பெண்களை இழிவுபடுத்திய ‘மனுஸ்மிருதி’ புத்தகத்தை எரித்தவர் அம்பேத்கர்
ஜனநாயகத்துக்கான நெருப்பைப் பற்ற வைத்தவர் தந்தை பெரியார்
தந்தை பெரியாரின் கருத்துகள் வடஇந்தியா உட்பட எங்கும் பரவ நாம் இன்னும் உழைக்க வேண்டும்
திருச்சி, ஜூலை 11– தந்தை பெரியாரின் கருத்துகள் வடஇந்தியா உட்பட எங்கும் பரவ நாம் இன்னும் உழைக்க வேண்டும் என்று முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் கருத்தரங்கில் எழுத்தாளர் – சமூக செயற்பாட்டாளர் ராம்புனியானி சிறப்புரையாற்றினார். அவர் ஆற்றிய உரை வருமாறு:
முதற்கண் தமிழ்நாட்டில் பேசுவதில் எனது மகிழ்ச்சியைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். தமிழ்நாடு என்பதில் என்ன சிறப்பு? தென்னிந்திய மாநிலங்கள் என்றால் என்ன சிறப்பு? பல வட மாநிலங்களில் எப்படியெல்லாம் ஜனநாயகம் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதென்று நாம் பார்க்கிறோம். அப்படியான நிலை இங்கு இல்லை என்பது தான். விடுதலைப் போராட்டக் காலத்தில் சில மதவாத சக்திகள் முன்வைத்த ‘இந்தி – இந்து – இந்துஸ்தான்” எனும் முழக்கத்தை வட இந்தியாவில் முன்னெடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த மொழி வேண்டும்? இந்தி! எந்த மதம் வேண்டும்? இந்து! எந்த நாடு வேண்டும்? இந்துஸ்தான். இதுதான் அவர்களின் கருத்தியல். இப்படித்தான் அடிக்கடி இந்தியை விரும்பாத மாநிலங்கள் மீது அம்மொழியைத் திணிப்பதை நாம் பார்க்கிறோம். இப்படிப்பட்ட நிலையில் உங்களிடையே இங்கு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
போராடிக் கிடைத்த ஜனநாயக உரிமைகள்!
என்னைப் பற்றி வழங்கப்பட்ட மிக கனிவான, தாராள அறிமுகத்துக்கு என் நன்றி. அதேபோல, எனக்குப் பேச அளிக்கப்பட்டுள்ள தலைப்பு: ‘இன்றைய இளைஞர்களுக்கு இன்றைய சவால்கள்’. மிகச் சிறப்பான தலைப்பு. உங்களில் சிலர் என்னுடைய ஆங்கிலத்தைப் புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன். ஓர் எளிமையான கேள்வியை கேட்கிறேன். பதில் சொல்லுங்கள். இந்தியாவுக்கு எப்போது விடுதலையும் மக்களாட்சியும் கிடைத்தது? 15 ஆகஸ்ட் 1947. வட இந்தியாவில் ஜான்சி ராணி பாத்திரத்தை நடித்த ஒரு ‘சிறந்த’ நடிகை போன்றவர்கள் இந்தியாவுக்கு 2014-இல்தான் சுதந்திரம் கிடைத்தது என்று பேசி வருகிறார்கள். நான் அதிர்ச்சிக்குள்ளானேன். இதில் இருந்து நான் புரிந்துகொண்டது, 2014-க்குப் பிறகுதான் இந்திய ஜனநாயகம் சிதையத் தொடங்கியது என. இந்த மேடம் இந்தியாவுக்கு 2014-இல் சுதந்திரம் கிடைத்தது எனக் கூறுகிறார். ஆகவே நாம் மக்களாட்சி என்றால் என்ன? அது நமக்கு எப்படி கிடைத்தது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அது என்ன வானத்தில் இருந்து வீழ்ந்ததா? பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் இருந்த மக்கள் போராடித்தான் இன்று அரசியலமைப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஜனநாயக உரிமைகள் கிடைத்தன.
எப்போதும் இந்திய அரசியலமைப்பின் முகவுரையை நினைவில் கொள்ளுங்கள். சுதந்திரம் – சமத்துவம் – சகோதரத்துவம் – சமூகநீதி. இங்கு சமூகநீதியின் இருபெரும் நாயகர்களுக்கு(முத்தமிழறிஞர் கலைஞர்-வி.பி.சிங்) மாலை அணிவித்து மரியாதை செய்தோம். அது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. நீதி என்பது நமது அரசிய லமைப்பின் முக்கிய அங்கமாக இருக்கிறது. ஆனால் யதார்த்தத்தில் எப்போதும் அப்படி இருப்பதில்லை. 2014-இல் இருந்து நமது ஜனநாயகம் எப்படி சிறுமைப்படுத்தப்படுகிறது, ஒரு சிறந்த எதிர்காலத்துக்கான நம்பிக்கை நமது இளம் தலைமுறையினரிடம் எப்படி அழிக்கப்படுகிறது என நான் சொல்கிறேன். நான் பிரதமரின் பெயரை உச்சரிக்க விரும்பவில்லை. உங்களுக்கு எப்படியும் தெரியும். 2014-இல் அவர் எத்தனை வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என உறுதியளித்தார்? ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள். ஆனால், பணமதிப்பிழப்பினால் எத்தனை வேலைவாய்ப்புகளை நாம் இழந்தோம்? இலட்சக்கணக்கான கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை நாம் இழந்தோம். 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் எனக் கூறி ஆட்சிக்கு வந்தார். ஆனால் மாறாக, அமைப்புசாரா, சிறு குறு தொழில் துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன.
2014க்குப் பிறகு இந்தியாவின் நிலை!
பிறகு என்ன சொன்னார்? ‘அச்சே தின்’ என்றார். அதாவது good days எனப் பொருள். Good day பிஸ்கட் என நினைத்துக் கொள்ள வேண்டாம். தேனாறும் பாலாறும் ஓடும் என்றார். கல்லாமை, இல்லாமை ஒழியும், தரமான மருத்துவம் கிடைக்கும் என்று அடித்து விட்டார். ஆனால் என்ன நடக்கிறது? அப்படியே சொன்னதற்குத் தலைகீழாக நடக்கிறது. ஆக்ஸ்பாம்(Oxfam) அமைப்பு இந்தியா குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையைப் படியுங்கள். இணையத்தில் தேடினால் கிடைக்கும். அதில் என்ன சொல்கிறார்கள்? 2014-க்குப் பிறகு இந்தியாவில் பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகிறார்கள். ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகிக் கொண்டிருக்கிறார்கள்.
சுகாதாரம், கருத்து சுதந்திரம், மதச் சுதந்திரம் இதுபோன்ற குறியீடுகள்தான் ஜனநாயகத்தின் அடையாளங்கள். அதற்கு என்ன நடக்கிறது? இந்தக் குறியீடுகளில் உலக அளவில் இந்தியாவின் இடம் கீழிறங்கிக் கொண்டே செல்கிறது. மதச் சுதந்திரத்தை எடுத்துக் கொண்டால் பல நாடுகளை விட மோசமான நிலையில் இருக்கிறோம். கருத்து சுதந்திரத்தை எடுத்துக்கொண்டால் மக்கள் பேசவே அஞ்சுகிறார்கள். அசோகா பல்கலைக்கழகப் பேராசிரியர் மஹ்முதாபாத் பகல்காம் விவகாரம் குறித்து ஒரு கருத்தைப் பதிவிட்டிருந்தார்.
“கர்னல் சோபியா குரேஷியைப் பாராட்டுகிறோம். ஆனால், குஜராத்தில் பில்கிஸ் பானுவைப் போல அவலம் நேர்ந்த பல பெண்களைப் பற்றி ஏன் பேசுவதில்லை? சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் தொடர்ந்து துன்புறுத்தலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகும் தலித், பழங்குடியினப் பெண்களைப் பற்றி ஏன் பேசுவதில்லை? அவர்கள் மீது கருணை வேண்டாமா?” இப்படி சொன்னதற்காக ‘தேசவிரோதம்!’ என்று சொல்லி அவரைச் சிறையிலடைத்து விட்டார்கள். மிக முதிர்ச்சியாகப் பேசினார். அறிவுஜீவிகள், ஊடகங்களின் வேலையே அரசை விமர்சனம் செய்வதுதான். ஏன்? அப்போதுதான் அரசு தன் தவறுகளைத் திருத்திக்கொண்டு நல்ல எதிர்காலத்தை அமைக்க முடியும். இதுதான் ஊடகங்களின் பணி, இதுதான் அறிவுஜீவிகளின் பணி, இதுதான் தேர்தல் அரசியல் அல்லது தேர்தல் அல்லாத அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களின் பணி.
சிலர் தேர்தல் அரசியலில் மிகவும் வெற்றிகரமாக இருக்கிறார்கள். நன்று. சிலர் தேர்தல் அரசியலில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் சமூக நலனில் அக்கறை கொண்டுள்ளார்கள். அவர்களுக்கும் தங்கள் கருத்தைக் கூற உரிமை இருக்கிறது. இந்தியாவில் ஜனநாயகத்தின் அண்மைப் போக்கைப் பற்றிப் பேச இந்த மேடையை அமைத்துத் தந்தமைக்காக நமது தோழர்களை நான் பாராட்டுகிறேன். ஏனென்றால் அதுதான் முக்கியமானது.
இன்றைக்கு ஆட்சி செய்வோர் மதத்தின் பெயரால் ஆதிக்கம்!
இங்கு ஒரு வரலாற்றுப் பின்னணியை வழங்குகிறேன். இந்தியாவில் பல அரசாட்சிகள் இருந்தன என்பது நமக்குத் தெரியும். அதில் அரசர்கள் மதத்துக்காக ஆட்சி செய்யவில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால் இன்று ஆட்சி செய்யும் சக்திகள் மதத்தின் பெயரில் ஆட்சி நடத்துகிறார்கள். மதத்துக்காக அல்ல, இவர்களுக்கும் மதங்கள் வலியுறுத்தும் அறத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உண்மையில் அவர்கள் ஜனநாயக விழுமியங்களைச் சிதைக்க மதத்தை ஒரு போர்வையாகப் பயன்படுத்துகிறார்கள்.
பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளியைக் குறைக்க அரசு முயல வேண்டும், போராடவேண்டும் என அரசியலமைப்பு வரையறுக்கிறது. ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் என்ன நடக்கிறது? குஜராத்தைச் சேர்ந்த இரு குடும்பங்கள்… யாரென்று உங்களுக்கே தெரியும். அவர்கள் மட்டும்தான் உயர்கிறார்கள். 2014-இல் தேர்தல் பரப்புரைக்கு இப்போதைய பிரதமர் யாரு டைய விமானத்தில் சென்றார்? அந்த தொழிலதிபரின் பெயர் என்ன? அவருடைய சொத்து மதிப்புதான் இப்போது பல நூறு மடங்கு உயர்ந்துகொண்டே போகிறது. இதுதான் ஜனநாயகம் ஒடுக்கப்படுவது.
முன்பு ஆட்சி செய்த அரசர்கள் சட்டங்களை உருவாக்கினார்கள், நடைமுறைப்படுத்தினார்கள், சட்டத்தை மீறினால் தண்டனையும் விதித்தார்கள். சட்டம் – நிர்வாகம் – நீதி என அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்திருந்தது. இந்தியா அப்போது பல நாடுகளாக, பல அரசாட்சிகளாகப் பிரிந்திருந்தது. பிரிட்டிஷார் இந்தியா வந்தபோது தந்திரமாக வணிகத்தின் பேரில் நுழைந்தார்கள். நுழைந்து நமது செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்தார்கள். இந்த இடத்தில் ஒன்றைக் குறி ப்பிட்டாக வேண்டும். பிரிட்டிஷார்தான் முதன்முதலில் ஆட்சியும் செய்து, வளத்தையும் இங்கிலாந்துக்குக் கொள்ளையடித்துச் சென்றனர். கோகினூர் வைரம் மட்டுமல்ல, மற்ற பல வளங்களையும் கொண்டு சென்றனர். அதற்கு முன்பு வரை மன்னர்கள் ஆண்டார்கள், வரி விதித்தார்கள், அவ்வளவுதான். செல்வத்தை வேறு எங்கும் கொண்டு செல்லவில்லை. வெளியில் இருந்து அந்நியர்கள் சிலர் படையெடுத்து வந்து கொள்ளையடித்துச் சென்றார்கள். அது தனி. அவர்கள் ஆட்சி செய்யவில்லை. அரசர்கள் முதன்மையாக அதிகாரத்துக்காக ஆட்சி செய்தார்கள். செல்வத்துக்காக ஆட்சி செய்தார்கள். மதம் அதில் அடிப்படைக் கூறாக இல்லை.
மதத்தை வைத்து முந்தைய
அரசர்கள் போரிடவில்லை!
ஓர் எடுத்துக்காட்டைக் கூறுகிறேன். திப்பு சுல்தான். இந்துக்களுக்கு எதிரானவர் என்று சிலர் கூறுவார்கள். ஆனால் உண்மையில், திப்பு சுல்தானின் ஆணைகளை நிறைவேற்றும் நிர்வாகி களாக இந்துக்களும் இருந்தார்கள். அவரது படைத்தளபதியாக இருந்தவர் பூர்ணையா. அவரது அரசில் தலைமைச் செயலாளராக இருந்தவரும் இந்துதான். அரசராக அவர் மற்ற அரசர்களுடன் போரிட்டது அதிகாரத்துக்காகத்தானே அன்றி, மதத்துக்காக அல்ல.
சில காலத்தில் பல சிறிய அரசாட்சிகளை வீழ்த்தி இந்தியத் துணைக்கண்டத்தைத் தனது ஆளுகைக்குள் பிரிட்டிஷார் கொண்டு வந்தனர். தந்திரத்தாலும் சதியாலும் இராணுவ பலத்தாலும் எனப் பல வகைகளில் அரசர்கள் பிரிட்டிஷாரால் வீழ்த்தப்பட்டனர். இங்குதான் நமது கதை தொடங்குகிறது. சமூகத்தில் மூன்று நிலைகளில் மாற்றம் நிகழ்ந்தது. முதலாவது, அவர்கள் இங்கிருந்த செல்வத்தை எடுத்துச் சென்றார்கள். நாம் திருச்சியில் இருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். இங்கிருந்து எதையோ இங்கிலாந்துக்கு எடுத்து செல்ல வேண்டும். நேரடியாக இலண்டனுக்குக் கொண்டு செல்ல முடியுமா? முடியாது. முதலில் சென்னைக்குக் கொண்டு செல்ல வேண்டும். பிரிட்டிஷாருக்கு முன்பு, திருச்சியில் இருந்து சென்னைக்கு ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டுமென்றால் மாட்டுவண்டிகள் போன்றவற்றில்தான் செல்ல முடியும். அப்போதுதான் இரயில்வே வந்தது. கொல்கத்தாவில் இருந்து ஆண்ட பிரிட்டிஷ் வைஸ்ராய் நாடு முழுவதும் தனது அதிகாரிகளுக்குக் கடிதங்களை அனுப்பி வைக்க வேண்டும். பிரிட்டிஷாருக்கு முன்பு குதிரைக்காரர்களும் புறாக்களும்தான் கடிதங்களைக் கொண்டு சென்றது. இந்நிலையில் பிரிட்டிஷார் தந்தி, தொலைபேசி, அஞ்சல் வசதிகளைக் கொண்டு வந்தனர். தொலைத் தொடர்பை எளிதாக்கினர். முதலில் இரயில், இரண்டாவது மெயில்… இது மிகப்பெரும் புரட்சி. தற்போது நம் அனைவரது பாக்கெட்டிலும் செல்பேசி இருக்கிறது. நினைத்த நேரத்தில் தொடர்பு கொள்ள முடிகிறது. அது தனிக்கதை. ஆனால் அந்தக் காலத்தில் தொலைபேசி, தந்தி, அஞ்சல் வசதிகளைக் கொண்டு வந்தது மிகப் பெரும் புரட்சி.
ஜனநாயகத்துக்காக ஆசைப்பட்டவர்கள்!
மூன்றாவது நவீனக் கல்வி முறை. நவீன கல்விமுறை வந்தபோது புதிய சமூக சீர்திருத்தங் களை, விழுமியங்களை, அறிவொளியைச் சமூகத்துக்குள் கொண்டு வந்தது. அதே போல நீதித்துறை. நீதித்துறை என்றால் அகமதாபாத்தில் இருந்தது போன்று ஜெயிலில் அடைப்பதுதான். ஆக இரயில், மெயில், ஜெயில் என மூன்று மாற்றங்கள் நிகழ்ந்தன. சமூகம் மாற்றமடைந்ததால் புதிய வகுப்பு மேலெழத் தொடங்கியது. வகுப்பு என்றால் ஒரே போன்ற தொழிலை மேற்கொண்டிருக்கும் மக்கள் குழுவாகும். டாடா, பிர்லா, டால்மியா போன்ற சிலர் தொழில்சாலைகளை நிறுவினார்கள். தெற்கைச் சேர்ந்தவர்கள் பெயர் எனக்குத் தெரியவில்லை. தொழிலதிபர்கள் ஒருபக்கம். அவர்கள் ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் மறுபக்கம். மூன்றாவதாக நவீனக் கல்விமுறையில் பயின்ற கற்ற வகுப்பினர். இவர்கள்தான் ஜனநாயகத்துக்காக ஆசைப்பட்டவர்கள். இவர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இருந்தார்கள்.
இந்த இயக்கம் மிக மெதுவாகத் தொடர்ந்தது, அதில் இரண்டு துணைக்காரணிகள் நிகழத் தொடங்கின. ஒன்று, தலித்துகளுக்கும் பெண்களுக்கும் கல்வி கிடைத்தது. மகாராஷ்டிராவில் ஜோதிராவ் புலே தலித்துகளுக்கான பள்ளியைத் தொடங்க முயன்றார். அதற்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்திய தேசியம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் போன்றவற்றுக்காகப் பேசிய தரப்பு ஆதரித்தது. நிலச்சுவான்தார்கள், இந்து அரசர்கள், முஸ்லீம் நவாபுகள் போன்றவர்கள் எதிர்த்தார்கள். தலித்துகள் கல்வி பெறுவதைத் தடுக்க அவர்கள் பல செயல்களைச் செய்தார்கள். ஜோதிராவ் புலே அவர்களின் மனைவியான தனித்துவமிக்க ஆளுமை சாவித்திரிபாய் புலே மற்றும் அவரது நண்பர் பாத்திமா ஷேக் இணைந்து பெண்களுக்கான பள்ளிகளைத் தொடங்கினர். இது நல்லதா? நல்லது என்று இப்போது சொல்கிறோம். ஆனால் அப்போது மதத்தின் பேரால் இது எதிர்க்கப்பட்டது. கல்விக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் மதத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? பெண் கல்வியைத் தடுக்க வதந்திகளைக் கிளப்பினார்கள். பிள்ளையார் பால் குடித்தார் என்று கூட வதந்தி கிளப்ப முடியும். நினைவிருக்கிறதா? எனவே, கல்வி கற்கும் பெண்கள் விதவைகள் ஆகிவிடுவார்கள், அசிங்கமாகிவிடுவார்கள் என வதந்தி பரப்பப்பட்டது. இங்கிருக்கும் பெண்கள் பயப்படாதீர்கள். எனது வாழ்விலே எடுத்துக்காட்டு இருக்கிறார். எனது மனைவி நன்கு படித்தவர். மருத்துவர். கடந்த 50 ஆண்டுகளாக என்னைச் சமாளிக்கிறார். அடுத்த நிமிடம் என்னாகும் எனத் தெரியாது. ஆனால் இந்த நொடி வரை அவர் கைம்பெண் ஆகவில்லை.
ஜனநாயகத்துக்கான நெருப்பைப்
பற்ற வைத்தவர்தான் பெரியார்!
இங்கே சில பெயர்கள் முக்கியம். ஜோதிராவ் புலே, சாவித்திரிபாய் புலே, பாபாசாகேப் அம்பேத்கர், மற்றும் சுயமரியாதையை வலியுறுத்திய பெரும்தலைவர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா அவர்கள். பெண்ணடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என மிக எளிமையாகச் சொன்னார். ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் உண்மைக்குப் புறம்பான புராணங்களைக் கூறி, ஜாதிய முறையை வலுப்படுத்தி, பெண்களைச் சமூகத்தில் கீழே தள்ளி, நம்மைக் காலம்காலமாக ஏமாற்றி வருகிறார்கள் எனச் சொன்னார். இப்படி பெரியார் ஜனநாயகத்துக்கான நெருப்பைப் பற்ற வைத்தார். ஆனால், தந்தை பெரியாரின் படைப்புகள் வட இந்தியாவில் பிரபலமாக இல்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. அவை அங்கும் பரவ வேண்டும். நாம் இன்னும் உழைக்க வேண்டும். சில நண்பர்கள் ஆங்கிலத்தில், இந்தியில் பெரியாரின் சிந்தனைகளைக் கொண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
தொழிலதிபர்கள், தொழிலாளர்கள், கற்றவர்கள் சமூக மாற்றங் களை ஆதரிக்க அது மற்ற நில உடைமையாளர் தரப்புக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. ஏன்? இந்த மாற்றங்கள் ஜனநாயகத்தையும், ஜனநாயக விழுமியங்களையும் கொண்டு வந்ததனால்.
ஜனநாயகத்தின் தரப்பில் மேலெழத் தொடங்கிய வகுப்பினர், எதிராக செல்வாக்கு சரியத் தொடங்கிய நிலவுடைமை – ஆண்டை வகுப்பினர். இதில் மேலெழத் தொடங்கிய வகுப்பில் இருந்து மூன்று பெரும் அமைப்புகள் தோன்றின. பகத்சிங் தொடங்கிய இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேசன், பீம்ராவ் அம்பேத்கரின் இந்திய குடியரசுக் கட்சி மற்றும் பெரியாரின் சுயமரியாதை இயக்கம். மூன்றாவதாக மவுலானா அபுல் கலாம் ஆசாத், அன்னி பெசண்ட், ராஜாஜி, காமராசர் ஆகியோர். இதற்கெல்லாம் மேல் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள். இவர்கள் அனைவரும் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
ஜனநாயகத்துக்கு எதிராகத் தோன்றிய
அரை டிரவுசர் ஆர்.எஸ்.எஸ். இயக்கம்!
ஜனநாயகத்துக்கு எதிரானவர்களைப் பற்றி சொன்னால் முகமது அலி ஜின்னாவின் முஸ்லீம் லீக், அடுத்து நமது அமைச்சர்(அன்பில் மகேஸ் பொய்யாமொழி) அவர்கள் சொன்னதைப் போல வினாயக் தாமோதர் சாவர்க்கர். தன்னைத்தானே ‘வீர்’ சாவர்க்கர் எனப் போற்றிப் புத்தகம் எழுதிக் கொண்டவர் அவர். அந்தமான் செல்லுலர் சிறையில் அவர் இருந்தபோது பிரிட்டிஷாருக்கு 5 மன்னிப்புக் கடிதங்களை எழுதியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. ”நான் உங்கள் மகனைப் போன்றவன். என்னை விடுதலை செய்யுங்கள். நான் உங்களுக்காகச் சேவை புரிவேன்.” என்று கடிதத்தில் அவர் எழுதினார். விடுதலை செய்யப்பட்டார். அப்போதே 60 ரூபாய் ஓய்வூதியமும் பெற்றார். உங்களில் யாராவது பொருளியலாளராகவோ கணக்கு தெரிந்தவராகவோ இருந்தால் சொல்லுங்கள். 1925 காலகட்டத்தில் அதன் மதிப்பு என்ன? இப்போது கிட்டதட்ட 4 இலட்ச ரூபாய் பெறுமானம் உள்ள பணம் அது. இப்படிப்பட்ட வீராதி வீரரின் இயக்கம் பெயர் இந்து மகாசபா. ஜின்னா முஸ்லீம் நாடு கேட்டார். சாவர்க்கர் இந்து தேசம் கேட்டார். மற்றொரு இயக்கமும் இந்து நாடு கேட்டது. தமிழ்நாட்டில் அவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாரைச் சொல்கிறேன் எனத் தெரிகிறதா? அரை டிரவுசர் அணியும் இயக்கம். அதுதான் ஆர்.எஸ்.எஸ்! “பெயரில் என்ன இருக்கிறது?” என ஷேக்ஸ்பியர் கேட்டார். இப்போது நாம் பார்த்ததில் பெயரில்தான் சூட்சுமமே இருக்கிறது. தி.மு.க., காங்கிரஸ், குடியரசுக் கட்சி என அனைத்துப் பெயர்களிலும் காரணம் இருக்கிறது. அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கைகள் இருக்கின்றன.
பாபாசாகேப் அம்பேத்கர் ஒரு புத்தகத்தை எரித்தார். அது என்ன தெரியுமா? மனுஸ்மிருதிதான் அந்தப் புத்தகம். சூத்திரர்களையும் பெண்களையும் அந்த நூல் இழிவுபடுத்துவதால் எரிக்கிறேன் என்று சொல்லி எரித்தார். அவரே பின்னாளில் இந்திய அரசியலமைப்பை வடிக்கும் குழுவின் தலைவர் ஆனார். பா.ஜ.க.வினர் 400 இடங்களுக்கு மேல் பெற வேண்டும் என்று பேசி வந்தனர் அல்லவா? எதனால் என்றால் அவர்களைப் பொறுத்தவரை அரசியலமைப்புச் சட்டம் மேற்கத்திய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டது. எங்களுக்கு இந்து புனித நூல்களை அடிப்படையாகக் கொண்ட சட்டம் வேண்டும் என்கிறார்கள்.
இரண்டு அமைப்புகளுக்கும் இரு முற்றிலும் எதிரெதிரான செயல்திட்டங்கள் இருக்கின்றன. நாராயண் மேகாஜி லோகண்டே, தோழர் சிங்காரவேலர் போன்றோர் பாட்டாளிகளின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என விரும்பினர். இதனால்தான் 14 மணி நேர வேலை நேரம், 12, 8 எனக் குறைந்தது. இப்போது சில தொழிலதிபர்கள் 14 மணி நேரம் வேலை, வாரம் முழுதும் வேலை, குடும்பத்துடன் நேரம் செலவிடாமல் வேலை செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள். உண்டு வேலை செய்து உறங்கிவிட வேண்டும் என்கிறார்கள். ஆக நாராயண் மேகாஜி லோகண்டே, தோழர் சிங்காரவேலர், தந்தை பெரியார் இப்படியான தலைவர்கள் மூலம்தான் நாம் ஜனநாயகத்தைப் பெற்றோம். மக்களின் தேவைகள், அபிலாஷைகளில் அது வேர் கொண்டுள்ளது.
நவீன இந்தியாவை உருவாக்கிய நேரு!
இந்து மதவாதிகள் சோம்நாத் கோயில் இடிக்கப்பட்டது, அரசே கோயில் கட்ட வேண்டும் என்றெல்லாம் கூறினார்கள். அப்போது காந்தி உயிருடன் இருந்தார். அவர் சொன்னார், அரசின் வேலை கோயில், மசூதி, தேவாலயங்கள் கட்டுவது அல்ல என்று சொன்னார். அது அந்த சமூகத்தின் வேலை என்றார். நேரு அவர்கள் இதற்குத் தன்னுடைய பாணியில் பதில் அளித்தார். பக்ரா நங்கல் அணையை அவர் தொடங்கி வைத்தபோது இந்தியா உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டிருந்தது. எனது சிறுபிராயம் எனக்கு நினைவிருக்கிறது. அமெரிக்காவில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அமெரிக்காவில் விலங்குகளுக்குக் கூட போட இலாயக்கில்லாத தரத்திலானது அது. அதைத்தான் நாங்கள் இங்கு உண்டு கொண்டிருந்தோம். இந்நிலையில் நேரு என்ன செய்தார்? நவீன இந்தியாவைக் கட்டமைத்த நேரு பக்ரா நங்கல் அணையைத் தொடங்கி வைத்தபோது, “இந்த அணைகள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை நவீன இந்தியாவின் கோயில்கள்” என்று சொன்னார்.
ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்ன சொல்கிறார்கள். கல்வி உரிமை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, சுகாதார உரிமை, விவசாயத் தொழிலாளர்களின் உரிமை இவற்றைப் பற்றிப் பேசுகிறார்களா? இல்லை. தொன்றுதொட்டு நாம் இந்து தேசமாக இருந்தவர்கள் என்று மட்டும்தான் பேசுகிறார்கள். ஆதி மனிதன் வேட்டையாடி உணவு சேகரிப்பவனாக இருந்தான் என்றுதான் படித்திருக்கிறோம். அப்படி இருந்த நிலையை இந்து தேசம் என்று நாம் கூற முடியுமா? பின்னர் மேய்ச்சல் நிலங்கள் உருவாகின. பின்னர் அரசாட்சிகள் வந்தன. ஆனால் தேசியம் என்பது இந்திய தேசிய இயக்கத்தின் போதுதான் வந்தது. அது ஒற்றைக் கட்சி அல்ல. நான் ஏற்கனவே சொன்னதுபோல ஏழை, எளிய, விளிம்பு நிலை மக்களுக்காகப் போராடிய அனைவரும் சேர்ந்ததுதான். நேரு அவர்கள் இட்ட அடித்தளத்தால்தான் நான் 27 ஆண்டுகள் மும்பை ஐ.ஐ.டி.யில் பணியாற்றினேன். ஆர்.எஸ்.எஸ். என்ன செய்தது? நம் சமூகத்தின் குறைபாடுகளுக்கெல்லாம் அந்நியர்கள்தான் காரணம் என்று குற்றம் சாட்டியது. ஜாதியம், பெண்ணடிமைத்தனத்துக்கு எல்லாம் கூட முஸ்லீம்கள்தான் காரணம் என்றது. ஆனால். அவையெல்லாம் மனுஸ்மிருதி, புராணங்களிலேயே இருக்கிறது. ஆனால் அவர்கள் அந்நியர்கள் மேல் பழிபோடுகிறார்கள்.
சிறுபான்மையினர் படுகொலையில்
பார்ப்பனீயத்தின் பங்களிப்பு!
பின்னர் பசுவின் புனிதம் என்று கூறி அதன்மீது இயக்கத்தைக் கட்டமைத்தார்கள். நான் அதற்குள் விரிவாகப் போக விரும்பவில்லை. பண்டைய வேத காலத்தில் பசு பலி கொடுக்கப்பட்டது. இதை நான் சொல்லவில்லை. சுவாமி விவேகானந்தர் இப்படி சொல்லியிருக்கிறார். பெரும் பேராசிரியர் டி.என்.ஜா அவர்கள் சொல்லியிருக்கிறார். பார்ப்பனீயத்துக்கும் பவுத்தத்துக்கும் போராட்டம் நிகழ்ந்து பவுத்தம் வலுவிழந்தது. பார்ப்பனீயம் பசுவை இப்போது புனிதத் தாயாக உருவகப்படுத்தத் தொடங்கியது. பசுவைக் கொன்றவர்கள் இப்போது அதைப் புனிதமாக்கிவிட்டார்கள். பசுப் பாதுகாவலர்கள் நாடாளுமன்றத்துக்கே சென்று முற்றுகையிட்டார்கள். பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் முஸ்லீம்கள், தலித்துகளைக் கும்பல் படுகொலை செய்வதில் வந்து நின்றிருக்கிறது. 2014-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 100 படுகொலைகள் இவ்வாறு செய்யப்பட்டிருக்கின்றன என்ற தரவைப் பார்த்து நான் மிகவும் வேதனையடைந்தேன். இதில் 90 பேர் முஸ்லீம்கள். 10 பேர் தலித்துகள். இன்னொரு புறம் பா.ஜ.க. ஆளும் ஒரு மாநிலத்தில் கோசாலைகளில் நூற்றுக்கணக்கான பசுக்கள் உணவின்றி, சிகிச்சையின்றி இறந்து போனதையும் நாம் பார்த்தோம். இதைப் பார்த்து எனக்குச் சந்தேகம் எழுகிறது? அவர்கள் உண்மையிலேயே பசு மீது பற்று கொண்டிருக்கிறார்களா அல்லது அதனை அரசியல் கருவியாகப் பயன்படுத்தி கொலை செய்கிறார்களா? அதற்கு ஒரு புத்தகத்தில் எனக்கு விடை கிடைத்தது. சிறந்த கவிஞரும் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்தான் அது. அவர் ஒருமுறை அமெரிக்காவில் சொற்பொழிவாற்றச் சென்றிருந்தபோது, நிகழ்வு முடிந்து உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவர் அருகில் இருந்தவர், “அடல்ஜி, நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் தெரியுமா? மாட்டுக்கறி” என்றாராம். அதற்கு வாஜ்பாய், “இருக்கட்டும். இது அமெரிக்கப் பசுதானே, இந்தியப் பசு இல்லையே” என்றாராம்.
இராமரை வைத்து அரசியல்! உணர்ச்சிகளை கிளப்பும் பா.ஜ.க.!
அதேபோல, முஸ்லீம் இந்துப் பெண்ணைக் காதலித்தாலும் அதைப் பிரச்சினையாக்கிக் கொல்கிறார்கள். இது இன்னொரு அவலம். இப்படி உணர்ச்சிமயமான விஷயங்களையே கிளப்புகிறார்கள். அத்தகையதுதான் பாபர் மசூதி இடிப்பும். பாபர் மசூதி கோயில் மீது கட்டப்பட்டது என்றார்கள். அது இராமர் பிறந்த இடம் என்றார்கள். இராமர் எந்த ஆண்டு பிறந்தார் என்று தெரியாது. ஆனால் அவர் பிறந்த இடம் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது என நினைத்துக் கொண் டேன். வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றத் தீர்ப்பில் அங்கு கோயில் இருந்ததற்கான எந்தச் சான்றும் இல்லை எனத் தெரிவித்தது. ஆனாலும் அரசியல் அழுத்தம் காரணமாக அந்த இடத்தை மொத்தமாக, ‘இந்து’ என்று சொல்லப்படுபவர்களின் தரப்புக்கு வழங்கித் தீர்ப்பளித்தது. அங்கு கோயில் கட்டுவதில் அவர்கள் வெற்றி பெற்றார்கள். அது தேர்தலில் வெல்லக் கைகொடுக்கும் எனவும் நினைத்தார்கள். ஓரளவு அது உதவியும் இருக்கலாம். ஆனால் ஒரு விஷயத்தைப் பாராட்டியாக வேண்டும். அந்தக் கோயில் கட்டுமானம் எவ்வளவு சிறப்பாக இருந்ததென்றால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கட்டப்படுவதெல்லாம் விழுவதைப் போலவே இராமர் கோயிலிலும் முதல் மழைக்கே உள்ளே ஒழுகியது. என்ன சிறப்பான கட்டுமானம்!
உணர்ச்சிகளைத் தூண்டி, வெறுப்பைப் பரப்பும் வேலை நடக்கிறது. வெறுப்பின் அடித்தளத்தில்தான் மத வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்த்தப் படுகின்றன. அன்பு நிறைந்த சமூகத்தில் வன்முறைக்கு இடமில்லை. யேல் பல்கலைக்கழகம் தெரியுமா உங்களுக்கு? எனக்கு எப்படி தெரியுமென்றால், 10-ஆம் வகுப்பு மட்டுமே படித்த தற்குறி ஒருவர் ஒன்றிய கல்வித்துறை அமைச்சரானார். அவர் என்னிடம் யேல் பல்கலைக்கழக டிகிரி இருப்பதாகக் கூறினார். (அது எம்.பி.க்களுக்கான 6 நாள் பயிற்சி சான்றிதழ் மட்டுமே) அப்படித்தான் யேல் பல்கலைக்கழகம் பற்றி அறிந்துகொண்டேன். அவர்கள் நடத்திய ஓர் ஆய்வில் தெரியவந்தது என்னவென்றால், எங்கெல்லாம் மத வன்முறை திட்டமிட்டு நிகழ்த்தப்படுகிறதோ, உடனே அங்கு ஒரு கட்சி வலிமையடைகிறது என்பதுதான். அது எந்தக் கட்சி என்று தெரிகிறதா? பா.ஜ.க.தான்!
இந்திய அரசியலமைப்பின்
விழுமியங்களை பரப்ப வேண்டும்!
மக்கள் நலன், வளர்ச்சி, வேலைவாய்ப்புகள், தரமான மருத்துவ வசதி என்று பேசுவது ஒரு அரசியல். மற்றொன்று வெறுப்பு, பிளவுவாத அரசியல். இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இத்தகைய தருணத்தில் இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்காகத் தொடங்கப்பட்டுள்ள இந்த இயக்கம் நமது எதிர்காலத்துக்கு மிகவும் அவசியமானது. சமூகத்துக்காக நேரம் செலவிடத் தயாராக இருக்கும் இளம் தலைமுறையினருக்குப் பயிற்சிப் பாசறைகள் நடத்தப்பட வேண்டும் என நினைக்கிறேன். இந்திய தேசியம் என்றால் என்ன? இந்துத்துவ தேசியம் என்றால் என்ன? முஸ்லீம் தேசியம் என்பது என்ன? எனச் சிறு சிறு அளவில் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படலாம். இந்திய அரசியலமைப்பின் விழுமியங்களை அனைவரிடமும் பரப்ப வேண்டும். மக்களிடம் செல்ல வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்திய தேசியம் ஆகியவை பற்றி மக்களுக்கு விளக்குவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். அதேநேரத்தில் ஜனநாயகம் பற்றிய இதுபோன்ற கூட்டங்களையும் நடத்த வேண்டும். ஜனநாயகம்தான் நம் எதிர்காலத்துக்கான ஒரே வழி. எங்கெல்லாம் அரசியலில் மதம் கலக்கிறதோ, அது அந்த நாட்டை நாசமாக்கி விடும்.
பாகிஸ்தானை எடுத்துக் கொள்ளுங்கள். தொடக்கம் முதலே இஸ்லாம் மதத்தையே அது மய்யப்படுத்தி இருந்தது. இன்று அது முற்றிலும் திவாலான நாடாக ஆகிவிட்டது. இலங்கையைப் பாருங்கள். இரண்டாண்டுகளுக்கு முன்பு மக்கள் எழுச்சி அங்கு ஏற்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கம் ஏன் தோன்றியது? பவுத்தத்தின் பேரில் சிங்கள தேசியம் முன்னெடுக்கப்பட்டதால். 1958-இல் பிரதமர் பண்டாரநாயகே இலங்கையின் தேசிய மொழிகளில் ஒன்றாகத் தமிழை ஆக்கினார். அவர் பவுத்தத் துறவியால் கொல்லப்பட்டார்.
மதம் எப்போதும் தனிப்பட்ட வாழ்க்கை விஷயமாக இருக்க வேண்டும்!
என்னைப் பொறுத்தவரை மதம் எப்போதுமே தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த பர்சனல் விஷயமாக மட்டுமே இருக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பின் வழியில் இந்திய தேசத்தையும் ஜனநாயகத்தையும் உயர்ந்த இடத்துக்குக் கொண்டு போக வேண்டும். வாய்ப்புக்கு நன்றி. இவ்வாறு எழுத்தாளர் ராம் புனியானி உரையாற்றினார்.