உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை வரும் 15ஆம் தேதி சிதம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். தமிழ்நாடு முழுவதும் நவ. 15 வரை மொத்தம் 10,000 முகாம்கள் நடைபெறவுள்ளன. இதில் முதல்கட்டமாக ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை 3,570 முகாம்கள் நடக்கவுள்ளன. இதில் ‘மகளிர் உரிமைத் தொகை’ விரிவாக்க விண்ணப்பம் உள்ளிட்டவை பெறப்படவுள்ளன. இத்திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பா.ஜ.க. அரசு முயற்சி…
– கார்கே தாக்கு
– கார்கே தாக்கு
அரசமைப்புச் சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை, சோசலிசத்தை நீக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டு வருவதாக மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். புவனேஸ்வரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பாஜக ஆட்சியின்கீழ் பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள், இளைஞர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்றார். அரசமைப்பு சட்டத்தை மாற்றும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு இருப்பதாகவும் கார்கே குற்றஞ்சாட்டினார்.
அமைச்சரின் படுக்கை அறையில் கட்டுக் கட்டாக பணம்
மகாராட்டிர அமைச்சர் சஞ்சய் சிர்சாத் (சிவசேனா பிரிவு) சர்ச்சையில் சிக்கியுள்ளார். படுக்கையறையில் பெட் மீது புகைப் பிடித்தபடி அவர் அமர்ந்திருக்க, அருகில் இருந்த பையில் கட்டுக் கட்டாக பணம் இருக்கிறது. இந்த காட்சிப் பதிவை சிவசேனா மூத்த தலைவர் (உத்தவ் பிரிவு) சஞ்சய் ராவத் பதிவிட்டுள்ளார். இதற்கு, அரசியல் எதிரிகள் எனக்கெதிராக செய்யும் சதி என்கிறார் சஞ்சய் சிர்சாத்.
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம்…
அரசு எச்சரிக்கை!
அரசு எச்சரிக்கை!
‘மகளிர் உரிமைத் தொகை’ விரிவாக்க திட்டத்திற்கு ஜூலை 15 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த திட்டத்திற்கான போலி விண்ணப்பங்களை சிலர் விநியோகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. போலி விண்ணப்பங்களை பணம் கொடுத்து வாங்கி மக்கள் ஏமாற வேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சந்தேகங்கள் குறித்து அரசு அலுவலகங்களில் கேட்டு பயன்பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இறந்ததாக கூறப்பட்ட குழந்தை உயிரோடு எழுந்த அதிசயம்!
இறந்ததாக அறிவிக்கப்பட்ட குழந்தை, 12 மணி நேரத்துக்கு பின் உயிரோடு எழுந்த நிகழ்வு வியப்படைய வைத்தது. மகாராட்டிராவில், ஒரு பெண்ணுக்கு 7ஆவது மாதமே குழந்தை பிறந்தது. பிரசவம் நடந்த மருத்துவமனையில் குழந்தையை இரவு முழுவதும் தீவிர கண்காணிப்புப் பிரிவில் (ICU) வைத்து கண்காணித்த மருத்துவர்கள், இறந்து விட்டதாக அறிவித்தனர். குழந்தையை புதைக்க மாஸ்க்கை விலக்கிய போது, அசைவு தெரிந்தது. உடனே குழந்தையை வேறொரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு விசா கட்டணம் உயர்வு
அமெரிக்காவில் ‘பிக் பியூட்டிஃபுல் பில்’ மசோதா சட்டமாகியுள்ளது. இச்சட்டத்தின்கீழ் குடியேற்றம் அல்லாத விசாக்களுக்கு தற்போதுள்ள கட்டணத்திலிருந்து கூடுதலாக 250 டாலர்கள் (சுமார் ரூ.21,400) விசா கட்டணமாக அறிமுகமாகிறது. இது திரும்பப் பெற முடியாத கட்டணம் என்றும், வரும் 2026இல் இக்கட்டணம் அமலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. B-1/B-2, F&M, H-1B,J வகை விசாக்களுக்கு மட்டுமே இக்கட்டணம் பொருந்துமாம்.