மகளிரும் – எதிர்ப்புரட்சியும் (2)
5:150. “அவள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். வீட்டுச் செயல்களைத் திறம்பட ஆற்ற வேண்டும். பாத்திரங்களைக் கவனமாகக் கழுவி வைக்க வேண்டும். செலவில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.”
இதைப் பெண்களுக்குரிய மிக உயர்ந்த இலட்சியமாக இந்துக்கள் கருதுகிறார்கள்.
இதை மனுவின் காலத்திற்கு முன்பு பெண்கள் இருந்த நிலையுடன் ஒப்பிடுக.
பிரம்மச்சரியத்தை முடித்தபின் ஒரு பெண் திருமணத்திற்குத் தகுதியுடையவள் ஆகிறாள். எனினும் அதர்வ வேதக் கூற்று பெண்களுக்கு பூணூல் சடங்கு செய்யும் உரிமையிருந்ததைக் காட்டுகிறது. சிரவுத்த சூத்திரங்கள் கூறுவதிலிருந்து பெண்கள் வேத மந்திரங்களைப் பயிலலாமென்றும், பெண்களுக்கு வேதக் கல்வி புகட்டப்பட்டதென்றும் அறிகிறோம். பாணினியின் ‘அஷ்டாத்யாயி மூலம் பெண்கள் குருகுலத்தில் பயின்றனர் என்பதற்கும் சான்றுகள் கிட்டியுள்ளன. பதஞ்சலியின் மகாபாஷ்யத்தில் பெண்கள் வேதம் பயிற்றுவிக்கும் ஆசிரியராகிச் சிறுமியருக்குக் கற்பித்து வந்தனர் என்றும் அறிகிறோம். மதம், தத்துவம் மெய்யியல் போன்ற நுண்பொருள் பற்றிய பொது மன்ற விவாதங்களில் பெண்கள் ஆண்களுடன் ஈடுபட்டனர் என்றும் அறிகிறோம். ஜனகருக்கும் சுல்பாவுக்கும் இடையேயும், யாக்ஞவல்கியருக்கும் கார்க்கிக்கும் இடையேயும், சங்கராச்சாரியருக்கும் வித்யாதரிக்கும் இடையேயும் யாக்ஞவல்கியருக்கும் மைத்ரேயிக்கும் இடையேயும் நிகழ்ந்த விவாதம் மனுவிற்கு முந்தைய காலத்தில், மகளிர் கல்வியிலும் ஆய்விலும் உயர்நிலை அடைந்திருந்தனர் என்பதைக் காட்டுகின்றன.
மனுவிற்கு முந்தைய காலத்தில் மகளிருக்கு மதிப்பு இருந்ததை மறுக்க முடியாது. பழங்கால இந்தியாவில், அரசனின் முடிசூட்டு விழாவில் சிறப்பாகப் பங்கேற்ற முதன்மையானவர்களில் அரசியும் முதன்மையானவர். ஏனைய பெரியோருக்கு மதிப்பு செலுத்தியது போலவே, அரசன் அரசிக்கும் காணிக்கை (ஜெய்ஸ்வால், இந்திய அரசமைப்பு, பகுதி 2, பக். 16.) வழங்கினான். அரசிக்கு மட்டுமல்லாமல் கீழ் ஜாதியைச் (மேற்படி பகுதி 2, பக். 17) சேர்ந்த மனைவிகளுக்கும் அரசன் மதிப்பு செலுத்தினான். அதுபோலவே தலைமை வழிகாட்டு (மேற்படி பக். 82.) அலுவலர்களின் மனைவியருக்கும் அரசன் மதிப்பு செலுத்தினான்.
கவுடில்யரின் (சாம் சாஸ்திரி, கவுடில்யரின் அர்த்த சாத்திரம், பக். 175) காலத்தில் ஆடவர் 16 வயதிலும் மகளிர் 12 வயதிலும் வயது வந்தவர்களாகக் கருதப்பட்டனர். திருமண வயதும் வயதுக்கு வந்த நிலையும் ஒன்றெனக் கருதப்பட்டது. பவுதாயணரின் கிருஹ்ய சூத்திரங்களிலிருந்து தெரியவருவது பருவம் எய்திய பின்னரே திருமணம் ‘நிகழ்த்தப்பட்டது என்பதாகும்’. திருமணக் காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டால் அதற்கென கழுவாய் செய்யும் சடங்கு கிருஹ்ய சூத்திரத்தில் (பவுதாயணர் 1, 7, 22) விதிக்கப்பட்டுள்ளது.
இசைவு தெரிவிப்பதற்குரிய வயது பற்றிய குறிப்பு எதுவும் கவுடில்யரின் சட்டங்களில் இல்லை. பருவம் எய்தியபின் திருமணங்கள் நடைபெற்றதால், அது பற்றிய குறிப்பு எதுவுமில்லை. மேலும் கவுடில்யர், ஏற்கெனவே திருமணத்திற்கு முன் உடலுறவு கொண்டதை மணமகன் அல்லது மணமகள் மறைத்துத் திருமணம் செய்துகொள்வது பற்றியும், மாதவிடாய்க் காலத்தில் உடலுறவு கொண்ட பெண்களைப் பற்றியும் அதிகக் கவனம் செலுத்துகிறார். முன்னைய சிக்கல் பற்றி, கவுடில்யர் கூறுகிறார். (சாம் சாஸ்திரி, கவுடில்யரின் அர்த்த சாத்திரம், பக். 222).
“ஏற்கெனவே வேறொருவருடன் உடலுறவு கொண்டதை மறைத்துத் திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு தண்டம் விதிப்பதுடன், சுல்கம் (பரிசம்) சீதனம் ஆகியவற்றைத் திரும்பத் தர வேண்டுமென்றும் விதிக்கப்படுகிறது. மணமகளின் ஒழுக்கக்கேடுகளை மறைத்துத் திருமணம் செய்துகொண்டால் இரண்டு மடங்கு தண்டம் செலுத்த வேண்டும்; அவன் மணமகளுக்குக் கொடுத்த சுல்கம் (பரிசம்) சீதனம் இரண்டையும் இழந்துவிடுவான்.”
இரண்டாம் சிக்கலைப் பற்றிக் கவுடில்யர் கூறுகிறார்.
“முதலில் மாதவிடாய் ஆனதிலிருந்து மூன்று ஆண்டுகள் கழிந்தபின், தனது ஜாதியையும் தகுதியையும் சேர்ந்த ஓர் ஆடவனுடன் ஒரு பெண் உடலுறவு கொள்வது தவறாகாது. வேறு ஜாதியைச் சார்ந்த ஆடவன் என்றாலும், முதலில் மாதவிடாய்க்கு மூன்று ஆண்டுகள் கழிந்தபின் ஒரு பெண் அணிகலன்களை அணிந்திருக்கவில்லை என்றால் அத்தகையவளுடன் உடலுறவு கொள்வதும் தவறாகாது.”
மனுவைப் போலன்றி கவுடில்யரின் கருத்து ஒருதார மணமாகும். சில குறித்த சூழ்நிலைகளில் மட்டுமே,ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியை மணப்பது அனுமதிக்கப்பட்டது. அச்சூழ்நிலைகளை கவுடில்யர் ((சாம் சாஸ்திரி, கவுடில்யரின் அர்த்த சாத்திரம், பக். 259) பின்வருமாறு கூறுகிறார்:
“ஒரு பெண்ணுக்கு (உயிருடன்) குழந்தை பிறக்கவில்லை என்றாலும், ஆண் குழந்தை இல்லை என்றாலும், மலடி என்றாலும் மறுமணம் செய்துகொள்வதற்கு ஒரு ஆண் எட்டாண்டுகள் காத்திருக்க வேண்டும். ஒரு பெண் இறந்த குழந்தையை மட்டுமே பெற்றால் மறுமணம் செய்துகொள்வதற்குக் கணவன் பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டும். பெண் குழந்தைகளையே தொடர்ந்து பெற்றுக் கொண்டிருந்தால் பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்; அதற்குப் பிறகு புதல்வரைப் பெற கணவன் விரும்பினால் மறுமணம் செய்துகொள்ளலாம். இவ்விதியை மீறினால் சுல்கத்தையும் (பரிசம்) சீதனத்தையும் திருப்பிக் கொடுப்பதுடன் போதிய இழப்பீடும் தருதல் வேண்டும். அரசாங்கத்திற்கு தண்டப் பணமாக 24 பணம் கொடுக்க வேண்டும். திருமணக் காலத்தில் சுல்கமும் (பரிசம்) சீதனமும் பெறாத பெண்களுக்குக்கூட, அவற்றைக் கொடுத்து, போதிய இழப்பீடும் வாழ்க்கைப் பணமும் தந்த பின்னர் எத்தனைப் பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம். ஏனெனில் புதல்வரைப் பெறுவதற்காகவே பெண் படைக்கப்பட்டிருக்கிறாள்.”
மனுவைப் போலன்றி, கவுடில்யர் காலத்தில், ஒருவொருக்கொருவர் பகை, வெறுப்பு காரணமாக ஒரு பெண் மணவிலக்கு கோரலாம்.
“கணவனை வெறுக்கும் மனைவி அவன் விருப்பத்திற்கு மாறாகத் திருமண முறிவு செய்தல் முடியாது. அவ்வாறே கணவனும் மனைவியின் விருப்பத்திற்கு மாறாக மணவிலக்கு செய்தல் கூடாது. ஆனால் ஒருவொருக்கொருவர் பகை காரணமாக மணவிலக்கு பெறலாம் (பரஸ்பரம் த்வேஷன்மோட்சா). தன் மனைவி அபாயகரமானவள் என்று மணவிலக்கு கோருபவன் (மோட்சாமிச்சேத்) (திருமணத்தின்போது) அவளுக்குக் கொடுக்கப்பட்ட அனைத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும். ஆனால் கணவன் அபாயமானவன் என்று மனைவி மணவிலக்குக் கோரினால் தன் சொத்துரிமையை அவள் இழந்துவிடுவாள்.”
தீய நடத்தையுள்ள கணவனை ஒரு மனைவி விட்டு நீங்கலாம்.
“முதலில் மாதவிடாய் ஆனதிலிருந்து மூன்று ஆண்டுகள் கழிந்தபின், தனது சாதியையும் தகுதியையும் சேர்ந்த ஓர் ஆடவனுடன் ஒரு பெண் உடலுறவு கொள்வது தவறாகாது. வேறு சாதியைச் சார்ந்த ஆடவன் என்றாலும், முதலில் மாதவிடாய்க்கு மூன்று ஆண்டுகள் கழிந்தபின் ஒரு பெண் அணிகலன்களை அணிந்திருக்கவில்லை என்றால் அத்தகையவளுடன் உடலுறவு கொள்வதும் தவறாகாது.” – கவுடில்யர் (சாணக்கியன்)
“காலவரையற்ற பராமரிப்பைப் பெறும் தகுதியுடைய பெண்ணுக்குத் தேவையான உணவு, உடை முதலியனவும். பராமரிப்பு தர வேண்டியவனின் வருவாய்க்கு ஏற்ப தாராளமாக வாழ்க்கை முழுவதும் பெற உரிமை உண்டு. உணவு, உடை முதலியவற்றுக்குரிய தொகை அதில் பத்திலொரு பங்கு கூடுதல் தொகையுடன் அளிக்கவேண்டிய காலம் வரையறைக்குட்பட்டதாயின், பராமரிப்பு தர வேண்டியவனின் வருவாய்க்கேற்ப ஒரு குறித்தத் தொகையும் அளிக்க வேண்டும். தன் கணவன் மறுமணம் செய்துகொள்வதற்கு அனுமதித்தமைக்காகத் தனக்குத் தரப்படவேண்டிய சுல்கம், சீதனம், நட்ட ஈடு பெறவில்லை என்றாலும் மேற்கூறியபடியே பராமரிப்பு அளிக்கப்பட வேண்டும். மாமனாரின் குடும்பத்தைச் சார்ந்த ஒருவரின் பாதுகாப்பில் அவள் வாழ்ந்துவந்தாலும் சுதந்திரமாக வாழ்ந்துக் கொண்டிருந்தாலும் அவள் கணவனிடம் பராமரிப்புக் கோர இயலாது. பராமரிப்பு பற்றிய தீர்வுகள் இவ்வாறு கூறப்பட்டுள்ளன.”
கவுடில்யரின் காலத்தில், ஒரு பெண் அல்லது கைம்பெண் மறுமணம் செய்துகொள்ளத் தடை ஏதுமில்லை.
அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள்
‘இந்து மதம்: வரலாறு – ஆய்வு’ (தொகுதி 12) =நூலிலிருந்து