உத்தராகண்டில் பேருந்து ஆற்றில் விழுந்ததில் 4 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். மேலும் சிலரைக் காணவில்லை. இந்த சம்பவத்தில் தனது பெற்றோரை இழந்த பார்த் சோனி என்ற 10 வயது சிறுவன் கண்ணீருடன் கடவுளிடம் நாங்கள் செய்த தவறுதான் என்ன? என்று கேட்கும் காட்சி கலங்காத நெஞ்சையும் கலங்க வைப்பதாக உள்ளது.
ருத்ரபிரயாக் மாவட்டம், டேஹ்ராடூனில், கோல்ஹ்திர் பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து அலக்நந்தா ஆற்றில் விழுந்தது. இதில் 4 பேர் பலியாகினர்.
எட்டு பேரின் நிலைமை என்னவானது என்று தெரியவில்லை. இந்த சம்பவத்தில் விஷால் சோனி (42), அவரது மனைவி கவுரி சோனி (41) பலியான நிலையில், அவர்களது மகன் பார்த் சோனி (10) உயிர் பிழைத்துள்ளான். இவர்களது மகள்கள் தேஜஸ்வினி (17), மானஸ்வினி (15), பெற்றோருடன் சார் சாம் யாத்திரை செல்லாமல், ராஜ்கரில் தங்களது வீட்டிலேயே இருந்துவிட்டனர்.
தனது பெற்றோரின் உடல்களை மீட்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது, சாலையோரம் அமர்ந்திருந்த பார்த், கண்ணீர்விட்டபடி, கைகளை மடக்கிக் கொண்டு, ‘பத்ரிநாதா, என்ன இப்படி செய்துவிட்டாய்? நாங்கள் செய்த தவறுதான் என்ன? நாங்கள் உன் பக்தர்கள் அல்லவா?’ என்று கேட்டு கதறும் காட்சிப் பதிவு பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீர் அல்ல, குருதியை வரவைப்பதாக உள்ளது.
ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராட்டிர மாநிலங்களைச் சேர்ந்த 19 பக்தர்கள், குடும்பத்தோடு, பத்ரிநாத் கோயிலுக்கு தரிசனம் செய்ய 31 பேர் அமரும் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்து ஆற்றில் விழுந்துள்ளது.
இதில் பலியான விஷால் மற்றும் கவுரியின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
தீராத வினை எல்லாம் தீர்த்து வைப்பான் ஆண்டவன் என்று ஒரு பக்கத்தில் சொல்லுவார்கள்.
‘‘எல்லாப் பிரச்சினைகளையும் கடவுளிடம் ஒப்படைத்து விடு – அவர் உன்னைக் கைவிட மாட்டார்!
வாழ்வே மாயம் – எல்லாம் கடவுளின் திருவிளை யாடல் – அவன் ஆபத்பாந்தவன்’’ என்றெல்லாம் சங்கராச்சாரியார் முதல் சவுண்டிகள் வரை உபந்யாசம் கூறுவதில் மட்டும் குறைச்சல் இல்லை.
இதற்கு அடுக்கடுக்கான புராணங்களை எழுதிக் குவித்தது கொஞ்சமா நஞ்சமா?
கஜேந்திர மோட்சம் என்று ஒரு கதை கட்டி வைத்துள்ளனர். பாகவத புராணத்தில் கிறுக்கி வைக்கப்பட்டுள்ளது. தொண்டரடிப் பொடி ஆழ்வார் பாடிய திருமலைப் பாசுரங்களிலும், பாகவத புராணத்தின் எட்டாவது ஸ்கந்தத்தில் – அத்தியாயம் மூன்றில் காணப்படுவதாவது:
‘‘கஜேந்திரன் என்ற ஒரு பெரிய யானை ஒரு காட்டில் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் குளம் ஒன்றில் நீராடச் சென்றது. அங்கு ஒரு முதலை யானையின் காலைப் பிடித்து இழுத்தது. தன் பலங்கொண்டு யானை முதலையின் பிடியிலிருந்து தப்ப முயன்றது. ஆனால் முடியவில்லை.
அந்த நேரத்தில் பகவான் விஷ்ணுவை நினைத்து, ‘‘நாராயணா என்னைக் காப்பாற்று!’’ என்று யானையான கஜேந்திரன் அழைத்தவுடன், விஷ்ணு தனது கருட வாகனத்தில் தோன்றி, தனது சுதர்சன சங்கு சக்கரத்தால், முதலையைக் கொன்று தனது பக்தனான யானையைக் காப்பாற்றினான்’’ என்று புராணம் எழுதி வைப்பது எல்லாம் உண்மைதானா?
ஒரு மிருகத்தைக் காப்பாற்றத் தெரிந்த கடவுளுக்கு மனிதர்களைக் காப்பாற்ற மனம் இல்லையா? கோயில் விழாக்களுக்குச் சென்ற பக்தர்கள் நெரிசலில் சாவதும், விபத்தில் சாவதுமான தகவல்கள் வராத நாளில்லை.
‘பத்ரிநாதா, என்ன இப்படி செய்து விட்டாய்?’ என்று பெற்றோர்களை இழந்து தவிக்கும் சிறு வனுக்கு என்ன பதில்? பக்தர்களே பதில் கூறுங்கள்!
சிந்தியுங்கள் உண்மை விளங்கும்!