சென்னை, ஜூலை 12 – கீழடியில் 2017 ஆம் ஆண்டு நடை பெற்ற மூன்றாம் கட்ட அகழாய்வு தொடர்பாக அறிக்கை தயாரித்து வழங்குமாறு, ஓய்வுபெற்ற ஆய்வாளர் சிறீராமனுக்கு ஒன்றிய பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் தமிழர்களின் தொன்மையை மூடி மறைக்கும் பா.ஜ.க.வின் உள்நோக்கம் அம்பலமானது.
கண்டனம்
கீழடி அகழாய்வு தொடர்பான ஒன்றிய அரசின் இந்த உத்தரவு, கீழடியின் வரலாற்றுத் தொன்மையை மூடிமறைக்கும் உள்நோக்கம் கொண்டது என்று கண்டனங்கள் எழுந்துள்ளன. 2014 முதல் 2016 வரை முதற்கட்ட ஆராய்ச்சியையும், 2017 ஆம் ஆண்டு முதல் 2023 வரை அடுத்தடுத்த கட்ட ஆராய்ச்சியையும் மேற்கொண்டு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை கண்டெடுத்து, அதுதொடர்பாக ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனின் 982 பக்க அகழாய்வு முடிவுகளை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்த நிலையில், அதனை ஒன்றிய பாஜக அரசு ஏற்க மறுத்து விட்டது.
அமர்நாத் ராமகிருஷ்ணனின் இந்த ஆய்வு முடிவுகள் அறிவியல் பூர்வமாக இல்லை என ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திரன் சிங் செகாவத் கூறினார். ஆய்வு அறிக்கையில் திருத்தங்கள் செய்யுமாறும் ஒன்றிய பாஜக அரசால் அமர்நாத் ராமகிருஷ்ணன் நிர்ப்பந்திக்கப்பட்டார்.
பா.ஜ.க. அரசின் உள்நோக்கம்
மாறாக, கீழடியில் தனது தலை மையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வுகள், அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளதால், கண்டுபிடிப்புகளை மாற்றங்கள் செய்ய முடியாது என ஒன்றிய அரசிடம் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெளிவாக தெரிவித்து விட்டார். இந்தப் பின்னணியில் தான், 2017 ஆம் ஆண்டு, அகழாய்வுக்கு தலைமையேற்று, ‘கீழடியில் ஒன்றுமே கிடைக்கவில்லை’ என்று கூறி, அந்த ஆண்டே ஒட்டுமொத்த அகழாய்வு குழிகளையும் மூடிவிட்டுச் சென்ற தொல்லியல் அதிகாரி சிறீராமனிடம், ஒன்றிய பாஜக அரசு தற்போது புதிதாக அறிக்கை கேட்டுள்ளது. இது, கீழடியின் தொன்மையை மூடி மறைக்கும் உள்நோக்கம் கொண்டது என்று கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஒன்றிய பாஜக அரசின் இந்த நட வடிக்கையினால், தமிழர்களின் தொன்மையை மூடிமறைக்கும் ஒன்றிய பாஜக அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது என்று தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்ட னம் தெரிவித்தள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தமது சமூகவலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:
“தமிழர் விரோதப் போக்கைத் துளியும் நியாய உணர்வு இல்லாமல் கையாண்டு வரும் ஒன்றிய பாஜக அரசுக்கு எனது வன்மையான கண்ட னங்கள். கீழடி விவகாரத்தில் தொடர்ந்து தமிழர்களின் தொன்மையை மூடி மறைக்க உள்நோக்கத்துடன் ஒன்றிய அரசு செயல்பட்டு வருவதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தினார்.
தக்க பாடம் புகட்டக் காத்திருக்கின்றார்கள்
கீழடியில் கிடைத்த தொல் பொருட்கள் எல்லாம், தமிழ்நாடு அரசின் வாயிலாக உலகத் தரத்திலான அருங்காட்சி யகம் அமைக்கப்பட்டுப் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. தற்போது கீழடி குறித்து உண்மைக்குப் புறம்பான கருத்துகளைத் தெரி வித்த ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் மூலம் மூன்றாம் கட்ட அகழாய்வு குறித்து, ஒன்றிய அரசு கருத்துக் கேட்டிருப்பது ஒன்றிய அரசின் உள் நோக்கத்தை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில், தமிழ் நாட்டு மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தல் மூலம் மீண்டும் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கின்றார்கள்” என தெரிவித்துள்ளார்.