வரதட்சணை கொடுமை காரணமாக மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்குகளில் கணவர் அல்லது கணவர் வீட்டார்களுக்கு தண்டனை அளிக்கும்போது எத்தகைய நெறிமுறைகளை நீதிமன்றம் பின்பற்ற வேண்டும்?
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 304(B) மற்றும் 306 ஆகியவற்றின் கீழான குற்றச் செயல்களை மெய்பிப்பதற்கு எதிரி தன்னுடைய மனைவியை தற்கொலை செய்வதற்கு தூண்டியுள்ளார் என்ற சங்கதியை அரசுத் தரப்பில் கட்டாயமாக நிரூபிக்க வேண்டும்.
உச்சநீதிமன்றம் கிஸோரிலால் Vs மத்தியப் பிரதேச அரசு (AIR-2007-SC-2457) என்ற வழக்கில், தற்கொலைக்கு கணவர் தூண்டினார் என்கிற செயலை நேரடி அல்லது மறைமுக செயல்பாடுகளை கொண்டு அரசுத் தரப்பு நிரூபிக்க வேண்டும் என்றும் மனைவியை கணவர் கொடுமைப்படுத்தினார் என்ற சங்கதியை மட்டும் நிரூபித்தால் போதுமானதல்ல என்று தீர்ப்பு கூறியுள்ளது.
கேடயம் மட்டுமே
அதேபோல் உச்சநீதிமன்றம் சுசில் குமார் Vs இந்திய அரசு (AIR-2005-SC-3100) என்ற வழக்கில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498(A)யின் நோக்கமானது வரதட்சணை கொடுமையை வேரோடு ஒழிக்க வேண்டும் என்பது தான் அந்த பிரிவை ஒரு கேடயமாகத்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர அதனை ஒரு ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
அதேபோல் உச்சநீதிமன்றம் சத்தார் சிங் Vs அரியானா மாநில அரசு (AIR-2004-SC-2570) என்ற வழக்கில் ஒரு சாட்சிக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்திராத சங்கதிகள் குறித்து அளிக்கப்பட்ட சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு தண்டனை அளிக்கக்கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
ஆதாரம் தேவை
அதேபோல் உச்சநீதிமன்றம் M. சீனிவாசலு Vs ஆந்திர மாநில அரசு (AIR-2007-SC-3146)” என்ற வழக்கில், இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 113(B)இல் கூறப்பட்டுள்ள அனுமானத்தை, வரதட்சணை இறப்புகள் வழக்கில், வரதட்சணை கொடுமைக்கு அந்த பெண் உள்ளாக்கப்பட்டுள்ளார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருந்து அது மெய்பிக்கபட்டிருந்தால் மட்டுமே அந்தப் பிரிவின் கீழான அனுமானத்தை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.