சென்னை, ஜூலை 13– டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர், சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஆண்டு அட்டவணையின்படி செயல்படுகிறது. குரூப்-2, 2ஏ-க் கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகிறது. அதற்கான தேர்வு முடிவையும் 2 மாத காலங்களுக்குள் வெளியிட்டு விடுவோம். இதன் மூலம் இந்த ஆண்டுக்கான அட்டவணையின்படி அறிவிப்புகளை செய்து முடித்து விடுவோம்.
தேர்வுகளை பொறுத்தவரையில், வினாத்தாள், விடைத்தாள்களை ஒரே இடத்தில் பிரத்யேகமாக ‘பிரிண்டிங்’ செய்கிறோம். அதனை மாவட்ட தலைநகரங்களுக்கு 2 கட்டமாக அனுப்பிவைக்கிறோம். தேர்தல் நடைமுறைகளை போலவே இது நடக்கிறது. வினாத்தாள், விடைத்தாள்கள் பண்டல்களில் பாதுகாப்பாக இருக்கும். அதை யாரும் திறந்து பார்க்க முடியாது. தேர்வு அறையில் மட்டுமே திறக்க முடியும். மாவட்ட கருவூலத்தில், இந்த பண்டல்கள் அனைத்தும் சரிபார்க்கப்படும். மாவட்ட கருவூலத்தில் இருந்து துணை கருவூலத்துக்கு மாற்றப்படும்போது, பாதுகாப்பான வாகனத்தில் காவல்துறை, வருவாய், டி.என்.பி.எஸ்.சி. அலுவலர்கள் இருப்பார்கள். மதுரையில் வாகனத்தில் பேப்பர் ஒட்டி அனுப்பியது பேசு பொருளாகி விட்டது. மற்றபடி, அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி பாதுகாப்பாகவே வினாத்தாள், விடைத்தாள்கள் கொண்டு செல்லப்பட்டு இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.