்வளவோ வற்புறுத்தப்பட்டு வந்தும் ஜாதிக் கொடுமைப் பேய்கள் ஒழிந்தபாடில்லை. ராமானுஜர் ஜாதியில்லை என்றும், சமத்துவத்திற்காகவும் பாடுபட்டார். தேவாரம் பாடியவர்களும் ஜாதியில்லை என்பதை விளக்கினார்கள் என்று சொல் மாத்திரத்தில் நிற்கின்றதேயன்றி உண்மையில் அக்கொடுமைகள் ஒழிவதற்கு மார்க்கமில்லாமல் தானிருக் கின்றது. நமது பெரியார்கள் சொல்லியவை ஆயிரக்கணக் காகப் பிறரால் வாயளவில் பாராயணம் செய்யப்படுகின் றனவேயன்றி செய்கையில் அதனால் ஒரு பலனு மேற்பட்டதாய்த் தெரியவில்லை. இன்றைக்கும் ஜாதிக் கொடுமையினால் இவன் இந்தத் தெருவில் வந்தால் தீட்டுப் பட்டுவிடும்; அந்தத் தெருவில் போனால் சாமி செத்து விடுமென்ற அநியாயங்கள்தான் தலைவிரித்தாடுகின்றன. இதற்குச் சாஸ்திரம் இப்படிச் சொல்லுகின்றது; மதம் அப்படி மறுக்கின்றதென்று சாக்கும் சொல்லிக் கொண்டிருப்பதை எவ்வளவு காலத்திற்குத் தான் விட்டுக் கொண்டிருக்க முடியும்?
என்ன அயோக்கியத்தனம்
நம்முடைய உதவி வேண்டும்போது இந்து மதத்தைச் சேர்ந்தவர்களென்று நம்மையும் சேர்த்துப் பேசுவதும், நமது சுதந்திரத்தையும் உரிமையையும் கேட்டால் சாமி செத்துப் போகுமென்பதும் என்ன அயோக்கியத்தனம் என்றுதான் கேட்கின்றேன். தீண்டப்படாதார், தாழ்ந்த வர்கள் என்று கொடுமையாக ஒதுக்கி ஒடுக்கப்பட்டு துன்புறும் மக்களுக்கும் உயர்ந்த ஜாதியார் கடவுள் முகத்தில் பிறந்தவர்களென்று சொல்லிக் கொள்பவர் களுக்கும் குணத்தினாலும், உருவத்தினாலும், அறிவினாலும், ஏதாவது வித்தியாசமிருக்கின்றதா வென்று கேட்கிறேன். இவ்வாறிருக்க, மக்களில் பெரும்பான்மையோரை ஜாதிக் கொடுமை களுக்கும் இழிவுக்கும் உட்படுத்தி வைக்க மதப் புரட்டுகளும் புராணப் புரட்டுகளும் தான் ஆதாரமாயிருக் கின்றன. மக்கள் சுதந்திரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பெருந் தடையாயிருக்கும் இம்மதத்தையும் புராணங் களையும் ஒழிக்காமல் பின் என்ன செய்வது?
நான் செத்த பிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கனுப்பப் படுமென்ற மூட நம்பிக்கையினால் பார்ப்பனன் காலைக்கழுவிச் சாக்கடைத் தண்ணீரைக் குடிக்காமலிருக்க செய்ய வேண்டு மென்பதற்காகவும்தான் நான் முஸ்லீமாகச் சாவேன் என்கின்றேன். (பெருத்த கரகோஷம்) சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் வெள்ளைக் காரர்கள் தீண்டப் படாதார், அவர்களைத் தொட்டால் குளிக்க வேண்டுமென்ற ஒரு ஜாதியார் இன்று அவர்களைப் போல் பிள்ளை களைப் பெற்றால் போதுமென்கின்றார்கள். (பெருத்த நகைப்பு) மதம் புராணம் முதலிய புரட்டுகளுக்கு ஆளாகி முட்டாள் தனத்திலும் அடிமைத்தனத்திலும் ஆழ்ந் திருப்பவர்யாரென்றால் இந்துக்கள்தான் என்று சொல்ல வேண்டும். அதிலும் இந்நாட்டில் இழிவுபடுத்தப்படும் மக்கள் யாரென்றால் நாம்தான்.
பிறமதங்களில் பல பாராட்டத்தக்க சீர்திருத்தங்களேற்பட்டு அவர்கள் நாளுக்கு நாள் முன்னேறி வருகின்றனர். கிறிஸ்துவ மதத்தில் அவர்களுடைய கிறிஸ்துவைத் தூக்கிப் போட்டு விட்டு சுதந்தரத்திற்கு வழியான விஞ்ஞான ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறார்கள். மதத்தையும் கடவுளையும் நம்பி இருந்தது போதுமென்று அவர்கள் சுயமுயற்சியிலும் ஆராய்ச்சியிலும் இறங்கியிருப்பதனால் தான் ஆகாசத் தந்திகளையும் இறந்த வர்களை எழுப்பி ஆறு மணி நேரம் நடமாட வைப்பதுமான பல அற்புதங்களை கண்டுபிடித்து வருகின்றார்கள். அவர்கள் தற்போது கடவுள் செயலாகிய மனித சிருஷ்டி யையும் செய்யத்தக்க வல்லமை உடையவர்களாயிருப்பது அவர்களுக்கிருந்த மதபுராண மூடக்கொள்கைகளை ஒழித்து ஆராய்ச்சித் துறையிலிறங்கியதினாலல்லவா? (கரகோஷம்) அதுபோலவே மகமதியர்களும் இந்துக் களைவிட பலவகையிலும் மேலானவர்களாகத் தானிருக்கின்றார்கள். முஸ்லீம்களுள் ஜாதி வித்தியாசமும் மனிதனுக்குள் மனிதன் உயர்வு தாழ்வென்ற கேவல உணர்ச்சியும் காணப்பட வில்லை. ஆலயத்தில் அரசனா யினும் சாதாரண மனிதனாயினும் சமத்துவமாகத் தானிருந்து தொழுகின்றார்கள். அவனுடைய மதம் அவனுக்கு ஒற்றுமையையும் வீரத்தையும் கொடுப்பதாயிருக்கின்றது.
திருவாங்கூரில் இந்துக்களை விட அதிகமாய் படித்தவர்கள் கிறிஸ்தவர்களாயிருக்கிறார்கள். கிறிஸ்தவ பாதிரிமார்கள் ஜாதி மதக் கொடுமைகளுக்கு உட்பட்டு துன்பமடைந்து வந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஆங்கு கிறிஸ்தவர்களாக்கி கல்வியளித்து விசேஷ முன்னேற்ற மடையச் செய்து விட்டனர். அவர்கள் போல என்றைக்கும் இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களும், இன்றைக்கும் இந்துக்களென்று நினைத்துக் கொண்டுள் ளவர்களுமான ஏழை மக்களோ மதத்தின் பெயராலும், இன்னும் பல கொடுமைகளுக்குட்பட்டுக் கொண்டும் ரஸ்தாக்களில் வருவதற்கும் உரிமையின்றி மிருகங்களிலும் கேவலமாய் நடத்தப்பட்டு வருகின்றனர்.
மிருகங்களிலும் கேவலமாய்….
திருவாங்கூரில் இந்து ராஜ்யமிருப்பதாகச் சொல்லப்பட்டாலும் ஆங்குப் பெரும் பான்மையோர் கிறிஸ்தவர்கள்தான். அதற்குக் காரணம் ஜாதிக் கொடுமையும் சமயப் புரட்டுகளும் தான். இன்னும் கொஞ்ச காலத்தில் திருவாங்கூரும் கிறிஸ்துவ ராஜ்ய மாகிவிடுமென்பது திண்ணம். துருக்கியில் மதத்தையும் புராணத்தையும் மூட்டை கட்டி கடலில் போட்டுவிட்ட பின் தற்போது எவ்வளவு முன்னேற்ற மேற்பட்டிருக்கிற தென்பதைச் சொல்ல வேண்டியதில்லை. மதத்தை நம்பி கிலாபத் பாட்டுப் பாடிக் கொண்டி ருந்தபோது வெள்ளைக்காரன் துப்பாக்கி முனைக்குப் பயந்திருந்த துருக்கி தற்போது வெள்ளையரையும் நடுங்கச் செய்யும் நிலைமைக்கு வந்திருப்பதன் காரணமென்ன? இங்கு முஸ்லீம்கள் இன்னும் மதப்பித்து பிடித்து ஒன்றரை அங்குல தாடி வேண்டுமா, அல்லது இரண்டங்குலமாவென்று அளவு பார்த்து தாடியைக் கத்தரித்துக் கொண்டிருக்கும்போது துருக்கியில் முஸ்லிம்கள் மழுங்க சிரைத்து விடவேண்டு மென்றும், இல்லாவிட்டால் தண்டிக்கப் படுமென்றும், சொல்லப்படுகின்றது.
மதத்தை ஒழிக்கத்தான்….
இங்கு எந்த வர்ண லுங்கி கட்டுவது, எப்படிக் குல்லாய் போடுவது என்று விவாதித்துக் கொண்டிருந்தாலும், அங்கு வெள்ளைக்காரர்களைப் போல் உடைதரிக்காவிட்டால் அபராதம் விதிக்கப் படுகின்றது. மதத்தை அழிக்கச் சுயமரியாதை இயக்கம் வந்ததா என்று சிலர் கேட்கலாம். ஜாதிக் கொடுமைகளையும் விபரீத வித்தியாசங்களையும் நிலைநாட்டுவதா யிருந்தால் அந்த மதத்தை ஒழிக்கத்தான் சுயமரியாதை இயக்கம் இருக்கின்றதென்றுதான் சொல்லுவேன். (கரகோஷம்) உண்மையில் சுயமரியாதை உணர்ச்சி உங்களுக்கு இருக்குமானால் உங்கள் முன்னேற்றத்திற்கும் சுதந்திரத்திற்கும் தடையாயிருக்கும் மதக்கட்டுப் பாடுகளையும் சுவாமி பூதமென்பதனையும் உடைத்தெறியப் பின்வாங்க மாட்டீர் களென்பது திண்ணம். (கரகோஷம்) மிருகத்திலும் கேவலமான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு நீங்களும் மனிதரோடு மனிதரான சமத்துவ வாழ்வடைந்து மற்றையோரைப் போல சுதந்தரமும் சுகமுமடைய வேண்டுமென்ற உணர்ச்சி உங்களுக்கு இருக்குமாயின் நீங்கள் உங்கள் முன்னேற்றத் தடைகளாயிருக்கும் எதனையும் தகர்தெறியத் தயங்கக் கூடாது. உங்கள் சுதந்தரத்திற்கு எது தடையாயிருந்தாலும் அதனை ஒழிக்க முற்படுவீர் களானால் தீண்டாமை என்பது அரை நிமிஷத்தில் தானாய் பறந்துவிடுமென்பது திண்ணம். (கரகோஷம்)
வடநாட்டில் மதம் ஒழிந்தாலும் மற்றென்ன ஒழிந்தாலும் ஒழியட்டும், சுதந்திரம்தான் பெரிதெனப் போராட முற்பட்டதனால்தான் நேற்றுகூட ஒரு ஆலயத்தில் சகல வகுப்பாகும் தாராளமாகச் சென்று கடவுளை வழிபடுவ தற்குக் கதவுகள் திறந்து விடப்பட்டன. உங்களுக்குக் கோயிலுக்குள் செல்லும் உரிமையும், குளங்களில் குளிக்கும் உரிமையும் கிடைத்து விட்டால் அதனுடன் நீங்கள் திருப்தியடைந்துவிடவும் முடியாது. நீங்கள் சுதந்திர மடைய விரும்புவது போலவே உங்கள் பெண்களுக் கும் சுதந்தரமளிக்க நீங்கள் தயாராக முன்வர வேண்டும். அப் போதுதான் உங்களுள் உண்மையான முன்னேற்றமேற்படும். உங்கள் பெண்களுள் மறுமணத்தை விரும்பும் விதவை களுக்கெல்லாம் மறுமணம் செய்ய வேண்டும். இவ்வழக்கம் உங்களுள் இல்லாதிருக்கவில்லை. ‘‘அறுத்துக் கட்டும் ஜாதி’’, இழிந்த ஜாதி என்று சொல்லப்பட்ட போதிலும் அறுத்துக் கட்டுவதால் அறுத்துக் கட்டாத உயர்ந்த ஜாதியில் நடக்கும் பல கேவல மான சிசுக் கொலைகளும், கழுத்தைத் திருகிக் கள்ளியில் போடுவதான கொடுமைகளில்லா திருப்பது எவ்வளவோ உசிதமல்லவா?
கலப்பு மணத்தின் மூலமாகத்தான்…
ஒழுக்கத்திலும் படிப்பிலும் முன்னேற்றமடைந் திருந்தால் உங்கள் பெண்களை நாங்கள் பெற்றுக் கொண்டு, குணமும், படிப்பும், ஒழுக்கமுமுள்ள உங்கள் பிள்ளை களுக்கு எங்கள் பெண்களைக் கொடுக்கவும் பின்வாங்க மாட்டோம். இத்தகைய கலப்பு மணத்தின் மூலமாகத்தான் ஜாதி வித்தியாசப் பேய் சீக்கிரத்தில் ஒழியும். (கரகோஷம்) ஆண்கள் எப்படியிருந்தாலும் அக்கறையில்லை. பெண்களுக்குத் தான் எல்லாக் கட்டுப்பாடு களுமிருக்க வேண்டுமென்ற மூட அறிவீனமான கொள்கைகளிருக்கும் வரையிலும் நீங்கள் முன்னேற முடியாது. சாப்பிட்டுக் கை கழுவினதும், கதவைச் சாத்திக் கொள்ளென்று கணவன் வெளியே சென்றால், சாப்பிடும் போதே மோர் விடுவதற்கு வேலைக்காரியைக் கூப்பிட்டு, அய்யாவுக்கு மோர் விடு, நான் போய்விட்டு வருகின்றேன் என்று மனைவி சொல்லிவிட்டு வெளியேறினால்தான் ஆண்களுக்கு அறிவு வரும். (நகைப்பும், கரகோஷமும்) ஆண்கள் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். பெண்களுக்குத் தான் பதிவிரதத் தன்மை அவசியமென்ற பல அர்த்தமற்ற கொள்கைகளினால்தான் ஆண்களுக்குள் ஒழுங்கீனங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கவும் இடமேற்படுகின்றது. மதத்தின் பெயராலும் மற்றதன் பெயராலும் செய்யப்படும் அநீதி களையும், அக்கிரமங்களையும் ஒழிப்பதில் அம்மதங் களையே ஒழிக்க வேண்டுவது அவசியமானாலும் அதற்கும் தயங்கக்கூடாது. மக்கள் சுதந்திரமடைந்து சுகமாய் வாழ் வதற்கு வழி என்ன எனக்குத் தோன்றியதைப் பிறர் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் அஞ்சாது உண்மையை எடுத்துச் சொன்னேன். என் உணர்ச்சிக் குட்பட்டதைச் சொன் னேனே தவிர, இவர் அவருக்குச் சொன்னார், அவர் எனக்குச் சொன்னார், நீங்கள் அதன்படி நடக்காவிட்டால் பாவம், நரகத்திற்குப் போவீர்களென்ற கட்டுப்பாடு ஒன்றும் சொல்லவில்லை. நான் சொன்னவற்றை நீங்கள் ஆராய்ந்து சரி எனப்படுவதைக் கொண்டு, சரி இல்லாததை ஒதுக்கி என் மீது அனுதாபங் காட்டும்படி நான் கேட்டுக் கொள்கிறேன்.
03.08.1929 அன்று சென்னை இராயபுரம் கண்ணப்பர் வாசக சாலைத் திறப்பு விழாவின் போது ஆற்றிய சொற்பொழிவு குடிஅரசு – 11.08.1929