‘சமூக நீதிக்கான சரித்திர நாயகர்’ என்று தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தொலைநோக்கோடு குறிப்பிட்டது – நூறு விழுக்காடு துல்லியமானது என்பதை முதலமைச்சரின் ஒவ்வொரு செயல்பாடும் அன்றாடம் நிரூபித்துக் கொண்டு இருக்கிறது.
தந்தை பெரியார் பிறந்த நாளை ‘சமூகநீதி’ நாள் என்று அறிவித்ததை அதன் தொடக்கமாகக் கூறலாம்.
சுயமரியாதை இயக்கத்தின் – திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை என்றால் ஜாதி ஒழிப்பும் – பெண்ணுரிமை ஒழிப்புமேயாகும்.
இந்தப் பணிக்கு, இம்முயற்சிக்கு எவை எல்லாம் தடையாக உள்ளனவோ அவற்றின் வேர் வரை சென்று நிர்மூலப்படுத்துவதுதான் நம் அணுகுமுறைகளாகும்.
கடவுள்தான் பிறப்பின் அடிப்படையில் வருண தர்மத்தைப் படைத்தான் என்றால், அந்தக் கற்பிதக் கடவுளையும் – அதனை வலியுறுத்தும் மதம் – வேதம் – இதிகாசம் – புராணம் உள்ளிட்டவைகளையும் ஒழித்துக் கட்ட வேண்டியது மனித சமத்துவத்தில் அக்கறை உள்ள மனிதர்களின் தவிர்க்கவே முடியாத முழு முதற்கடமையாகும்.
இவற்றைத் தான் தந்தை பெரியார் தன் வாழ்நாளின் முதன்மைப் பணியாகவே கருதி பிரச்சாரக் களப் பணியையும், போராட்டங்களையும் நடத்தி வந்தார்.
ஜாதியைப் பாதுகாப்பது – அரசமைப்புச் சட்டம் என்று வரும்போது, அந்த சட்டப் பிரிவையும் எரிக்கும் போராட்டத்தையும் அறிவித்து செயல்படுத்திக் காட்டினார் தந்தை பெரியார்.
மூன்று ஆண்டுத் தண்டனை என்று தனி சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையிலும், சற்றும் பொருட்படுத்தாமல் பத்தாயிரம் திராவிடர் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக சட்டத்தை எரித்து சிறை ஏகினர் என்பது எங்கும் கேள்விபட்டிராத புரட்சிகரமான செயல்பாடாகும்!
கர்ப்பவதிப் பெண்களும்கூட சிறை சென்று, சிறையில் பிறந்த குழந்தைகளுக்குச் சிறைப் பறவை என்றும், சிறை வாணி என்றும் பெயர் சூட்டிய வரலாறு வேறு எந்தக் கட்சிக்கு, அமைப்புக்கு உண்டு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
செங்கற்பட்டில் சுயமரியாதை மாநாடு கூட்டி பெயருக்குப் பின்னால் ஒட்டியிருந்த ஜாதிப் பட்டத்தை நறுக்கித் தூக்கி எறிய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதோடு அல்லாமல், அந்த மாநாட்டு மேடையிலேயே வழிகாட்டும் வகையில் முன்னணித் தலைவர்களே தங்கள் பெயருக்குப் பின்னால் தொங்கிக் கொண்டிருந்த ஜாதியை அகற்றுவதாகப் பிரகடனம் செய்யவில்லையா? 1927ஆம் ஆண்டிலேயே நாயக்கர் என்பதை தூக்கி எறிந்தவர் தந்தை பெரியார்.
அந்த அடிப்படையில்தான், தமிழ்நாடு சட்டப் பேரவையில் நமது முதலமைச்சர் பேசும்போது (29.4.2025) ‘இந்த மண்ணின் ஆதிக்குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக காலனி என்ற சொல் பதிவாகியிருக்கிறது. ஆதிக்கத்தின் அடை யாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும், வசைச் சொல்லாகவும், இது மாறியிருப்பதால் இனி இந்தச் சொல் அரசு ஆவணங்களிலிருந்தும், பொதுப் புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாகவே ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாக நீதிபதி திரு. சந்துரு அவர்கள் தலைமையில் ஓர் ஆணையத்தை முதலமைச்சர் அமைத்தார்.
அரசு, தனியார் பள்ளிகளின் பெயர்களோடு உள்ள ஜாதி முன்னொட்டுகளையும், பின்னொட்டுகளையும் நீக்க வேண்டும் என்று அந்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
மாணவர் விடுதிகள் – பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், ஆதி திராவிடர் – பழங்குடியினர், சிறுபான்மையினர் என மொத்தம் தமிழ்நாட்டில் உள்ள 2730 விடுதிகளில் 1,79,569 இருபால் மாணவர்கள் அவ்விடுதிகளில் தங்கிப் பயன் அடைந்து வருகின்றனர்.
இந்த விடுதிகளை அடையாளப்படுத்தும் ஜாதிப் பெயர்களை அகற்றி, பொதுவாக ‘சமூகநீதி விடுதிகள்’’ என்று அழைக்கப்படும் என்று திராவிட மாடல் அரசு அறிவித்திருப்பது – வரலாற்றுப் புகழ் வாய்ந்த – பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வரலாற்று வைர அத்தியாயம் ஆகும்.
காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் சேரன் மாதேவியில் நடத்தப்பட்ட ‘பரத்வாஜ்’ ஆசிரமத்தில் ஜாதி வேறுபாடு காட்டப்பட்டதற்காக தந்தை பெரியார் எதிர்த்துப் போர்க் கொடி தூக்கினார் – முடிவில் குருகுலம் இழுத்து மூடப்பட்டது என்பது வரலாறு.
இந்த நேரத்தில் இதனையும் சுட்டிக் காட்ட வேண்டியது பொருத்தமானதாகும். ‘திராவிட மாடல்’ அரசு இது என்பதற்கு இதைவிட ஆதாரங்கள் தேவையும் உண்டோ!
ஒரு கால கட்டத்தில் உணவு விடுதிகளில் பஞ்சமர்களும், நாய்களும், பெரு நோய்க்காரர்களும் உள்ளே நுழையக் கூடாது என்று சென்னை நகர உணவு விடுதிகளில் சென்னையிலேயே விளம்பரப் பலகை வைத்திருந்தனர். (‘குடிஅரசு’ 3.5.1936)
இரயில்வே உணவகங்களில் ‘பிராமணாள்’, ‘சூத்திராள்’ என்று இடம் பிரிக்கப்பட்டு இருந்ததே – அதனை எதிர்த்து வெற்றி கண்டவர் தந்தை பெரியார்.
பார்ப்பனரல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதி இல்லாத காரணத்தால்தான் டாக்டர் சி. நடேசனார் ‘திராவிடர் விடுதி’யைத் தொடங்கி அவர்களுக்கு வசதி செய்து கொடுத்தார் (1916).
இந்த வரலாற்றுப் பின்புலத்தை எல்லாம் உணர்ந்ததால் தான், ‘திராவிட மாடல்’ அரசின் ‘சமூகநீதி விடுதிகளின்’ அருமையும், உண்மையும் புரியும்!