குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் முதல் நாளில் பெரியார் ஒரு அறிமுகம், கடவுள் மறுப்புத் தத்துவம் விளக்கம், சமூகநீதி வரலாறு உள்ளிட்ட 8 தலைப்புகளில் வகுப்புகள் நடைபெற்றன!

Viduthalai
4 Min Read

எழுத்தாளர் அருணகிரி, ‘பெரியார் உலகம்’ நன்கொடையாக ரூபாய் 5,000/- திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜிடம் வழங்கினார். உடன் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன். (குற்றாலம், 10.07.2025)

தென்காசி, ஜூலை 11 பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை தவிர மற்ற கொள்கைகள் நிறைவேற வேண்டுமானால், கடவுள் மறுப்புக் கொள்கை மிகமிக அவசியம். ஏனென்றால், அதுதான் எல்லா தடைகளுக்கும் மூல காரணம் என்று விளக்கி குற்றாலம்  பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் வகுப்புகள் நடந்தன.

தென்காசி மாவட்டம்   குற்றாலத்தில் உள்ள வள்ளல் வீகேயென் மாளிகையில் ஜூலை 10,11,12,13 ஆகிய நான்கு நாட்கள் நடைபெற்று வரும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறையின் முதல் நாளில் 8 வகுப்புகள் இடம் பெற்றன. இந்நிகழ்வில் 82 இருபால் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மாணவர்கள் 58, மாணவிகள் 24 பேர் ஆவர். தொடக்கத்தில் பயிற்சி முகாமிற்கான பதிவுகள் நடைபெற்றன. தூத்துக்குடி மாவட்டக் காப்பாளர் மா.பால் இராசேந்திரம்  ஒருங்கிணைத்தார். மாணவர்களுக்கு கையேடு, அடையாள அட்டை, எழுதுகோல் ஆகியவை வழங்கப்பட்டன.

தலைப்புகள் பலவற்றின்படி வகுப்புகள்

தொடக்க விழாவுக்குப் பிறகு, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், “பெரியார் ஒரு அறிமுகம்”, பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், “பெரியார் நமது அடையாளம்”, பேராசிரியர் நம்.சீனிவாசன், “தமிழர் தலைவர் ஆசிரியரின் படைப்புகள்”, முனைவர் அதிரடி க.அன்பழகன், “கடவுள் மறுப்புத் தத்துவம் விளக்கம்”, ஊடகவியலாளர் மா.அழகிரிசாமி, “தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு”, கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, “சமூகநீதி வரலாறு – தந்தை பெரியார் காலம் வரை”, பொதுச்செயலாளர், முனைவர் துரை.சந்திரசேகரன், “புராண இதிகாசப் புரட்டு”, துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், “செயற்கை நுண்ணறிவு” ஆகிய தலைப்புகளில் பாடம் எடுத்தனர்.

மந்திரமா – தந்திரமா? – இன எழுச்சிப் பாடல்கள்

ஒவ்வொரு வகுப்பிற்கு இடையிலும், திண்டுக்கல் ஈட்டி கணேசன் மந்திரமா? தந்திரமா? ஒரு அறிவியல் விளக்க பூர்வ நிகழ்வு, திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த, கு.ஈகவரசன் பெரியார் பற்றிய இன எழுச்சிப் பாடல்களையும், பயிற்சிப்பட்டறையின் ஒருங்கிணைப்பாளரும், மாநில ஒருங்கிணைப்பாளருமான இரா.ஜெயக்குமார் தலைமையில் தோழர்கள் ‘‘அய்யய்யய்ய என்னங்க அநியாய சாமிங்க” பாடலையும் பாடினர். ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும் நடந்த பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு உரிய பதில்கள் பெறப்பட்டன. கேள்விகளுக்கு சரியான பதில்களைச் சொன்ன, சத்யபிரியன், கனிமொழி, விஜயலட்சுமி ஆகியோருக்கு பெருவளப்பூர் சித்தார்த்தன் புத்தகங்களை பரிசாக வழங்கினார். பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பேராசிரியர் நம்.சீனிவாசன், ஊடகவியலாளர் மா.அழகிரிசாமி, வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, துணைப் பொதுச் செயலாளர் ஆகியோர்  பிரின்சு என்னாரெசு பெரியார் பி.பி.டி முறையில் படக்காட்சிகளுடன் கற்றுக்கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பெரியார் உலகம், பெரியார் பற்றிய அனிமேசன் சிறப்புக் காணொலி ஆகியவை மாணவர்களுக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டன. 35 நிமிடம் வகுப்பாசிரியர் பாடம் நடத்த வேண்டும். அடுத்த 10 நிமிடம் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது,  பாடம் எடுக்க வருகின்ற வகுப்பாசிரியர்களின் சிறப்புகளை பட்டியலிட்டு மாணவர்களுக்கு வகுப்பாசிரியர்கள் மீதான மரியாதையை உண்டாக்குவது உள்ளிட்ட பயிற்சி முகாமின் கட்டுப்பாடுகளை மாணவர்களை கடைப்பிடிக்க வைக்கும் பணிகளை பயிற்சிப் பட்டறை ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் மேற்கொண்டார்.

தமிழ்நாடு

வகுப்புகளில் விளக்கம்

மற்ற உயிரினங்கள் தன் அறிவை அடுத்த தலைமுறைக்கு விட்டு விட்டுப் போகாது. மனிதன் மட்டும்தான் எழுத்து மூலம் விட்டு விட்டுப் போகிறான். ஆகவே மாணவர்களே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்; எல்லா தரப்பினரும் வாசிக்கக் கூடிய புத்தகம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய, “வாழ்வியல் சிந்தனைகள்” நூல்; தந்தை பெரியாரின் எல்லா கொள்கைகளையும் ஏற்றுக்கொள்கிறவர்கள் கடவுள் மறுப்பு மட்டும் வேண்டாம் என்கிறார்கள். கடவுள் மறுப்பு தவிர பெரியாரின் மற்ற கொள்கைகள் நிறைவேற வேண்டுமானால் கடவுள் மறுப்புக் கொள்கை அவசியம். ஏனென்றால் அதுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணம்; சமவாய்ப்பு என்பது எல்லோருக்கும் சமமான வாய்ப்பு வழங்குவது. அது சரியல்ல, சமூக பொருளாதார நிலைகளுக்கேற்ப சம உரிமை வழங்கப்பட வேண்டும்; சகோதர துரோகம் + விபச்சாரம் = இராமாயணம்; விபச்சாரம் + பங்காளிச் சண்டை = மகாபாரதம் போன்ற கருத்துகள் நடைபெற்ற வகுப்புகளில் எடுத்தாளப்பட்டன.

கலந்து கொண்டோர்

கழகப் பொருளாளர் வீ.குமரேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் இல.திருப்பதி, பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் கே.டி.சி.குருசாமி, தெனகாசி மாவட்டக் காப்பாளர் சீ.டேவிட் செல்லத்துரை, தென்காசி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முருகன், தென்காசி மாவட்ட துணைச் செயலாளர் அ.சவுந்திரபாண்டியன், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, ஒரத்தநாடு திருநாவுக்கரசு, கவிஞர் பொற்செழியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன், மாவட்டச் செயலாளர் கை. சண்முகம், மதுரை சுப்பைய்யா, ராக்கு தங்கம் மற்றும் கழகத் தோழர்கள் பயிற்சி முகாம் சிறக்க   பணியாற்றினர். காலை 10 மணிக்குத் தொடங்கிய முதல் நாள் வகுப்புகள் இரவு 7:30 மணியளவில் நிறைவு பெற்றது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *