சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்!
திருப்புமுனை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்க மாநாடுகள் (9)
திரு. எம். ஆர். ஜெயகர் அவர்கள் தலைமையில் 10.5.30ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்கள்
(அ) வருணாச்சிரமக் கொள்கையும், ஜாதிப்பிரிவினை யுமே இந்திய சமூகக் கேடுகளுக்கு மூலகாரணமென்று இம்மாநாடு கருதுகிறது. பிரிவினையால் ஏற்றத் தாழ்வு ஏற்படுமென்னும் கொள்கையை இம்மாநாடு மறுப்பதுடன், அக்கொள்கையை வெளியிடும் வேதபுராணங்களின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமெனத் தீர்மானிக்கிறது.
(ஆ) பட்டப் பெயர்கள் ஜாதி குலங்களைக் குறிப்பதாலும், அவற்றின் மூலம் சமூகப் பிரிவுகளை வளர்த்துக் கொண்டுபோவதால் பட்டப் பெயர்களை விட்டுவிட வேண்டுமென்றும், மதத்தையும் ஜாதியையும் குறிக்கும் சின்னங்களைத் தேகத்தின் எப்பாகத்திலும் தரிக்கக்கூடா தென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.
(இ) தீண்டாமை என்னும் கொடுமை மனித தர்மத்திற்கு விரோதமென்று இம்மாநாடு கருதுவதுடன், ஜனசமூகத்தில் எந்த வகுப்பாருக்கும் பொது உரிமைகளை மறுக்கும் பழக்க வழக்கங்களை உடனே ஒழிக்க வேண்டு மென்றும், பொது ரஸ்தாக்கள், குளங்கள், கிணறுகள், தண்ணீர்ப் பந்தல்கள், கோயில்கள், சத்திரங்கள் முதலிய இடங்களில் சகலருக்கும் சம உரிமை வழங்கவேண்டுமென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.
(ஈ) பிறப்பின் பேரால் ஏற்பட்ட சமூகக் கொடுமையையும் வித்தியாசத்தையும் அடியோடு ஒழிப்பதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகள், பெரிதும் அவைகளைக் காப்பாற்ற ஏற்பட்டவர்களின் தீவிர முயற்சிகளால் வெற்றிபெறாத நிலைமையில் இருப்பதால், பொதுஜன முன்னேற்றத்தைக் கருதி அவைகளைச் சட்டத்தின் மூலம் ஒழிக்கவேண்டுமென்று இம்மாநாடு கருதுகிறது.
(அ) வணங்குவோருக்கும், வணங்கப்படுவதற்கும் மத்தியில் தரகரையோ, பூசாரியையோ ஏற்படுத்துவது சுயமரியாதைக்கு விரோத மென்றும் தெய்வ வணக்கத்திற்கும் பணச் செலவு அனாவசியமென்றும் இம்மாநாடு கருதுகிறது. பூசாரிகளுக்குத் தற்காலம் விடப்பட்டிருக்கும் மானியங்களை ரத்துசெய்ய வேண்டுமென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.
கோவில் சொத்தை மக்களின் அறிவு வளர்ச்சிக்கு பயன்படுத்துவதால் கடவுள் கோபிக்குமா?
ஆயிரக்கணக்கான வருடங்களாக மூட நம்பிக்கைகளிலும்-குருட்டுத்தனமான பழக்கவழக்கங்களிலும் ஈடுபட்ட ஜன சமூகத்திற்கு கொஞ்சம் வேகமான மருந்து கொடுத்துத்தான் வியாதியை தீர்க்க வேண்டியிருக்கிறது.
இவ்வளவு கெடுதிகளுக்கு இருப்பிடமாக இருக்கும் இந்து கோவில்களை எப்படி கல்விக்கழகங்களாக ஆக்குவது?
முதலாவதாக கோவிலின் உட்புறத்தில் சரியான ஜன்னல்கள்,பெரிய வாசல்கள் முதலியன வைத்து அங்கு படிப்பே இல்லாமல் ஆயிரக்கணக்கான வருடங்களாக மேல் சாதிக்காரர்கள் என்பவரால் அழுத்தப்பட்டு கிடக்கும் ஆதித்திராவிடர்களுக்கு இலவசக் கல்வி சொல்லிக்கொடுக்க வேண்டும்.
அந்த பணத்திற்கு சர்க்காரிடத்தில் பல்லைக் காட்டிப்பணம் கேட்க வேண்டியதில்லை.
எங்கும் பரந்திருப்பதாகச் சொல்லப்படும் கடவுளுக்கு அவசியமில்லாத தங்க வாகனங்களை யும், ஆசையற்ற கடவுளுக்கு அவசியமில்லாத நகை களையும் விற்று ஆதிதிராவிட குழந்தைகளுக்குக்குத் துணி,புத்தகம் வாங்கிக் கொடுக்க வேண்டும்.செப்புப் பொம்மைக்கு குடம் குடமாக ஊற்றும் பாலை,பாலே பாத்திராத பாமரக் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
வாணவேடிக்கைக்கு விரயமாகும் பணத்தை கொண்டு health exhibition துவங்கி சுகாதாரத்தை போதிக்கக்கூடிய காட்சிகளை காண்பிக்க வேண்டும்.பார்ப்பதற்கு சகல மதத்தினரையும் அனுமதிக்க வேண்டும்.
உற்சவங்களுக்கு செலவழிக்கப்படும் லட்சக் கணக்கான திரவியத்தை கொண்டு பெரிய நூலகங்கள் வைக்க வேண்டும்.
உண்டியலில் வியாதிக்காகவும், பிற காரிய வேண்டுதலுக்காகவும் ஜனங்கள் கொண்டு வந்து கொட்டும் பணத்தைக் கொண்டு கோயில் நிலங்களிலேயே அனைத்து வித விஞ்ஞான வசதி கொண்ட ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும்.பெரிய கல்வி நிலையங்கள் கட்ட வேண்டும்.
” கோவில் சொத்தை மக்களின் அறிவு வளர்ச்சிக்கு பயன்படுத்துவதால் எந்த கடவுளுக்கும் கோபம் வந்துவிடாது.
மனிதனுடைய அறிவு வளர்வது கண்டு எந்த கடவுளாவது கோபித்துக் கொண்டு தனக்கு சர்ச் வேண்டும், பள்ளிவாசல் வேண்டும், கோவிலும் கோபுரமும் வேண்டுமென்றால் அந்த பேராசை கடவுள் நமக்குத் தேவையில்லை.
– தந்தை பெரியார். குடிஅரசு – 9.10.1932
(ஆ) கோயில்கள், மடங்கள் ஆகியவைகளின் வருமானங்களைப் படிப்பு, சுகாதாரம் அபிவிருத்திக்காகச் செலவிடுவதுதான் மேல் என்றும், புதிதாக மடங்களும், வேத பாடசாலைகளும், அன்ன சத்திரங்களும் கட்டுவது அனாவசியமென்றும் இம்மாநாடு கருதுகிறது.
(அ) பெண்களின் விவாக வயதை 16 ஆகவும், ஆண்களின் வயதை 19 ஆகவும் சட்டப்படி நிர்ணயிக்க வேண்டுமென இம்மாநாடு வற்புறுத்துகிறது.
(ஆ) ஜாதி, வகுப்பு வித்தியாசங்களின்றி ஒருவருக் கொருவர் விவாகம் செய்துகொள்ள அனுமதிக்கத்தக்க சிவில் விவாகச் சட்டமொன்று இயற்றப்படவேண்டுமென்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
(இ) தகுதியான இந்துமத விவாகரத்துச் சட்டமொன்று இயற்றப்பட வேண்டுமென்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
(ஈ) விவாகங்களும், மற்ற சடங்குகளும் குறைந்த நேரத்தில் குறைந்த பணச்செலவிலும் நடத்தப்பட வேண்டுமென்றும், விவாகச் சடங்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒரு நாளுக்கு மேற்படக்கூடாதென்றும் இம்மாநாடு வற்புறுத்துகிறது.
(உ) ஆண்களைப்போன்று பெண்களுக்கும், சொத்து உரிமை, வாரிசு பாத்தியம் ஆகியவைகளில் சம உரிமை இருக்கவேண்டுமென்றும், எந்தத் தொழிலிலும் ஈடுபடவும் அதைக் கையாளவும் சமஉரிமை இருக்க வேண்டுமென்றும் குறிப்பாக ஆரம்பக் கல்வி உபாத்தியாயர் விஷயத்தில் அவர்களை அதிகமாக நியமிக்க வேண்டுமென்றும் இம்மாநாடு அபிப்பிராயப்படுகிறது.
மதத்தின் பெயரால் பெரும்பான்மை மக்களுக்கு இழைக்கப்படும் பல அநீதிகளுக்கு அலட்சியமாக இருப்பதை விடச் சர்க்கார் தற்சமயம் மதசம்பந்தமாக நடுநிலைமை வகித்து வருவதாக இம்மாநாடு அபிப்பிராயப்படுவதால், அக்கொள்கையைக் கைவிட்டு விடவேண்டு மென்றும், தற்போதுள்ள சட்டத்தை மாற்றுவதற்கு அவசியமான மாறுதல்களைச் செய்துவரும் சமூகச் சீர்திருத்தப் போராட்டத்தில் சர்க்கார் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டுமென்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
இத்தேச மக்களின் வறுமையைப் போக்கி, அவர்களுடைய பொருளாதார நிலைமையைச் சீர்படுத்தக் குடியை ஒழிக்கவேண்டுவது அவசியமென இம்மாநாடு கருதுவதுடன், பூரண மதுவிலக்கைக் கொண்டுவரச் சர்க்காரும், ஜனங்களும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டு மென்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
விபச்சாரத் தடை மசோதா ஒன்று கொண்டுவந்து நிறைவேற்றியதற்கு இம்மாநாடு சென்னைச் சட்டசபையைப் பாராட்டுவதுடன், அச்சட்டத்தை உடனே அமலுக்குக் கொண்டுவர வேண்டுமென்றும், சர்க்கார் தாராளமாக கிராண்ட்டுகள் அனுமதித்துப் பெண்கள் பாதுகாப்பு விடுதிகள் ஏற்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறது.
நம்மவர்களின் தினசரி வாழ்க்கைக்கு அத்தியாவசி யமான ரஸ்தா, குளம், கிணறு, கோயில் முதலியவைகளில் நாம் சமஉரிமை அடைவதற்கு முடியாதபடிச் சில சுயநலக் காரர்கள் தடையாகவிருப்பதால், அவ்வுரிமைகளை நிலை நாட்டவும் மற்றும் சுயமரியாதைக்கு விரோதமாக உள்ள இடங்களி லெல்லாம் சுயமரியாதையை நிலை நாட்டவும் சாத்விக முறையில் சத்தியாக்கிரகம் செய்ய வேண்டுமென்றும் இக்கூட்டம் தீர்மானிப்பதோடு, பல முக்கியஸ்தர்களடங்கிய கமிட்டியையும் நியமிக்கிறது.
தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தத்தில் சம்பந்தப்பட்டதற்காகத் தண்டிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர் தலைவர்களைச் சர்க்கார் நியாயமாக நடத்த வேண்டுமென்றும், அவர்களை “ஏ’ வகுப்புச் சிறைவாசிகளாக மாற்றவேண்டுமென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.
இளைஞர் மாநாட்டின் தீர்மானங்கள்
கேரள தேசத்தில் தீண்டப்படாத ஜாதியாரின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கும், மதுவிலக்கிற்கும் ஈடு பட்டிருந்த டி. கே. மாதவன் அவர்களும், பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்கும் இளைஞர் இயக்கத்திற்கும் பேருதவி செய்துவந்த பட்டுக்கோட்டை, எஸ். வேணு கோபால் நாயுடு அவர்களும் காலம் சென்றமைக்காக இம்மாநாடு மிகவும் வருந்துவதுடன், அவர்களுடைய குடும்பத்தாருக்கு அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
சமூகக் கொடுமைகளைப் போக்குவதற்கு உடனே சத்தியாக்கிரக இயக்கம் ஆரம்பிக்க வேண்டியிருப்பதால், சுயமரியாதை மாநாட்டாரால் நியமிக்கப்பட்டிருக்கும் கமிட்டியாரை விரைவில் சத்தியாக்கிரகம் தொடங்குவதற்கான ஏற்பாடு செய்யும்படி எல்லா முடிவுகளுக்கும் இளைஞர்கள் கட்டுப்பட்டுச் சத்தியாக்கிரகத்திற்குத் தயாராகும்படி இம்மாநாடு தீர்மானிக்கிறது.
எந்தப் பொதுக்கூட்டங்களிலும் ஆரம்பத்திலாவது முடிவிலாவது ராஜ வணக்கம், கடவுள் வணக்கம், தலைவர்கள் வணக்கம், ஆகியவைகள் செய்யும் காரியத்தை விட்டுவிட வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக் கிறது.
இளைஞர்கள் கலியாணம் செய்து கொள்வதாயிருந்தால், நம் நாட்டிலுள்ள கலியாணம் செய்துகொள்ள அபிப்பிராயமுள்ள விதவை களையே முக்கியமாய்க் கலியாணம் செய்துகொள்ள வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது.
(அ) ஒவ்வொரு கிராமத்திலும் நமது வாலிப சகோதரர்கள் சங்கத்தை ஏற்படுத்துவது.
(ஆ) ஏழை மக்களுக்கு இராப்பள்ளி (இரவு பாடசாலை) ஏற்படுத்திக் கல்வியைப் போதிப்பதுடன், நமது இயக்க நோக்கங்களையும் போதிப்பது.
(இ) இளைஞர்கள் தங்கள் ஓய்வுக் காலங்களில் கிராமங்களுக்குச் சென்று அல்லது தங்கள் தங்கள் கிராமங்களில் இயக்கப் பிரச்சாரம் செய்வது.
(ஈ) சங்கத்திற்குப் போதிய பண உதவி பெற்று மிஷனரி பெண்கள் மாதிரி படித்த பெண்களைச் சம்பளத்திற்கமர்த்தி கிராமங்களில் உள்ள படியாத, திருந்தாத பெண்களுக்குக் கல்வி போதிப்பதுடன், நமது இயக்கக் கொள்கைகளையும் போதிப்பது ஆகிய காரியங்கள் செய்ய வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
அரசாங்கத்திலுள்ள எந்த உத்தியோகத்திற்கும் மாதம் ஆயிரம் ரூபாய்க்குமேல் சம்பளம் ஏற்படுத்தாதிருக்கும்படி அரசாங்கத்தாருக்கும் அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.
அடுத்த ஜனசங்கியைக் கணக்கெடுக்கையிலும், ஜனன, மரணக் சுணக்கிலும் மதம், ஜாதி, பட்டம் ஆகிய பெயர்களைக் கொடுக்கக் கூடாதென்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்வதாய்த் தீர்மானிக்கிறது.
எதிர்கால வாழ்க்கையை உணர்ந்துகொள்ள முடியாத சிறுமிகளைக் கடவுளின் பேரால் பொட்டுக்கட்டிப் பொருளுக்காக நிர்ப்பந்தக் காதலில் ஈடுபடுத்தும் அநாகரிகமான பழக்கத்தை ஒழிக்க இளைஞர்களும் முன்வருவதோடு, விபச்சாரத்திற்கு அடிப்படையாய் அர்த்தமற்ற முறையில் கட்டப்பட்ட பொட்டுகளை அறுத்தெறிந்துவிட்டு, முன் வரும் சகோதரிகளை ஆதரித்துத் திருமணம் செய்துகொள்ள இளைஞர்கள் முன் வரவேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
இழி தொழிலாகிய விபச்சாரத்திற்கு விளம்பரமாய் ஆடல், பாடல், சங்கீதம் முதலியவைகளைப் பழக்கிக் கொண்டு ஜீவனம் செய்யக் கடவுளின் பெயரால் பொட்டுக் கட்டிக்கொண்டு விபச்சார விடுதிகளை அபிவிருத்தி செய்து வரும் தேவதாசிச் சகோதரிகளை எந்த விசேடத்திற்கும் ஜன சமூகம் அழைக்கக்கூடாதென்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
மக்களின் வறுமை நிலையைப் போக்கவும். இன்ப வாழ்வைப் பெருக்கவும், கர்ப்பத்தடை செய்யும் விஷயத்தில் எல்லோரும் கவனம் செலுத்துமாறு இம்மாநாடு மக்களைக் கேட்டுக்கொள்கிறது.
சென்னை நகரசபையார் ஆக்கியிருப்பதைப் போல் விபச்சார விடுதி ரத்துச்சட்டம் ஒன்றை ஒவ்வொரு முனிசிபல் சபையாரும் அமைக்க வேண்டுமென்று அவர்களை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது. விபச்சாரத்தை முற்றிலும் நீக்கத்தக்க ஒரு சட்டத்தைச் சீக்கிரம் நிறைவேற்ற வேண்டுமென இந்திய சட்டசபை மெம்பர்களை இம்மாநாடு வேண்டுகிறது.
பிறருடைய உதவியை எதிர்பார்த்து வாழ்வது சுயமரியாதைக்கு விரோதமானதால், ஒவ்வொரு இளைஞனும் தனது உழைப்பினால் பிற்கால வாழ்வை நடத்திக் கொண்டு யாருடைய உதவியையும் எதிர்பாராது சமூக ஊழியஞ் செய்வதற்குத் தயாராகும்படி இம்மாநாடு தீர்மானிக்கிறது.
(அ) பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு மத விஷயங்களைப் போதிக்காதிருக்கும்படியும், மூடப் பழக்க வழக்கங்களைப் போதிக்கும் புத்தகங்களைப் பாடமாக வைக்காதிருக்கும் படியும் பள்ளிக்கூட அதிகாரிகளையும்,
(ஆ) மத விஷயங்களைப் போதிக்கும் பள்ளிக்கூடங்களுக்கு உதவி செய்யாதிருக்கும்படி அரசாங்கத்தையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
மாதர் மாநாட்டுத் தீர்மானங்கள்
ஆண், பெண் என்னும் இருபாலருக்கும் சுட்டாய இலவசப் படிப்பு சீக்கிரம் கொடுக்கவேண்டுமெனவும், பெண்பாலரைக் குறைந்தது 16 வயது வரையிலாவது பள்ளிக்கூடங்களுக்குச் செல்ல விட வேண்டுமெனவும் தாய்ப் பாஷையிலேயே பாடங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டுமெனவும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.
இளைஞர் கலியாண ரத்துச் சட்டத்தைக் கொண்டு வந்த ராவ்பகதூர் ஹரிவிலாச சாரதா அவர்களுக்கும் அச்சட்டம் நிறைவேறுவதற்கு அனுகூலமாய் இருந்த இந்திய சட்டசபை அங்கத்தினர்களுக்கும் தங்கள் உண்மை நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்தச் சட்டத்தை அமலில் கொண்டுவரும் விஷயத்தில் அரசாங்கத்தார் எல்லாப் பகுதிகளையும் சரியாகக் கவனிக்க வேண்டுமெனவும் அரசாங்கத்தை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
சொத்தில் உரிமை பாத்தியம், குழந்தைகளுக்குக் கார்டியன் பாத்தியம், ஸ்வீகாரம் எடுத்துக்கொள்ளல் இவைகளில் ஆண், பெண் இருபாலருக்கும் முழுச் சம உரிமை இருக்கவேண்டுமென்றும் இம்மாநாடு அபிப்பிராயப் படுகிறது.
சிறுவயதுப் பெண் குழந்தைகளைத் தேவடியாள்களாகத் தயாரித்து பொதுவில் ஆடவும், பாடவும் விட்டுப் பொருள் சம்பாதிப்பதற்காகத் தயாரிக்கும் வழக்கத்தை இம்மாநாடு கண்டிப்பதோடு, இந்தியா சட்டசபையில் திரு. ஜெயகர் கொண்டு வந்திருக்கும் பொட்டுக்கட்டும் வழக்கம் மறுப்பு மசோதாவையும், சென்னைச் சட்டசபையிலிருக்கும் டாக்டர் முத்துலட்சுமி அவர்களின் மசோதாவையும் முழு மனமாய் ஆதரித்து அவை சீக்கிரம் சட்டமாக ஆக்கப்பட வேண்டுமென்றும் வேண்டுகிறது.
நம் நாட்டு ஏழை மக்களின் பொருளாதாரக் கஷ்டங்களை நிவர்த்திப்பதற்காகப் பொது ஜனங்கள் இனிக் கதர் சுதேசிப் பொருள்களையே உபயோகிக்க வேண்டுமெனவும், வெளிநாட்டுப் பொருள்களைப் பகிஷ்கரிக்கவேண்டுமெனவும் பொதுமக்களை வேண்டிக்கொள்கிறது.
பெண்கள் தங்களுக்குள்ள நாட்டுப் பொறுப்பை உணர்ந்து சமூகத் தொண்டில் ஈடுபட்டு அனாதை இல்லம், சிறைச் சீர்திருத்தம், கவுரவக் கல்வி வேலை, கூடா ஒழுக் கத்தினரைத் தடுத்தல், தாய் – சிசு சம்ரட்சண வேலை முதலியவைகளில் ஈடுபடவேண்டுமெனவும் பெண்மக்களை வேண்டுகிறது.
பெண்கள் சட்டசபைக்கும், நகர பரிபாலன சபைக்கும் தேர்ந்தெடுக்கும் படியான சாதனங்களைப் புருஷர்கள் ஸ்திரீகளுக்கு ஏற்படுத்த வேண்டுமென்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
இழி தொழிலாகிய விபச்சாரத்திற்கு விளம்பரமாய் ஆடல், பாடல், சங்கீதம் முதலியவைகளைப் பழக்கிக் கொண்டு ஜீவனம் செய்யும் தேவதாசிச் சகோதரிகளைக் கலியாண உற்சவம் போன்ற விசேஷங்களுக்கு ஜன சமூகம் அழைக்கக் கூடாதென்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
கடவுளின் பேரால் பொட்டுக் கட்டியுள்ள தேவதாசிச் சகோதரிகள் தங்கள் பொட்டை அறுத்தெறிந்துவிட்டு மனத்திற்கிசைந்த ஒரு கணவனை மணந்துகொள்ள வேணுமாய் இம்மாநாடு தீர்மானிக்கிறது.
இம்மாநாடு முற்றிலும் குடியை ஒழிக்கத்தக்க நிலைமையை அடைந்துவிட்டதென முற்றிலும் நம்புவதோடு, அக்குடியையொழிக்கும் விஷயத்தில் முதல்படியாக எல்லா நகரங்களிலுமுள்ள கள், சாராயக் கடைகளை உடனே மூடிவிட வேண்டுமெனவும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.
மணமகனும், மணமகளும் ஒத்து வாழ்க்கை நடத்துவதில் மனமுவந்து வாழ முடியாவிட்டால், விவாகத்தை ரத்து செய்துவிட ஒரு சட்டம் ஏற்படுத்தவேண்டுமென அரசாங்கத்தை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
இந்நாட்டிலுள்ள பல கெடுதல்களுக்கும் அடிப்படை யானதும், வருந்தத்தக்கதுக்கும் காரணமாகவிருப்பது ஜாதி பேதந்தானென்றும், ஆதலால், எல்லா ஜனங்களும் ஜாதி வித்தியாசத்தை ஒழித்துத் தீண்டாமை என்னும் கொடிய வழக்கத்தையொழிக்க திரு. ஜெயகர் கொண்டு வந்திருக்கும் மசோதாவை எல்லாப் பொது ஜனங்களும் ஆதரிக்க வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது.