ஆசிரியர்கள் வாகனம், கணினி வாங்குவதற்கு கடன் உதவி தமிழ்நாடு அரசு வழங்குகிறது

viduthalai
3 Min Read

சென்னை, ஜூலை 10 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வாகனம் மற்றும் கணினி வாங்குவதற்கான கடனுதவி அளிப்பதற்கு தேவையான விவரங்களை சமர்பிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

ஆசிரியர்களுக்கு கடன் உதவி

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 37,455 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் சுமார் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதே போல், பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

இதற்கிடையே, அரசு ஊழியர்கள் பைக், கார், கணினி உட்பட சில பொருட்கள் வாங்குவதற்கு தமிழ்நாடு அரசால் கடன் மற்றும் முன்பணம் தரப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு விண்ணப்பித்த பணியாளர்களுக்கு பணம் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுவதாக புகார்கள் நிலவுகின்றன.

இதை சரி செய்து கடனுதவியை துரிதமாக வழங்கு வதற்கான பணிகளை கருவூலம் மற்றும் கணக்குத்துறை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகத்தின் நிதிக் கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்; கருவூலம் மற்றும் கணக்குத்துறை இயக்குநரின் கடிதத்தில் நடப்பு நிதியாண்டுக்கு (2025-2026) கடன் மற்றும் முன் பணத்துக்கான (வாகனம், கணினி) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு பெறுவதற்கான கடிதம் அனுப்ப பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் கூறப்பட்டுள்ளது.

புதிய படிவம்: இதையடுத்து, ஏற்கெனவே அனுப்பி நிலுவையில் உள்ள கடன் மற்றும் முன்பணம் தொடர்பான விண்ணப்பங்களுக்கும், இனி அனுப்பவுள்ள விண்ணப்பங்களுக்கும் தற்போது புதிதாக வழங்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்வது கட்டாயமாகும்.

அதேபோல், அதில் கூறியுள்ள அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றுமாறு அனைத்து முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தெரி வித்துக் கொள்ளப்படுகிறது. அப்போதுதான் விண்ணப்பங்கள் ஏற்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

வங்கிக் கடன் இணைப்புத் திட்டத்தின் கீழ்

சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை, ஜூலை 10 தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கமானது, சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கி, குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்பட வாய்ப்புகள் ஏற்படுத்தி வருகிறது. குழுக்களின் தொழில் வளர்ச்சியடையும் போது, தேவைப்படும் கூடுதல் நிதியை சுய உதவிக் குழுக்கள் வங்கிக் கடன் இணைப்பு திட்டத்தின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்ய இயலாது.

கடன் உதவி

இதனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு சுய உதவிக் குழுவின் பெண் உறுப்பினர்களும், சொந்தமாக தொழில் புரிந்து தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும், தேவைப்படும் கடன் தேவைகளை, வங்கிகளிலிருந்து எளிதில் பெற்றிடவும் உதவிடும் வகையில் பெண்கள் தலைமையிலான தொழில்களுக்கு பிரத்யேக கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் நிலையான முதலீடு அல்லது  நடைமுறை முதலீடும் இணைந்த இருவகையான கடன்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். பிணையம் எதுவும் இன்றி ரூ.75,000/- முதல் ரூ.10 லட்சம் வரை, வேளாண் சார்ந்த மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள், பண்ணை சாரா தொழில்கள், உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. வங்கிகள் வழங்கிய கடன் தொகையை தவணை தவறாமல் உரிய காலத்திற்குள் திருப்பிச் செலுத்தும் பெண் தொழில் முனைவோருக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை நிலுவையில் உள்ள கடன்களுக்கான வட்டியில், 2% மானியமாக வழங்கப்படுகிறது.

சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்காக வங்கிகள் பிரத்யேகமாக இக்கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் இணைந்திருக்கும் சுய உதவிக் குழுவிலுள்ள அனைத்து தகுதியான உறுப்பினர்களும், இத்திட்டத்தின் கீழ் கடன் பெற, அவர்கள் வசிக்கும் பகுதியிலுள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் அல்லது கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளையை அணுகி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *