தென்காசி, ஜூலை, 13 சுயமரியாதை இயக்கத்தின் தாக்கமும் அதனால் நாம் பெற்ற ஊக்கமும், ஏற்பட்டுள்ள சமூக மாற்றமும் அளப்பரியது என்று கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலி மூலம் மாணவர்களிடையே உரையாற்றினார்.
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள வள்ளல் வீகேயென் மாளிகையில் ஜூலை 10 முதல் 13 வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. குற்றாலத்தில் நடைபெறும் 46ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப்பட்டறையின் மூன்றாம் நாளில், 86 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் பெண்கள் 26, ஆண்கள் 60 பேராவர். குறிப்பாக இதில் இருபால் பட்டதாரி மாணவர்கள் 24 பேர். இருபால் பள்ளிக்கல்வி மாணவர்கள் 62 பேராவர். மூன்றாம் நாளில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலியில் உரையாற்றியது உள்ளிட்ட, மொத்தம் 9 வகுப்புகள் நடைபெற்றன. பயிற்சிப்பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்டக் காப்பாளர் மா.பால் ராசேந்திரம், தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன், செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் ஒத்துழைப்பில் மூன்றாம் நாள் அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களின் அறிவுப்பசிக்கு வகுப்பாசிரியர்கள் தீனி போடுகிறார்கள் என்றால், வயிற்றுப்பசிக்கு தீனி போட தலைமைச் சமையலர் அ.முருகன், உதவி சமையலர்கள் முத்துச்சாமி, பாஸ்கர், முருகன், சுடலையாண்டி, மாரியம்மாள் மற்றும் கழகப் பொதுக்குழு உறுப்பினர் மதுரை ராக்குத் தங்கம் ஆகியோர் அடங்கிய ஒரு குழு பின்னணியில் பணிசெய்து கொண்டிருந்தனர். கழகப் பொதுக்குழு உறுப்பினர் மதுரை சுப்பையா சமையல் குழுவை மேற்பார்வை செய்யும் பணியை மேற்கொண்டார்.
வகுப்பின் தலைப்புகளும் வகுப்பாசிரியர்களும்!
எழுத்தாளர் வி.சி.வில்வம், “தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள்”, தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், “திராவிடர் கழகமும், அரசியல் சட்டமும்”, கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி, “தந்தை பெரியாரால் விளைந்த கல்விப்புரட்சி”, பேராசிரியர் ந.எழிலரசன், “தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?”, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், “நூற்றாண்டு கண்ட சுயமரியாதை இயக்கம்”, மருத்துவர் இரா.கவுதமன், “பேயாடுதல் – சாமியாடுதல் – ஒரு அறிவியல் விளக்கம்”, உளவியலாளர் ஜே.வெண்ணிலா, “பெரியாரியலே பெருந்தீர்வு”, பேராசிரியர் ஆ. திருநீலகண்டன், “ஜாதி ஒழிப்புப் போரில் தந்தை பெரியார்”, பயிற்சிப்பட்டறை மாணவர்களே பங்கேற்ற ”பட்டிமன்றம்” உள்ளிட்ட 9 வகுப்புகள் நடைபெற்றன. இடையிடையே திண்டுக்கல் ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்வும் இயக்கப் பாடல்களை மாணவர்களுடன் சேர்ந்து பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், கவிஞர் பொற்செழியன் ஆகியோர் பாடினர். காலை 9:30 முதல் இரவு 8:30 வரை நடைபெற்ற இவ்வகுப்புகளில் மாணவர்கள் நல்ல வண்ணம் ஒத்துழைத்து பாடங்களைக் குறிப்பு எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. வகுப்புகள் முடிந்ததும் சிறப்பாக குறிப்புகள் எடுத்துள்ள மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று தொடக்க வகுப்பிலேயே அறிவிக்கப்பட்டது. அதற்கேற்ப மாணவர்களின் குறிப்பேடுகள் பயிற்சிப்பட்டறையின் ஒருங்கிணைப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மாணவர்களும் அவ்வண்ணமே செய்தனர்.
மூன்றாம் நாள் வகுப்புகளின் கருத்துச் சாரம்!
இந்திய அரசியல் சட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி, பிரிவு மக்களுக்கு வேலை வாய்ப்புகளில் மட்டுமே இடஒதுக்கீடு இருந்தது. தந்தை பெரியார் போராடியதன் விளைவாக ஏற்பட்ட முதல் அரசியல் சட்டத்திருத்தம் மூலமாக பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கும் கல்வியில் இடஒதுக்கீடு கிடைத்தது; 1936 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சமஸ்கிருத பண்டிதர் குப்புசாமி சாஸ்திரிக்கு ரூ.300 சம்பளம், அதே கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியரான நமச்சிவாய முதலியாருக்கு ரூ.85 சம்பளம். தந்தை பெரியார் நடத்திய போராட்டத்தின் காரணமாகவே இந்த பேதம் ஒழிக்கப்பட்டது; மதுரை மன்னனான பாண்டியனிடம் கேள்வி கேட்ட கண்ணகி, தனது கணவன் கோவலனிடம் நானிருக்க இன்னொருத்தி எதற்கு என்று கேள்வி கேட்டிருந்தால் பிரச்சனையே வந்திருக்காது; தஞ்சாவூரில் உள்ள திருவையாற்றில் தமிழில் பாடியதற்காக தீட்டுக்கழித்தார்கள். இதைத்தான் கலைஞர், ”குடிஅரசு” இதழில் ‘தீட்டாயிடுத்து’ என்று எழுதினார்; ஜாதியை ஒழிப்பதுதான் சுயமரியாதை இயக்கத்தின் இலக்கு. ஜாதியை காப்பாற்றுவதுதான் ஆர்.எஸ்.எஸ்.சின் இலக்கு; எங்கேயாவது பார்ப்பனர் வீட்டில் சாமியாடி – பேயாடி பார்த்திருக்கிறீகளா?, ம்துரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி கோயில்களில் சாமியாடி பார்த்திருக்கிறீர்களா?, மருத்துவர், பொறியாளர் போன் றோர் சாமியாடி பார்த்திருக்கிறீர்களா?, பேயாடுகிற ஆண்களைப் பார்த்திருக்கிறீர்களா?; உலகப்புகழ் பெற்ற உளவியலாளரான ஆரோன் பெட் 1950 இல் கூறிய கருத்துகளை தந்தை பெரியார் 1929 இலேயே கூறியிருக்கிறார். ஆகவே கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு ஏன் அலைய வேண்டும்; பி.ஜே.பிக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் ஆட்படுவது உதைத்த காலை முத்தமிடுவது போன்றதாகும்; தென்னிந்தியாவில் இரண்டு வர்ணம்தான். பார்ப்பனரல்லாதார் இயக்கம் வலிமையாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்; தந்தை பெரியார் தொண்டில் விஞ்சி நிற்பது இனநலனே உள்ளிட்ட கருத்துகள் இன்றைய வகுப்புகளில் கற்றுத் தரப்பட்டன.
திராவிடர் கழகம் ரகசிய அமைப்பு அல்ல!
மதிய உணவுக்குப் பிறகு, கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், “நூற்றாண்டு கண்ட சுயமரியாதை இயக்கம்” எனும் தலைப்பில் காணொலி வாயிலாக பேசினார். அவர் தனது உரையில், சுயமரியாதை இயக்கத்தின் தாக்கமும், அதனால் நாம் பெற்ற ஊக்கமும் அளப்பரியது; சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம் வெறுப்பை பரப்புவது அல்ல, சமத்துவத்தைப் பரப்புவது; எங்கே தன்னம்பிக்கை ஆழமாக இருக்கிறதோ அங்கே துணிச்சல் அதிகமாக இருக்கும்; ஜாதியை ஒழிப்பதுதான் சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம், ஜாதியை காப்பாற்றுவதுதான் ஆர்.எஸ்.எஸ்.சின் நோக்கம்; மனுதர்மம் தான் அரசியல் சட்டமாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். சின் இன்றைய கருத்தும்; திராவிட இயக்கம் ரகசிய அமைப்பு அல்ல; ஆர்.எஸ்.எஸ். ரகசிய அமைப்பு; எல்லாருக்கும் எல்லாம் – இதுதான் திராவிட இயக்கம்; இன்னாருக்கு இதுதான் – இதுதான் ஆர்.எஸ்.எஸ். போன்ற கருத்துகளை எடுத்துவைத்து, கடந்த 100 ஆண்டுகளில் சுயமரியாதை இயக்கம் செய்த மாற்றங்களை, சாதனைகளை ஒரு கழுகுப்பார்வையில் காட்டுவது போலக் காட்டியிருக்கிறேன். மாணவர்கள் புத்தகங்களைப் படித்து பயன் பெறவேண்டும் என்று கூறி, தனது உரையை நிறைவு செய்தார். கழகத்தலைவர் உரைக்கு ஆதாரங்களாக ஒளிப்படங்கள் இடையிடையே காட்டப்பட்டன.
இனநலனா? பகுத்தறிவா? பெண் விடுதலையா?
நிறைவு வகுப்பாக பட்டிமன்றம் நடைபெற்றது. தந்தை பெரியாரின் தொண்டில் விஞ்சி நிற்பது இனநலனா? பகுத்தறிவா? பெண் விடுதலையா? எனும் தலைப்பு நேற்றே கொடுக்கப்பட்டு, மூன்று அணியினருக்கும் நான்கு பேராக 12 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். தூத்துக்குடி மாவட்டக் காப்பாளர் மா.பால்ராசேந்திரம் நடுவராக பொறுப்பேற்றுக்கொண்டார். இனநலனே எனும் அணியில், வீரப்புகழன், ஸ்வாதி லட்சுமி, நவீன், வள்ளல் சிகரம், வெங்கடேசன், பகுத்தறிவு எனும் அணியில் வெண்மாறன், கனிஷ்கா, கார்த்திகா, சத்யப்பிரியன், பெண் விடுதலை எனும் அணியில், அறிவுச்செல்வன், நிலவெழிலன், சாதனப் பிரியா, சபி.முகமது ஆகியோர் கலந்து கொண்டு, மூன்று நாட்களில் கற்றுக்கொண்டதை பட்டிமன்றத்தில் எடுத்து வைத்தனர். அனைவரின் உரைகளைக் கேட்டு, நடுவர் கலந்துகொண்ட அனைவரையும் பாராட்டினார். இறுதியில் தந்தை பெரியாரின் தொண்டில் விஞ்சி நிற்பது இனநலனே! என்று தீர்ப்பளித்தார். கலந்துகொண்டு பேசியவர்களில் சிலரை தொடர்ந்து பயிற்சி செய்யும்படி ஊக்குவித்தார். கலந்துகொண்டவர்களுக்கு பயிற்சி முகாம் சார்பில், மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் புத்தகங்கள் பரிசாக வழங்கினார். கும்பகோணம் மாவட்டக் காப்பாளர் தாராசுரம் இளங்கோவன் பட்டிமன்றத்தில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்.
முன்னிலையேற்றுச் சிறப்பித்தவர்கள்!
துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் இல.திருப்பதி, பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் கே.டி.சி.குருசாமி, தென்காசி மாவட்டக் காப்பாளர் சீ.டேவிட் செல்லத்துரை, தென்காசி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முருகன், தென்காசி மாவட்ட துணைச் செயலாளர் அ.சவுந்திரபாண்டியன், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் செந்தூரபாண்டியன், ஒரத்தநாடு திருநாவுக்கரசு, விருத்தாச்சலம் மாவட்டத் தலைவர் இளந்திரையன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். மாணவர்களைப் போன்றே பார்வையாளர்களும் திராவிட இயக்கக் கருத்தியலை மெருகேற்றிக் கொண்டனர்.