மாலதி முர்மூ பீகார் மாநிலம் புருலியாவில் உள்ள சைத்தோ என்ற பழங்குடியின கிராமத்தில் கல்லூரி வரை படித்த ஒரே பெண்.
தன் வீடே பள்ளி
இவர் வசிக்கும் கிராமத்திலிருந்து 45 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் எந்த பள்ளியும் இல்லாத நிலையில் தனது மண் வீட்டையே பள்ளியாக்கிவிட்டார்.
தனது கிராமம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த 23 பிள்ளைகளுக்கு ஆரம்பக்கல்வி போதித்து வருகிறார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, “நான் கல்லூரி முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறேன். எனக்கு வேலை என்பது வெளியூரில் தான் கிடைக்கும். இந்த நிலையில் நான் படித்த ஊரில் ஆரம்பக் கல்வி இல்லை. இதனால் தூரமுள்ள பள்ளிக்குச் சென்று கல்வி பயில பெண் பிள்ளைகள் அச்சப்படுகிறார்கள். மேலும் உள்ளூரில் பள்ளி அமைக்க அரசும் தனியார் அமைப்பும் முன்வரவில்லை. எனது பெற்றோர் என்னை உறைவிடப் பள்ளிக்கு குழந்தைப் பருவத்திலேயே அனுப்பிவிட்டு அவர்கள் வெளியூர் சென்று வேலை செய்தனர். ஆனால் இங்குள்ள பிள்ளைகளின் நிலை அப்படி இல்லை.
மழை வந்தால் மட்டுமே விடுமுறை
ஆகையால், நான் எனது நண்பர்களின் உதவியோடு பாடப் புத்தகம், எழுதுபலகை உள்ளிட்டவற்றை பெற்று எனது வீட்டிலேயே பள்ளி போன்ற ஓர் அமைப்பை உருவாக்கி பாடம் சொல்லித்தருகிறேன். மழை வந்தால் மட்டும் தான் பள்ளி விடுமுறை. காரணம் எனது வீடு முழுவதும் மழைநீர் ஒழுகும்” என்று சிரித்துகொண்டே கூறுகிறார்.
ஒரு சமுதாயம் முன்னேற வேண்டுமானால், அதன் பெண்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று பெரியார் வலியுறுத்தினார். பெண்களின் பங்களிப்பு இல்லாமல் எந்தவொரு சமுதாயமும் முழுமையான வளர்ச்சி அடைய முடியாது என்ற தந்தை பெரியாரின் கூற்றுக்கு சான்றாக பீகார் மாநிலத்திலிருந்து ஒருமுகம்!