விழுப்புரம் மாவட்டம் தென் பெண்ணையாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது மரகதபுரம் கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள இஸ்லாமியர்களின் மசூதியில் கடந்த 5ஆம் தேதி இரவு தீ மிதி நிகழ்ச்சி நடைபெற்றது.
தீமிதி நிகழ்ச்சிக்கு முன்னதாக முஸ்லிம்களும், மாலை அணிந்திருந்த அய்யப்ப பக்தர்களும் மசூதிக்குள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
வழிபாட்டுக்குப் பிறகு மசூதி முன்பு இருந்த தீக்குண்டத்தில் நள்ளிரவு 12.15 மணியளவில் முஸ்லிம் பெரியவர் ஒருவர் இறங்கினார். அப்போது அவருடன் வலதுபுறம் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரும், இடதுபுறத்தில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரும் ஒரே நேரத்தில் தீக்குண்டத்தில் இறங்கினர். இதையடுத்து அங்கு கூடியிருந்த இரு மதத்தினரும், ஜாதி மதம் பார்க்காமல், தீக்குண்டத்தில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
இந்த விழாவில், விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி, கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான இந்துக்கள், முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் இந்த விழா 10 நாள்கள் வெகு விமர்சையாக மரகதபுரத்தில் நடைபெறும். இந்து, முஸ்லிம் இணைந்து நடத்தும் இந்த விழா அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதை உணர்த்துவதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.
(‘தினத்தந்தி’ 7.7.2025 பக்கம் 10)
தீ மிதிப்பது சரியா, தவறா என்பது வேறு பிரச்சினை. திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களும் தீக்குண்டம் இறங்கிக் காட்டியுள்ளனர். அது வேறு பிரச்சினை!
மரகதபுரம் கிராமத்தில் இஸ்லாமியர்கள் நிகழ்ச்சியில் இந்துக்களும் கலந்துகொண்டு தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
வேறு வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அதனை முதன்மைப்படுத்தாமல், மத மாச்சரியத்துக்கு இடமில்லாமல் நடந்து கொண்டு இருக்கிறார்கள் என்றால் – இதற்குப் பெயர்தான் தமிழ்நாடு!
இந்துக்கள் வழிபடும் கடவுளும், முஸ்லிம்கள் தொழுவதும் (உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்கள்) வேறு வேறாக இருந்தாலும், அவரவர் நம்பிக்கை அவரவர்களைச் சார்ந்தது. இதில் மத வேறுபாட்டைக் காட்டி, மோதலை ஏற்படுத்தி கலவரம் செய்வது எல்லாம் எந்த வகையில் சரியாக இருக்க முடியும்? மனிதத் தன்மையாகவும் எப்படி இருக்க முடியும்?
விழுப்புரம் மாவட்டம் மரகதபுரம் கிராமத்தில் நடந்து வரும் நிகழ்ச்சியையும், திருப்பரங்குன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்கள் நடந்து கொண்டு வரும் தன்மையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்!
மரகதபுரம் கிராமத்தில் நடந்த முஸ்லிம்கள் மத நிகழ்வில் மாலை போட்ட அய்யப்பப் பக்தர்களும் கூடப் பங்கேற்கிறார்கள்.
இதைப் பார்த்த பிறகாவது – சங்பரிவார்களின் மதவெறித் தூண்டுதல்களுக்கு இரையாகலாமா என்பதை நம் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சங்பரிவார்களும், அதன் அரசியல் வடிவமான பிஜேபியும், ஓரிடத்தில் காலூன்றுவதற்கு அவர்கள் மேற்கொள்ளும் யுக்திதான் இந்த மதப் பிரச்சினை!
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும், மதப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டுதான் மக்களைப் பிளவுபடுத்தி, தங்கள் அமைப்புகளை நிலை நாட்டுகிறார்கள்.
ஆனால், தமிழ் நாட்டில் அவர்களின் அதிகார வித்தைகள் பலிக்காது என்பதற்கு அடையாளம்தான் மரகதபுரம் கிராமம்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதுகூட இந்தியா எங்கும் மதக் கலவரங்கள் நடந்தன!
ஆனால், தமிழ் நாடோ, அமைதிப் பூங்காவாகத்தானே இருந்தது.
இப்பொழுதாவது புரிந்து கொள்ளட்டும் – இது பெரியார் மண் என்பதை!