வாஷிங்டன், ஜூலை 13 அமெரிக்க அரசு மாணவர், சுற்றுலா மற்றும் எச்-1பி விசாக்களுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளதால், இந்திய மாணவர்கள், வர்த்தக-சுற்றுலாப் பயணிகள் மற்றும் பணியாளர்கள் இனி இருமடங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஜூலை 4-ஆம் தேதி ‘ஒன் பிக் பியூட்டிபுல்’ மசோதாவில் கையெழுத்திட்டார். இந்தச் சட்டத்தின்படி, மேற்கண்ட விசாக்களுக்கான தற்போதைய சட்டபூர்வ கட்டணத்துடன், புதிய ‘விசா ஒருமைப்பாடு கட்டணமும்’ வசூலிக்கப்படும். இந்த கூடுதல் கட்டணம் ஆரம்பத்தில் $250 (சுமார் ₹21,500) வரை இருக்கும் எனவும், ஆண்டுதோறும் பணவீக்கத்திற்கு ஏற்ப உயர்த்தப்படும் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது. அய்தராபாத்தைச் சேர்ந்த வெளிநாட்டுப் பயண ஆலோசகர் சஞ்சீவ் ராய் கூறுகையில், “2026 ஜனவரி முதல் புதிய விசா வரி விதிப்பு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக-சுற்றுலாப் பயணிகளுக்கான விசாவுக்கு தற்போது $185 (சுமார் ரூ.16,000) வசூலிக்கப்படுகிறது. இனி புதிய கட்டணத்துடன் ரூ.37,500 செலுத்த வேண்டியிருக்கும். குடியேற் றம் சாராத அனைத்து விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்” என்றார். இந்த புதிய கட்டணத் தொகை ‘பாதுகாப்பு இருப்புத் தொகை’ என்ற பெயரில் வசூலிக்கப்படுகிறது. சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் இத்தொகை திரும்ப அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அந்த நிபந்தனைகள் மிகவும் கடுமையானவை எனப் பயண ஆலோசகர்கள் கருதுகின்றனர். அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையைத் தீவிரமாகப் பின்பற்றி வரும் டிரம்ப் நிர்வாகம், சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதேபோல், வெளிநாடுகளில் இருந்து சட்டபூர்வமாக அமெரிக்காவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையையும் குறைப்பதும் அவர்களின் திட்டமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.