பெரம்பலூர், ஜூலை 9- கோவில் தேரோட்டத்தின்போது அச்சு முறிந்து தேர் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பக்தர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
திருவிழா
பெரம்பலூர் மாவட்டம் கோவில்பா ளையம்-தேனூர் கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடந்து வரும் திருவிழாவையொட்டி தேரோட்டம் நேற்று (8.7.2025) காலை நடந்தது. இதில் 3 தேர்களில் அலங்க ரிக்கப்பட்ட அய்யனார் உள்ளிட்ட சிலைகள் வைக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. பின்னர் 3 தேர்க ளையும் கிராம மக்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அய்யனார் சிலை வீற்றிருந்த தேரின் மரசக்கர அச்சு திடீரென முறிந்தது. இதனால் அந்த தேர் சரிந்து பக்கத்தில் இருந்த மற்றொரு தேர் மீது சாய்ந்தது.
இதில் தேரின் மேலே அலங்க ரிக்கப்பட்டிருந்த பகுதி கீழே விழாமல், சாய்ந்த நிலையிலேயே இருந்ததால் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிக எடை தாங்காமல் சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த மரத்தினாலான சக்கரத்தின் அச்சு முறிந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தேரோட்டத்தில் பங்கேற்க வந்திருந்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தேரின் அச்சு முறிந்ததை அறிந்தவுடன் உடனடியாக மீண்டும் தேரோட்டம் நடை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தார். மேலும் அச்சு முறிந்த தேருக்கு புதிதாக இரும்பினாலான சக்கர தேர் செய்து தருவதாக அமைச்சர் உறுதி அளித்தார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
உடனடியாக பொக்லைன் எந்தி ரம் வரவழைக்கப்பட்டு சாய்ந்த நிலையில் இருந்த தேரை சரியான நிலைக்கு கொண்டு வந்தனர். அதில் இருந்த சிலைகளை வேறு தேருக்கு மாற்றும் பணி அமைச்சர் முன்னி லையில் நடைபெற்றது. சுமார் 4 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் தேரோட்டம் தொடங்கியது.