ராஜஸ்தான் பீக் மாவட்டத்தில், பஹாஜ் கிராமத்தில் இந்திய தொல் பொருள் ஆய்வகம் நடத்திய அகழ் ஆய்வில் சுமார் 4500 ஆண்டுக் கால பழமையான நாகரிகத்தின் அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த அகழ்வாய்வில் சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிலைகள், உலோக ஆயுதங்கள், மட்பாண்டங்கள், பாத்திரங்கள் மற்றும் 800-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.
இது சிந்து வெளி நாகரிகத்தின் காலத்தில் இப்பகுதியில் நீர் வளம் இருந்திருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.
கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள், இப்பகுதியில் மேம்பட்ட கட்டுமானங்கள், விவசாயம் மற்றும் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகள் இருந்திருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. இது சிந்து வெளி நாகரிகத்தின் முதிர்ச்சியடைந்த கட்டமான கி.மு. 2600 முதல் கி.மு. 1900 வரையிலான காலத்துடன் ஒத்துப்போகிறது
சிந்து வெளி நாகரிகம் (கி.மு. 3300–1300) தெற்காசியாவின் வடமேற்கு பகுதிகளில், குறிப்பாக இன்றைய பாகிஸ்தான், வடமேற்கு இந்தியா மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் பரவியிருந்தது. இது நவீன நகரமைப்பு, கால்வாய் அமைப்பு, மேம்பட்ட கட்டடங்கள் மற்றும் வர்த்தக வலையமைப்பு ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. பஹாஜ் கிராமத்தில் கண்டறியப்பட்டவை, இந்த நாகரிகத்தின் விரிவு அல்லது அதன் கலாச்சார தாக்கத்தை பிரதிபலிக்கலாம். இது சிந்து வெளி நாகரிகத்தின் முக்கிய நகரங்களான அரப்பா, மொகஞ்சதாரோ, தோலாவிரா போன்றவற்றுடன் ஒப்பிடத்தக்கது.
இந்தக் கண்டுபிடிப்பு, சிந்து வெளி நாகரிகத்தின் பரவல் மற்றும் அதன் கலாச்சார தொடர்ச்சியைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமானது.
பஹாஜ் கிராமத்தில் கண்டறியப்பட்ட 4,500 ஆண்டுகள் பழமையான எச்சங்கள், சிந்து வெளி நாகரிகத்தின் விரிவு மற்றும் அதன் கலாச்சார தாக்கத்தை உறுதிப்படுத்துகின்றன. இந்தக் கண்டுபிடிப்பு, இந்தியாவின் பண்டைய வரலாற்றை ஆழமாக ஆய்வு செய்ய வழிவகுக்கும். மேலும், இது சிந்து வெளி நாகரிகத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது அதன் செல்வாக்கு பரவிய பகுதியாகவோ பஹாஜ் கிராமத்தை அடையாளப்படுத்துகிறது.
அரியானா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் சிந்து நதிக்கரை நாகரிகத்தின் எச்சங்கள் அகழ்வாராய்ச்சியின் போது அவ்வப்போது கிடைத்துக் கொண்டே உள்ளன.
இன்றும் குஜராத்தின் தொளவீரா, அரியானா, ராக்கிஹரி போன்ற பகுதிகளில் தோண்டத் தோண்ட சிந்துசமவெளி திராவிட நாகரிகத்தின் பண்பாட்டுச் சிதறல்கள் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே உள்ளன.
உண்மை இவ்வாறு இருக்க, ஆரியம் தொடர்ந்து சரஸ்வதி நதியைப்பற்றி – இல்லாத ஒன்றை இருந்தது போல கயிறு திரித்துக் கொண்டு வருகிறார்கள் அல்லவா – அந்தப் பொய்யை ராஜஸ்தான் மாநிலத்தின் தொல் பொருள் ஆய்வின் கண்டுபிடிப்போடு முடிச்சுப் போடுவது – அவர்களுக்கே உரித்தான கோயபல்ஸ் தனமேயாகும்!
ராஜஸ்தான் பகுதியில் கண்டுபிடிக்கப் பட்டதாகக் கயிறு திரிக்கிறார்கள். சமூக வலைதளங்களில் இந்த வதந்தியைப் பரப்பி வருகிறார்கள். சிவன், பார்வதி சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரப்புவது பொய் – பச்சைப் பொய்யாகும்; தொல் பொருள் ஆய்விலும் இவை குறிப்பிடப்பட வில்லை.
சிந்து சமவெளி நாகரிகமும் சரி, கீழடி நாகரிகமும் சரி திராவிடர்களின், தமிழர்களின் நாகரிகமே என்பது அறிவியல் ஆய்வுப்படி உறுதிப்படுத்தப்பட்டவையே!