சென்னை, ஜூலை 9- பாம்புக் கடியால் உயி ரிழப்பு ஏற்படுவதை தடுக்க, தமிழ்நாட்டில் பாம்புக் கடிக்கு எதிரான விஷமுறிவு மருந்து தயாரிக்கும் ஆலையை அமைக்க, ‘டிட்கோ’ எனப்படும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் திட்ட மிட்டுள்ளது.
ஆண்டுதோறும் சராசரியாக, 20 லட்சம் முதல், 40 லட்சம் பாம்புக்கடி சம்பவங்கள் நடக்கின்றன.
இதில், 60,000 பேர் உயிரிழக்கின்றனர். பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டவருக்கு, ‘ஆன்டிவெனோம்’ எனப்படும் விஷமுறிவு மருந்து விரைவாக கிடைக்காததே இவ்வளவு உயிரிழப்புக்கு காரணம்.
இந்த மருந்தை தயாரிக்கும் ஆலைகள், மகாராட்டிரா, தெலங்கானாவில் மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ளன.
அந்த ஆலைகளுக்கு, தமிழ்நாட்டில் இருந்து தான் பாம்புகளிடம் இருந்து, விஷம் எடுக்கப் பட்டு அனுப்பப்படுகிறது.
தமிழ்நாட்டில் இருளர் பாம்பு பிடிப்போர் தொழிற் கூட்டுறவு சங்கம் உள்ளது.
அதில், 339 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த சங்கம், பாம்பு விஷத்தை எடுத்து, ஆராய்ச்சி நிறுவனங்கள், மருந்து ஆய்வகங்களுக்கு விற்கிறது.
இந்நிலையில், தமிழ் நாட்டில் பாம்புக்கடிக்கு எதிரான விஷமுறிவு மருந்து தயாரிக்கும் ஆலையை, ‘டிட்கோ’ நிறுவனம், தனியார் நிறுவனத்துடன் இணைந்து அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதற்கு, விருப்பம் உள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. ஆலை அமைக்க விருப்பம் உள்ள தனியார் நிறுவனங் களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.