சென்னை, ஜூலை 12 அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 405 சிறப்பு ஆசிரியர்களுக்கு பொது கலந்தாய்வு மூலம் விருப்ப மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,455 அரசுப் பள்ளிகள் உள்ளன. 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் தளம் வழியாக நடத்தப்படுகிறது.
அதன்படி, நடப்பு 2025-2026-ஆம் கல்வி ஆண்டின் பொது மாறுதலுக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 19-இல் தொடங்கி 25-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. மாநிலம் முழுவதும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்தனர்.
இந்நிலையில், கலந்தாய்வு கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஓவியம், இசை, தையல், உடற்கல்வி போன்ற சிறப்பு ஆசிரியர்களில் விருப்ப மாறுதல் கோரி 1,640 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் கலந்தாய்வு மூலமாக 405 சிறப்பு ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொண்டு வருவதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.