மனிதர்களை ராக்கெட்டில் விண்ணுக்கு அனுப்பும் பரிசோதனை டிசம்பர் மாதம் நடைபெறும்

1 Min Read

நாகர்கோவில், ஜூலை 13– மனிதரை விண்ணுக்கு ராக்கெட்டில் அனுப்பும் ககன்யான் திட்டத்தில், ஆளில்லா ராக்கெட் பரிசோதனை வரும் டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.

ககன்யான் திட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் நடைபெற்ற இளம் விஞ்ஞானிகளுக்கான சிறப்பு பயிலரங்கில் பங்கேற்ற வி.நாராயணன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘ககன்யான்’ என்ற திட்டத்தை இஸ்ரோ நடைமுறைப்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின்படி, இந்தியர் ஒருவரை ஏ.ஓ.ஜி. முறைப்படி ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பி, அவரை அங்கே பாதுகாப்பாக வைத்திருந்து, மீண்டும் அவரை பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வர இருக்கிறோம். இதற்கான, சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

டிசம்பர் மாதம்

இந்த திட்டம் 2012 ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டது. அப்போது இந்த திட்டத்துக்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது தற்போது ரூ. 20,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் ஆளில்லா ராக்கெட் அனுப்பப்படும்.

தொடர்ந்து இதுபோல 2 ராக்கெட்கள் அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டும். 2027ஆம் ஆண்டு மனிதருடன் ராக்கெட் அனுப்பப்படும்.

ஏஅய் தொழில்நுட்பம் தொடர் பான ஆய்வுக்கூடங்களை இஸ்ரோ சார்பிலும் அமைத்துள்ளோம். இது மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. நிலவுக்கு மனிதனை அனுப்புவது குறித்தும் பிரதமர் அறிவித்துள்ளார்.

நிலவில் ராக்கெட்டை இறக்குவது எளிதான விஷயம் கிடையாது. நம்மிடம் இருக்கும் மார்க்-3 ராக்கெட் பத்தாயிரம் கிலோ எடையைத்தான் கொண்டு செல்லும். நிலவில் ராக்கெட்டை இறக்கவேண்டும் என்றால் 125 டன் எடையைக் கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *