விழுப்புரம் ஜூலை 12– விழுப்புரம் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக செஞ்சிக்கோட்டை திகழ்கிறது. சோழர் காலத்தில், ‘சிங்கபுரி’ என்றழைக்கப்பட்டது செஞ்சி. இதுவே திரிந்து செஞ்சி என்று ஆனது. சோழர்கள் பலவீனம் அடைந்தபின் ஆனந்தகோன் என்ற குறுநில மன்னர் கோனார் வம்ச ஆட்சியை செஞ்சியில் 13ஆம் நூற்றாண்டில் நிறுவினார். அதைத் தொடர்ந்து 13ஆம் நூற்றாண்டிலேயே கோன் சமூக ராஜவம்சத்தால் இந்தக் கோட்டை கட்டப்பட்டது. ஆனந்த கோன் எனும் அரசரால் கட்டப்பட்டு, பின்னர் கிருஷ்ண கோன் எனும் அரசரால் விரிவுபடுத்தப்பட்டது.
இந்தக் கோட்டை மூன்று மலைகளை அரணாகக் கொண்டு, சுமார் 13 கிலோ மீட்டர் சுற்றளவைக் கொண்டு, மிகப்பெரிய அரணாக விளங்கியது. செஞ்சிக் கோட்டை மட்டும் 11 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டு அமைந்திருக்கிறது.
செஞ்சிக் கோட்டை சத்ரபதி சிவாஜியால், ‘இந்தியாவின் தலைசிறந்த உட்புக முடியாத கோட்டை’ என்று பாராட்டப்பட்டது. ஆங்கிலேயர்கள் இந்தக் கோட்டையை, ‘கிழக்கின் ட்ராய்’ என்று அழைத்தனர்.
1921ஆம் ஆண்டு, இது முக்கியமான தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப் பட்டது. தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் வந்தது.
இந்த நிலையில் உலக புராதன சின்னமாக செஞ்சிக் கோட்டை அறிவிக் கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் உலக புராதன சின்னங்களில் செஞ்சிக் கோட்டை இடம் பெற்றது.