மதுரை, ஜூலை 10 மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் மதுரை மாநகர் மாவட்ட கழகக் காப்பாளர் சே.முனியசாமி எழுதிய ‘விறகுவண்டி முதல் விமானம் வரை’ நூல் அரங்கேற்றம் நடைபெற்றது.
கடந்த 25.6.2025 மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் 5 நூல்களில் ஒன்றாக இந்த நூல் அரங்கேற்றம் நடைபெற்றது. நிகழ்விற்கு உலகத் தமிழ்ச்சங்க இயக்குநர் (பொறுப்பு) முனைவர் அவ்வை ந.அருள் தலைமை தாங்கினார். உலகத் தமிழ்ச்சங்க ஆய்வறிஞர் முனைவர் ச.சோமசுந்தரி அனைவரையும் வரவேற்றார். சே.முனியசாமியின் நூலினை தோழர் அ.நா.சாந்தாரம் அரங்கேற்றம் செய்தார்.
உத்வேகம் தரும் நூல்!
அவர் தனது உரையில் நூலின் சிறப்பி னைக் குறிப்பிட்டு, ‘‘அய்யா முனியசாமியின் பேச்சு நடையிலேயே நூல் இருப்பது மிகச்சிறப்பு. எவ்வளவு தூரம் வறுமையில் இருந்திருக்கிறார் சே.முனியசாமி என்ப தையும், தந்தை பெரியாரின் கொள்கை அவரது வாழ்க்கையில் அவர் முன்னேற எவ்வளவு உதவி புரிந்திருக்கிறது என்பதனையும் அருமையாக விளக்கி எழுதியிருக்கிறார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு கல்லூரி மாணவ, மாணவியரும் கட்டாயம் படிக்க வேண்டும்; படித்தால் முன்னேற வேண்டும் என்னும் உத்வேகம் பெறுவீர்கள்’’ என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.
தொடர்ந்து ஏற்புரையாற்றிய சே.முனியசாமி, ‘‘இந்த நூலைப் பெருமைக்காக எழுதவில்லை. எனது குடும்பத்தினர், மற்றவர்கள் எப்படித் துன்பப்பட்டு, உழைத்து, நான் பணம் ஈட்டினேன் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக எழுதினேன். இன்றைக்கு நன்கொடையாக நிறைய உதவிகள் செய்கிறேன். பள்ளிக் குழந்தைகளுக்கு படிக்க உதவி செய்கிறேன். தந்தை பெரியாரின் கொள்கைதான் எனக்கு வழிகாட்டியது“ என்று குறிப்பிட்டு ஏற்புரையாற்றினார். திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தோழர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாணவர்களுக்குக் குறிப்பேடுகள் வழங்கல்
03.07.2025 அன்று மதுரை நிலையூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 200 குறிப்பேடுகளை மதுரை மாநகர் மாவட்ட கழகக் காப்பாளர் சே.முனியசாமி வழங்கினார். நிகழ்வில் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். நிகழ்வில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு, கழகத்தின் மாநகர் மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம், சே.முனியசாமியின் பெயரன் பொறியியல் மாணவர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.