டில்லியைச் சேர்ந்த ஒரு தனியார் அமைப்பு வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவலின்படி, இந்தியாவில் இணையவழி சூதாட்டம் காரணமாக ஆண்டுக்கு 1700-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இந்தத் தற்கொலைகளில் பல, குடும்பப் பிரச்சினை என தவறாகப் பதிவு செய்யப்படுவதாகவும், உண்மையில் இணையவழி சூதாட்டத்தில் சொத்து, நகைகள், பணம் ஆகியவற்றை இழந்து கடனில் மூழ்கி வேறு வழியின்றி உயிரை மாய்த்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது. இணையவழி சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலைகள் குறித்த செய்திகள் நாள்தோறும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெளியாகி வருகின்றன.
இத்தகைய ஆபத்தான இணையவழி செயலிகளுக்கு விளம்பரம் செய்யமாட்டோம் எனப் பல திரை பிரபலங்கள் உறுதியான நிலைப்பாடு எடுத்துள்ள நிலையில், மேனாள் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல ஹிந்தி நடிகருமான “பரேஷ் ராவல்”, புதிதாக வெளிவந்துள்ள இணையவழி சூதாட்ட நிறுவனம் ஒன்றிற்கு விளம்பரம் செய்துள்ளார்.
பரேஷ் ராவல் 2014 முதல் 2019 வரை பாஜக சார்பில் மக்களவை உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் தேசிய நாடகக் கலைப் பள்ளியின் தலைவராகவும் உள்ளார்.
சமூகத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பதவியில் இருப்பவர், ஆபத்தான இணையவழி சூதாட்டத்திற்கு விளம்பரம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விளம்பரம், இணையவழி சூதாட்டத்தால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு மேலும் வேதனையை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.