ஊர் பஞ்சாயத்து கூடி அப்பாவிக் குடும்பத்தையே எரித்துக்கொன்ற கொடூரம் நிகழ்ந்தும் ஊடகங்கள் சாதாரண நிகழ்வாக கடந்து செல்வது முறையா?
08.07.2025 அன்று இந்தியாவையே உலுக்கிய ஒரு நிகழ்வு நடந்தது. இது தொடர்பாக எந்த ஒரு முக்கிய நாளிதழும் துளி செய்தியைக் கூட வெளியிடவில்லை.
பீகாரில் உள்ள புருனியா மாவட்டத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவு உள்ள ஒரு கிராமத்தில் ‘சூனியக்காரர்கள்’ என்று கூறி 3 பெண்கள், 2 ஆண்களை மிகவும் கொடூரமாக சித்திரவதை செய்து உயிரோடு எரித்துக் கொலை செய்தனர்.
உயிரோடு எரியுங்கள்
புருனியா மாவட்டத்தில் உள்ள பெட் என்ற கிராமத்தில் உள்ள சிலபெரிய மனிதர்கள் வீட்டின் முன்பு தலைமுடி மற்றும் காய்ந்த பூக்கள் அடிக்கடி காணப்பட்டதாம். இது தொடர்பாக முதலில் பஞ்சாயத்து கூட்டப்படுகிறது, பஞ்சாயத்தில் குறிப்பிட்ட குடும்பத்தினரை உயிரோடு எரிக்கவேண்டும் என்று உத்தரவிடுகிறார்கள். சுமார் 300 பேர் அடங்கிய கும்பல் இரவு 9 மணிக்கு குறிப்பிட்ட குடிசைக்குள் புகுந்து 50 வயதான பாபுலால் உராவ், 48 வயதான சீதா தேவி, மகன் மஜீத் குமார், அவரது மனைவி ராணி தேவி மற்றும் பாபுலால் உராவின் தாய் 65 வயதான காதோ தேவி ஆகியோரை கம்பு, சணல் தண்டு மற்றும் வயர்களைக் கொண்டு அடிக்கின்றனர். பெண்களின் தலைமுடியைப் பிடித்து தரையோடு இழுத்துச் செல்கின்றனர்.
இரண்டு ஆண்களை டிராக்டரின் பின்னால் கட்டி இழுத்துச்செல்கின்றனர். பின்னர் சுமார் 10 மணி அளவில் ஊருக்கு மத்தியில் ஒரு கம்பை நட்டு அய்ந்துபேரையும் அந்தக்கம்பைச் சுற்றிலும் கட்டி அவர்கள் மீது கம்பு வைக்கோல் மற்றும் காய்ந்த சுள்ளிகளைப் போட்டு எரித்துக் கொன்றனர்.
எரித்துக் கொன்ற பிறகு, அந்த உடல்கள் ஒரு டிராக்டரில் ஏற்றப்பட்டு, 2 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு குளத்தில் வீசப்பட்டன. அய்ந்து உடல்களையும் கொண்டு சென்ற டிராக்டருக்கான வாடகை ரூ.400 கொடுக்கப்பட்டது.
அதன் பிறகு 300 பேர் ஊரை விட்டு ஓடிப்போனார்கள். அதாவது இந்தக் கொடுமையைச் செய்தவர்கள் தாங்கள் குற்றம் செய்துவிட்டோம் என்று உணர்ந்து ஓடி ஒளிந்துகொண்டனர். காவல்துறை அவர்களைத் தேடி வருகிறது.
இது பீகாரின் ஏதோ ஒரு மூலையில் மட்டும் நடந்த கொடூரம் என்று மட்டும் நினைக்க வேண்டாம். நகரங்களிலும் மாந்திரீகம் மற்றும் மூடநம்பிக்கைகள் தீவிரமாகப் பரப்பப்படுகின்றன. நடுத்தர வர்க்கம் இதில் மிகவும் சிக்கியுள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் கூறுவது என்ன?
அரசமைப்புச் சட்டத்தின் சரத்து 51A(h) ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதும், சமூகத்தில் பகுத்தறிவை மேம்படுத்துவதும், அடிப்படைக் கடமை என்று கூறுகிறது. இந்த அரசமைப்புச் சரத்தின்படி, புருனியா மாவட்ட நிர்வாகமும், சமூகமும் அரசமைப்புச் சட்டத்தைத் தோல்வியடையச் செய்துள்ளன.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மூடநம்பிக்கையும் மத அடையாளத்தின் ஒரு பகுதியாக மாறி, அன்றாட நடவடிக்கைகளாகிவிட்டன. இன்றைய இந்தியாவில் மூடநம்பிக்கையை எதிர்ப்பது மதத்தை எதிர்ப்பதாகக் கருதப்படலாம். மேலும் வெறித்தனமான கூட்டம் இதற்காக உங்களைத் துரத்தலாம். மூடநம்பிக்கைகளைப் பரப்பும் அனைத்து சாமியார்களையும் பிரதமர் முதல் முதலமைச்சர்கள் வரை தாராளமாக சந்திக்கின்றனர். குடியரசுத் தலைவர் கூட அந்தச் சாமியார்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இதன் காரணமாக சாமியார்களுக்குப் பாதுகாப்பு கிடைத்துள்ளது.
ஊடகங்கள் துணை போவதா?
இதனால் ஊடகங்களும் இப்போது வெளிப்படையாகவே மாந்திரீகத்தைப் பற்றிப் பிரச்சாரம் செய்கின்றன. ஒவ்வொரு நாளும் செய்தித் தாள்களிலும், வலைத்தளங்களிலும் தீய சக்திகளிலிருந்து விடுபடுவதற்கான விளம்பரங்கள் வெளியாகின்றன.
“பூதங்கள், பேய்கள், சூனியக்காரிகள் உங்கள் வாழ்க்கையை நரகமாக்கினால், இந்த வழிகள் மூலம் தீய சக்திகளிலிருந்து விடுபடுங்கள்” என்று ஹிந்தி நாளிதழ்களில் தலைப்புச் செய்தியே வருகிறது.
ஊடகங்கள் “இவையெல்லாம் முட்டாள்தனம்” என்று கூறியிருக்க வேண்டும். இதுபோன்ற மூடநம்பிக்கை களிலிருந்து விடுபட, அரசமைப்புச் சட்டத்தைப் படியுங்கள், அறிவியலைப் புரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும்.
‘நவபாரத் டைம்ஸ்’ என்ற ஹிந்தி நாளிதழ், “உங்கள் குழந்தைக்கும் திருஷ்டி படலாம்” என்று ஒரு தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது
ஊடகங்களும் மூடநம்பிக்கைகளை ஊக்குவிப்பதில் தீவிரப் பங்காற்றியுள்ளன. செய்தியாளர் அறையில் மூடநம்பிக்கைகள் நாள்தோறும் ஒரு முக்கியமான செய்தியாகவே உருவாக்கப்பட்டு வருகின்றன. தமிழ் நாளிதழ்களில் வரும் ஆன்மிக பகுதியைப் படித்தாலே தெரியும். பரிகாரங்களைச் சொல்லும் பக்கங்கள் நிரம்பி வழிகின்றன.
பெண்களுக்குப் பாதிப்பு
இங்கு பெண்கள் தான் சூனியக்காரி என்றும், அவர்கள் தான் சூனியம் செய்வதாகவும், அபசகுனமானவர்கள் என்றும் வெளிப்படையாகவே பேசப்படுகின்றன.
குறிப்பாக கைம்பெண்கள், கணவனால் கைவிடப் பட்டவர்கள், திருமணமாகாமல் தனியாக இருக்கும் முதிய வயது பெண்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
ஆந்திராவில் 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் கருப்பாக உள்ள பெண்கள் அபசகுனமானவர்கள் என்று 47 சதவீத மக்கள் நினைக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று மூடநம்பிக்கைகளைப் பரப்பும் சாமியார்கள், மற்றும் மந்திரம் தந்திரம் அறிந்தவர்கள் என்ற பெயரில் யூடியூபில் வந்து பேசுகிறார்கள் இதைக் கோடிக்கணக்கானோர் பார்க்கின்றனர். ஆகவே பீகாரின் ஏதோ ஒருபகுதியில் மூடநம்பிக்கை சம்பவம் நடந்தது என்று மட்டும் எண்ண வேண்டாம்.
இந்த மூடநம்பிக்கை பரப்பும் சாமியார்கள் உள்ளிட்ட நபர்களால் உள்ளுக்குள் கனன்றுகொண்டு இருக்கும் நெருப்பு எப்போதும் தீப்பிடிக்கலாம்.
இந்த வகையான மூடநம்பிக்கைகளைப் பரப்பும் எத்தனை காட்சிப் பதிவுகளை அரசு நீக்கியுள்ளது? அரசமைப்பின் சரத்து 51A(h) அய்ப் பின்பற்றும் பொறுப்பு ஒன்றிய – மாநில அரசுகளுக்கும் உண்டு.
ஆனால், இத்தகைய காட்சிப் பதிவுகளை நீக்குமாறு அவை கேட்காது. ஏனென்றால், இது மதத்தின் ஒரு பகுதியாக மவுனமாக ஊக்குவிக்கப்படுகிறது, இதுவே அவர்கள் ஆட்சிக்கு வரப் பயன்படுத்தும் அரசியல் ஆகும்.
எதிர்கட்சித் தலைவரின் அறியாமை
தமிழ்நாட்டில் முக்கிய எதிர் கட்சித் தலைவரும், மேனாள் முதலமைச்சருமான ஒருவர் கோவில்களின் பணத்தில் பள்ளி கல்லூரி கட்டுவதை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பகுத்தறிவால் பக்குவப்பட்ட தமிழ்நாடே இதைக் கேட்டு அதிர்ந்து விட்டது. புருனியா நிகழ்விற்கும், இவரது பேச்சிற்கும் மறைமுக தொடர்பு உள்ளது. அதாவது அங்குள்ள மக்களைப் போல் தமிழ்நாட்டு மக்களும் படித்து பகுத்தறிவோடு சிந்திக்காமல், மூடநம்பிக்கைகளில் மூழ்கி இருக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே இவ்வாறு பேசுகிறார் போலும்.
இன்று, மதத்தின் பெயரால் நடக்கும் ஆட்சி அரசமைப்பின் அடிப்படைக் கொள்கைகளை அமல்படுத்துவதை கடினமாக்கியுள்ளது. அதன் வெளிப்பாடு தான் ஒரு மேனாள் முதலமைச்சர் கோவில் பணத்தில் பள்ளி கல்லூரி கட்டுவதா? என்கிறார். அவரே முதலமைச்சராக இருந்த போது கோவில் சார்பில் கட்டப்பட்ட கல்லூரி கட்டடத்தை திறந்து வைத்துள்ளார்.
பகுத்தறிவிற்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள்
புனேவைச் சேர்ந்த நரேந்திர தபோல்கர், கோலப்பூரைச் சேர்ந்த கோவிந்த் பன்சாரே, கருநாடகாவைச் சேர்ந்த கல்புர்கி, கவுரிலங்கேஷ் ஆகியோர் ஏன் கொலை செய்யப்பட்டார்கள்?
இந்தக் கேள்விக்கான விடை கிராமங்களில் மட்டுமல்ல பெருநகரங்களில் கூட மூடநம்பிக்கை தலைவிரித்தாடுகிறது என்பதற்கு சான்றாக உள்ளது.
2008ஆம் ஆண்டு கோவாவில் உள்ள ஸநாதன் சன்ஸ்தா அமைப்பின் அழைப்பின்பேரில் மும்பை மாநகராட்சி ஊடகவியலாளர்கள் சார்பில் அங்கு சென்றேன்.
அங்கே பேய்கள் பயன்படுத்திய கைப்பேசி, பில்லி சூனியத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொம்மைகள், பொட்டு வைக்காத பெண்களால் ஏற்படும் கெட்ட நிகழ்வுகள் என பலவகைகளில் காட்சிப்பொருட்களாக வைத்திருந்தனர்.
இந்த ஸநாதன் ஸன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, மற்றும் கல்புர்கி கொலைக்குக் காரணமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிய இவர்கள் அனைவருமே மத விரோதிகள் என முத்திரை குத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
ராப்ரிதேவி
இந்தியாவிலேயே ஒரு பெண் முதலமைச்சர் துணிவோடு மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டம் கொண்டுவந்தார். பீகார் மாநிலத்தில் ராப்ரி தேவி முதலமைச்சராக இருந்தபோது எதிர்கட்சியான பாஜகவின் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றி வைத்தார். 1999 ஆம் ஆண்டு இந்தச் சட்டம் இயற்றப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்டன, ஆனாலும் இத்தகைய சம்பவங்கள் நிற்கவில்லை. லைவ் லா (Live Law) என்ற இணையதளம் மூடநம்பிக்கை ஒழிப்பிற்கு எதிராகச் சட்டம் இயற்றிய முதல் மாநிலம் பீகார் என்று குறிப்பிட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு நரேந்திர தபோல்கரின் கனவான மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை மகாராட்டிரா அரசு கொண்டுவந்து விட்டது. ஆனால், பாஜக அரசு அந்தச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைச் செய்து சட்டத்தின் நோக்கத்தையே நீர்த்துப் போகச் செய்துவிட்டது. விளைவு இன்று மும்பை, புனே உள்ளிட்ட பல பெரிய நகரங்களில் எங்கு பார்த்தாலும் பாபாக்களின் விளம்பரங்கள், பில்லி சூனியம் எடுக்கவேண்டுமா? வருமானம் சிறக்கவேண்டுமா? போன ஜென்ம பாவம் விலகவேண்டுமா? போன்ற விளம்பரங்கள் அதிகம் வந்துவிட்டன.
இந்த இரண்டு மாநிலங்களும் கொண்டுவந்த சட்டம் பெயரளவில் தான் சட்டநூல்களில் உள்ளது.
சட்டத்தைக் காப்பாற்றும் கடமையில் இருக்கும் நீதித்துறையும், காவல்துறையும் பில்லி சூனியம் காத்து கருப்பு என்று அதற்குப் பரிகாரம் தேடிக்கொண்டுதான் உள்ளன.
ஆவி சுற்றுவதாகப் புரளி கிளப்பினர்
2014ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரிவா மாவட்ட தலைமைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஊடகவியலாளர் பகுதி மூடப்பட்டது.
காரணம் தற்கொலை செய்துகொண்ட ஒருவரின் ஆவி அங்கு சுற்றுவதாக யாரோ கிளப்பி விட, சாமியார்களை அழைத்து வந்து பூஜைகள் எல்லாம் செய்து பார்த்தார்கள். ஆனாலும் ஆவி விடவில்லையாம். ஆகையால் அந்த அறையையே மூடிவிட்டார்கள். இது தொடர்பாக கேட்கப்போனால் ‘அறை பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது’ என்கிறார்கள்.
பேய்களின் சேட்டையாம்!
இதே போல் ஜார்கண்ட் மாநிலம் ஜுக்கிசாலா என்ற ஊரில் உள்ள காவல் நிலையத்தை சரியாக இரவு 10 மணிக்கு மூடிவிட்டுச் சென்றுவிடுவார்களாம். காரணம் 11 மணியிலிருந்து காலைவரை அங்கு பேய் நடமாட்டம் இருக்குமாம்.
இது தொடர்பாக அக்காவல் நிலைய ஆய்வாளர்
எஸ்.போஸ்கே கூறும் போது, “திடீரென்று தொலைபேசி ரிங் அடிக்கும். எதிர்முனையில் மிகவும் பயங்கரமான சத்தம் கேட்கும், திடீரென உள் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்கும், சென்று பார்த்தால் யாரும் இருக்கமாட்டார்கள். பிறகு கழிப்பறைகளில் அனைத்து குழாயும் திறக்கப்பட்டு தண்ணீர் வழியும், மின்விளக்கு எரிந்து மின்விசிறி தானாகவே ஓடும். இது எல்லாம் பேயின் செயல்பாடுகள். ஆகவே தான் நாங்கள் இரவு 10 மணிக்குப் பிறகு சென்றுவிடுகிறோம்” என்றார்.
மூடநம்பிக்கை: இந்தியாவின் கசப்பான உண்மை
மூடநம்பிக்கைகளைப் பரப்பும் சாமியார்களை இந்தியாவின் “எதிர்காலத்தை கணிப்பவர்கள்” என்று மக்கள் கருதுகிறார்கள். ஒரு முன்னணி தமிழ் நாளிதழில் புதுவீடு கட்டுவது தொடர்பாக ஒரு கட்டுரை. “சுமங்கலியான வாழ்க்கையைப் பூர்ணமாக்கிய மங்கலகரமான பெண் வந்து செங்கலை எடுத்துகொடுத்தால்…” என்று எழுதுகிறார்கள். இதற்கு எதிர்பதமாக உள்ள பெண்களை அமங்கலிகள் என்று, அவளை அடித்து, உதைத்து, எரித்துக் கொல்வது இந்தியாவின் பல மாநிலங்களில் ஒரு கசப்பான உண்மை.
செய்தித்தாள்களில் இதுபோன்ற செய்திகள் வெளிவந்தாலும், வளர்ச்சி பற்றிய பெருங்கதைகளுக்கு மத்தியில் இவை விரைவாக மறக்கப்பட்டுவிடுகின்றன.
தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் (NCRB) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் 2000 முதல் 2023 வரை மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சூனியக்காரிகள் என்று சந்தேகப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
பீகார், ஜார்க்கண்ட், மகாராட்டிரா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், அசாம், குஜராத், கருநாடகா என்று பல மாநிலங்களிலும் சூனியக்காரிகள் என்று சந்தேகப்பட்டு பெண்கள் கொல்லப்படும் கொடூர நிகழ்வுகள் இன்றும் நடக்கின்றன.
நிரந்தர் அறக்கட்டளையின் தரவுகளின்படி, பீகாரில் குறைந்தது 75,000 பெண்கள் சூனியக்காரிகள் என்று முத்திரை குத்தப்படும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர்.
ஒவ்வொரு கிராமத்திலும் ஒன்று அல்லது இரண்டு பெண்கள் சூனியக்காரிகள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளனர்.
பெண்ணிய இயக்கங்களின் தோல்வி
பெண்களுக்கு எதிரான, குறிப்பாக தலித் மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு எதிரான இதுபோன்ற வன்முறைகள் பற்றிய விவாதங்கள் தற்போது பெரும்பாலும் காணாமல் போயுள்ளன. பெண்ணிய அமைப்புகள் இது குறித்துப் பேசவே மறுக்கின்றனர்.
சூனியம் என்ற பெயரில் அடித்துக்கொலை செய்யப்படும் பெண்களில் 97% பெண்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்களில் 73% பெண்கள் ஒருபோதும் பள்ளிக்குச் செல்லாதவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
56% பெண்கள் ‘சூனியக்காரி’ என்று குற்றம் சாட்டப்பட்ட போது ஏதேனும் ஒரு தலைமைப் பதவியில் இருந்தனர். அல்லது நிலம் தொடர்பான சச்சரவில் சிக்கி இருந்தனர். ஆக, சூனியக்காரி என்ற முத்திரை குத்தப்பட்டு சுதந்திரமாக இயங்கும் பெண்களும் பழிவாங்கப்படுகின்றனர்.
மேலும் சில புள்ளி விவரங்களில் கொலைக்குப் பின்னால் உயர்ஜாதி ஆண்கள் குழு இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
‘சூனியக்காரி’ என்று முத்திரை குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்களின் பட்டியலில் இதுவரை எந்த ஓர் உயர்ஜாதிப் பெண்ணும் இல்லை என்பது வியப்பான செய்தியாக உள்ளது.
கடந்த மூன்று மாதங்களில், கயாவில் இரண்டு கொலைகள், அசாமில் ஒரு கொலை, சத்தீஸ்கரில் ஒரு கொலை நடந்துள்ளது. அரியானா மாநிலம் ரோத்தாகில் ஒரு பெண் கொல்லப்பட்டார். இப்போது புருனியாவில் ஒன்று.
இது வீட்டின் நான்கு சுவர்களுக்குள் நடக்கும் வன்முறை அல்ல. சூனியக்காரி என எந்தப் பெண் துன்புறுத்தப்படுகிறார் என்பது கிராமத்தை சுற்றியுள்ளவர்களுக்குத் தெரியும்.
யாருடைய வீட்டின் முன்பு காற்றில் அடித்துவரப்பட்ட பூக்களும், குப்பைபோட்ட தலைமுடியும் கிடக்கிறதோ – உடனடியாக இதற்கு காரணம் அந்த ஊரில் உள்ள பெண் சூனியக்காரிதான் என்று கூறி கொலை செய்யும் நிகழ்வும் சாதாரணமாக நடக்கும் ஒன்றாகிவிட்டது.
மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்றப்பட்டு சரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பில்லி சூனியம் என்கிற பெயரால் படுகொலைகள் நிகழ்த்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் யுகத்தில் சூனியத்தை நம்பும் இந்த அறிவு சூன்யங்களுக்கு பகுத்தறிவை ஊட்டுவதுதான் இவற்றுக்குத் தீர்வாக அமையும்.