திருவாரூர், ஜூலை 11 – பாஜகவுக்கு ‘டப்பிங் குரல்’ தருபவராக இருந்துவந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது பாஜகவின் ஒரிஜினல் குரலாகவே மாறி விட்டார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்று (10.7.2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 73 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் 1234 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 172 கோடியே 18 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2423 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது:
ஒரிஜினல் குரலாகவே…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்தவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு எப்படி கூச்சமே இல்லாமல் பயணம் மேற்கொள்ள முடிகிறது?
இந்து சமய அறநிலையத்துறை சார்பாக பள்ளி, கல்லூரிகள் கட்டக் கூடாதாம். இத்தனை நாள்களாக பாஜகவிற்கு ‘டப்பிங் வாய்ஸ்’ கொடுத்து வந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது ‘ஒரிஜினல் வாய்ஸாகவே’ மாறிவிட்டார். அறநிலையத்துறை சட்டத்திலேயே கல்லூரி தொடங்க சட்டம் உள்ளது. இது தெரியாமல் எப்படி முதலமைச்சராக இருந்தீர்கள்? 2017 ஆம் ஆண்டு பழநியாண்டவர் கல்லூரிக்கு கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்த போது மயக்கத்தில் இருந்தீர்களா? பாஜக தலைவர்கள் கூட கல்லூரி தொடங்கக் கூடாது என்று பேசுவதில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி பேசத் தொடங்கி விட்டார். வடிவேலு படத்தில் வரும் காமெடியில், ‘‘கொடுத்த காசுக்கு மேல் கூவுறாண்டா’’ என்பதை போல், பாஜக-வினரே பேசிக் கொள்கிறார்கள். ஏன் படிப்பு என்றால் உங்களுக்கு அவ்வளவு கசக்கிறது? தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்துவிட்டு என்ன பயணம் செய்தாலும், மக்கள் ஏற்க மாட்டார்கள்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சாடியுள்ளார்.