திருத்தணி, ஜூலை 8- திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கழக இளை ஞரணி சார்பில் உண்மை வாசகர் வட்டம் கடந்த 5.7.2025 மாலை 5 மணி அளவில் பொதட்டூர் புவியரசன் இல்லத்தில் திருவள்ளூர் மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் மா.மணி தலைமையில் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் கோ.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை வழங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர் செல்வம் உண்மை வாசகர் வட்டத்தின் அவசியத்தையும், கழகத்தின் செயல்பாடுகளையும், மாநில இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றியும், அவற்றை செயல்படுத்தும் விதங்களையும், அதனை எவ்வாறு மக்களிடம் கொண்டு செல்வது என்பது குறித்தும் விளக்கினார்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் தற்போது தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா முழுக்க மதக்கலவரங்களைத் துண்டுகின்ற பாசிச வெறி கொண்ட பாரதிய ஜனதா கட்சியினுடைய இந்துத்துவ மதவெறி கொள்கைகளையும், எவ்வாறு அதனை மக்களிடம் திணிக்கிறார்கள் என்பது குறித்தும் நீண்டதொரு விளக்க உரை நிகழ்த்தினார்.
பெரியார் பெருந்தொண்டர் பொதட்டூர் புவியரசன், பகுத்தறிவு சிந்தனைகளோடு மிகச்சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த இந்த திருத்தணி பகுதியில் மீண்டும் ஒரு புத்துணர்ச்சி பெரும் வகையில் இந்த உண்மை வாசகர் வட்டம் தொடங்கப்பட்டிருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை தருகின்றது. நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்கள் நடத்திய அதே இடத்தில் இந்த உண்மை வாசகர் வட்டம் மிக சிறப்பாக செயல்படும் என்பதில் அய்யமில்லை என்று எடுத்துரைத்தார்.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான வழக்குரைஞர் ச.சந்திரன் உண்மை வாசகர் வட்டத்தினை தொடங்கி வைத்து “சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தும் திராவிட மாடல் ஆட்சியினுடைய தத்துவங்களை உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றால், அது தந்தை பெரியார் அவர்கள் போட்டுத் தந்த ஈரோட்டுப் பாதை வழியாக சென்றால் மட்டுமே முடியும்” என்று எடுத்துரைத்தார். மேலும் தமிழ்நாடு எந்நாளும் பெரியார் மண் தான் என்பதை உறுதிபட எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்ற திராவிடர் கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதினி பேசும் போது “தந்தை பெரியார் அவர்களின் இறுதி நாட்களிலும் – இந்த திராவிட சமுதாயத்து மக்களின் இழிநிலையை துடைக்க வேண்டும் என்று தன்னுடைய 95 ஆம் வயதில் கூட உழைத்த அந்த மகத்தான தலைவர் தொடங்கிய உண்மை இதழின் பெயரில் வாசகர் வட்டம் அமைத்து இருப்பதன் நோக்கங்களை எடுத்துரைத்தார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் செயல்பாடுகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றால் விடுதலை உண்மை இதழ்களை வாங்கி படியுங்கள் என்பதை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் பொதட்டூர் புவியரசன் மற்றும் திமுக அய்டி விங்க் விஜயகுமார் ஆகியோர் விடுதலை – 1 ஆண்டு சந்தா, உண்மை – 2 ஆண்டு சந்தாக்களை கழக துணைப் பொதுச் செயலளார் சே.மெ.மதிவதனியிடம் வழங்கினார். உண்மை இதழ் சந்தா தொகை வழங்கினார். இறுதியாக மாவட்ட இளைஞரணி் தலைவர் க.ஏ.தமிழ்முரசு நன்றியுரை வழங்கினார்்.
மாதம்தோறும் முதல் சனிக்கிழமை வாசகர் வட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
இதில் மோகனவேலு, அறிவுச் செல்வன், வாகையூரன், திமுக சிறுபான்மை அணி சித்திக், மேல் நல்லாத்தூர் இரா.ஸ்டாலின், வழக்குரைஞர் ரீசர், சிவபிரசாத், திமுக விஜயகுமார் குடும்பத்தினர், எழில் குடும்பத்தினர், முருகேசன், வங்கனூர் தண்டபாணி, மணி, அம்மையார்குப்பம் வீரமணி மற்றும் திராவிட மாணவர் கழகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.