அந்நாள் – இந்நாள்

Viduthalai
4 Min Read

நாவலர் இரா. நெடுஞ்செழியன் 105 ஆவது பிறந்த நாள் இன்று (ஜூலை 11, 1920)

1920இல் பட்டுக்கோட்டை திருக்கண்ணபுரம் என்ற ஊரில் நீதிக்கட்சியைச் சேர்ந்த ராஜகோபாலன் என்பவருக்கு மகனாக பிறந்தவர் நாராயணசாமி. இவர் தம்பி சீனி வாசன். பின்பு இருவரும் திராவிடர் இயக்கப்பற்றால் நெடுஞ்செழியன், செழியன் என்று பெயர் மாற்றிக் கொண்டனர்.

இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் போதே முதல் மாணவர். இலக்கியம், வரலாறு, அரசியல் விஞ்ஞானம் போன்றவற்றில் எந்தக் கேள்வியைக் – கேட்டாலும் மடை திறந்த வெள்ளம் போல் சொற்பொழிவாற்றுவதில் வல்லவர்.

ஆரம்பத்தில் திக்குவாய்ப் பிரச்சினையால் சரியாகப் பேசமுடியாமல் தவித்த இவருக்கு முறையாகப் பேச்சுப் பயிற்சி தந்தவர் சக மாணவரான க.இராமையா (பின்னாளில் பேராசிரியர் அன்பழகன்). வேகமாகப் பேசும்போது திக்கித் திணறி வார்த்தைகள் வராதபோது ‘ங்’ என்று ஒரு விதமாக சத்தம் வந்தது. அதையே அவரது பேச்சு பாணியாகக்  கொண்டு வெற்றி பெற்றார். பலர் அவர் போல் பேச வேண்டும் என்று பயிற்சி எடுத்தனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தில் சுயமரியாதை இயக்கக் கருத்துகளைப் பரப்பிய மாணவர்கள் நன்னன், செழியன், அன்பழகன் வரிசை யில் முதன்மைப் பங்கு வகித்தவர் நாவலர் தான்.

கல்லூரிக் காலங்களில் நீண்ட இளம் தாடி, கருப்புநிற புஷ்கோட், ஆறடிக்கும் மேலான உயரம் என்று நாவலரின் தோற்றம் மிக வித்தியாசமாக இருக்கும்.  பேச ஆரம்பித்தால் பல இடங்களில் கலவரமும் வரும். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வெட்டு ஒன்று; துண்டு இரண்டு என்று, தான் சொல்ல வந்த கருத்தைச் சொல்லி விட்டுத்தான் அமர்வார், மாணவரான இளந்தாடி நெடுஞ்செழியன்.

சங்க இலக்கியங்கள், ராமாயணம், பெரியபுராணம் மற்றும் இலக்கண நூல்களைப் படித்து அதை மனப்பாடமாக உரிய இடத்தில் சொல்லி தன் கொள் கைக்கு மிகப்பெரிய ஆதரவைத் திரட் டுவார் நாவலர். நாவலரும், பேராசிரியரும் மிகப் பெரிய பேச்சாளர்களாக இருந்தபோது அவர்களை அழைத்து திருவாரூரில் கூட்டம் போட்டவர் கலைஞர்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்களை நாவலர் போல் பட்டி தொட்டி எங்கும் பரப்பியவர் யாரும் இல்லை எனலாம். பேச்சு ஆரம் பிக்கும் போதும், இடையிலும், முடிக்கும் போதும் பாரதிதாசன் பாடல்களை எழுச்சியோடு பாடி, தான் சொல்லவரும் கருத்துக்கு வலுசேர்ப்பார் நாவலர். இடி மழைபோல், அருவி போல் காட்டாற்று வெள்ளம் போல் நாவலர் பேசினாலும் நகைச்சுவை அங்கே இழை யோடும்.

நாவலரின் தனித்தன்மையான பேச்சைக் கண்டு கேட்டு வியந்த பெரியார், நாவலரை தன்னுடன் சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் சென்றார். அண்ணா அவரது பேச்சை வியந்து நாவலரை நடமாடும் பல்கலைக்கழகம் என்று அழைத்துப் பெருமைப்படுத்தினார்.

* நாவலர் எழுதிய நூல்களில் மதமும் மூடநம்பிக்கையும் என்ற நூல் மிகச் சிறப்புடையது. தன் வாழ்க்கை வரலாற்றை என் வாழ்வில் கண்டதும் கேட்டதும் என்று எழுதினார். ஒரே தலைப்பைப் பலமுறை பேசினாலும், ஒவ்வொருமுறையும் அந்தப் பொருள் பற்றிக் குறிப்பில்லாமல் பேசமாட்டார்.

பகுத்தறிவாளர்கள்தான் பன்னெடுங் காலம் வாழ்பவர்கள் என்பதற்கு அவர் கூறும் எடுத்துக்காட்டுக்கள், கேட்க மலைப்பாக இருக்கும் இறுதியாக பெரியார் வாழ்ந்தது மிக அதிகம் என்று முடிப்பார். நாவலரும் 80 வயதை தாண்டி 2001 ஜனவரி 12 ஆம் நாள் மறைந்தார். அதற்கு முன் சென்னை பெரியார் திடலில் 31.12.2000 அன்று திராவிடர் கழகம் நடத்திய புத்தாயிரம் நிகழ்ச்சியில் இறுதியாகக் கலந்து கொண்டு பேசினார். நாவலர் என்னும் பெரியார் தொண்டரின் இறுதிப் பேச்சு பெரியார் திடலில் தான் கடைசியாக முடிவுற்றது.

குன்றக்குடி அடிகள் பிறந்த நாள்
இன்று (சூலை 11, 1925)

இந்நாள் - அந்நாள்

சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவாளப்புத்தூருக்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் சிற்றூரில் சீனிவாசப் பிள்ளை – சொர்ணத்தம்மாள் இணையருக்கு குன்றக்குடி அடிகளார் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கநாதன். தமிழ்நாடு அரசின் முதல் திருவள்ளுவர் விருது 1986 இல் இவருக்கு வழங்கப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் (D.Litt) 1989 இல் வழங்கிச் சிறப்பித்தது.

இந்திய அரசின் அறிவியல் செய்தி பரப்பும் தேசியக்குழு, 1991 இல் தேசிய விருது வழங்கிச் சிறப்பித்தது.

இருபதாம் நூற்றாண்டின் சமய – சமுதாய ஞானியாகப் பாராட்டப் பெறுகிற தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் எதைச் சொன்னாலும் தெளிந்து சொல்வார் – தெளிவாகவும் சொல்வார். ‘எத்தவத்தைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும் முத்தர் மனமிருக்கும் மோனத்தே’ என்பதுபோல், தவத்திரு அடிகளார் அவர்களின் எழுத்தும் சொல்லும், சிந்தனையும் செயலும் மக்கள் சமுதாயத்தின் நல்வாழ்வை அடிப்படையாகக் கொண்டே அமையும்.  “நாம் காணும் சமய நெறி, சமுதாயத் தொடர்புடைய நெறி, சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக – சமுதாயத்தின் நல் வாழ்வுக்காக வேண்டுவன செய்யக் கடமைப்பட்டிருக்கிறது. அது; மனித சமுதாயத்தின் சிக்கல்கள் தொல்லைகள் அனைத்தையும் மாற்றியமைக்கின்ற பொறுப்பும் கடமையும் சமய நெறிக்கு இருக்கிறது” என்று கூறிச் சமயத்திற்கும் சமுதாயத்திற்கும் ஒரு பெரும் இணைப்புப் பாலத்தை உருவாக்கும் பணியை அவர் இயன்ற வகையெல்லாம் செய்து வந்தார். சமயவாதிகளிடையேயும் சமுதாயவாதிகளிடையேயும் அவர் ஒரு புரட்சிச் சின்னமாகவே திகழ்ந்தார். அவர், சைவநெறி பரப்பும் திருமடத்தின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தாலும் அவரிடத்துச் சமய வெறியையோ, பிறசமயக் காழ்ப்புணர் வையோ காண இயலாது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *