இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.39 கோடியில் கட்டப்பட்ட 729 வீடுகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

viduthalai
2 Min Read

சென்னை, ஜூலை 08  தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.38.76 கோடியில் கட்டப்பட்ட 729 வீடுகள், ரூ.54.80 கோடியில் கட்டப்பட்ட வருவாய் துறை கட்டடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

புதிய வீடுகள்

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பான, கவுரவமான, மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை உறுதி செய்யப்படும். இலங்கை அகதிகள் முகாம் என்பது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என்பது உட்பட பல்வேறு அறிவிப்புகளை சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

அதன் ஒரு பகுதியாக, 26 மாவட்டங்களில் உள்ள 67 முகாம்களில் பழுதடைந்த 7,469 வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்ட ஆணை வழங்கப்பட்டு, புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் ஏற்கெனவே 18 மாவட்டங்களில் உள்ள 32 முகாம்களில் கட்டி முடிக்கப்பட்ட 2,781 புதிய வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, பொது மற்றும் மறுவாழ்வு துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு, திருப்பூர் – திருமூர்த்தி நகர், சேலம் தம்மம்பட்டி, தருமபுரி – நாகாவதி அணை, கேசர்குளி அணை, விருதுநகர் – கண்டியாபுரம் ஆகிய இடங்களில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் ரூ.38.76 கோடியில் கட்டப்பட்டுள்ள 729 வீடுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (7.7.2025) திறந்து வைத்தார்.

ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டடம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 4.25 ஏக்கர் பரப்பில் தரை மற்றும் 5 தளங்களுடன் ரூ.36.62 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம், திண்டுக்கல் (மேற்கு), மதுரை மாவட்டம் மேலூர், தருமபுரி – பென்னாகரம், தூத்துக்குடி – ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் ரூ.17.52 கோடியில் கட்டப்பட்டுள்ள 4 வட்டாட்சியர் அலுவலக கட்டடங்கள், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ரூ.65.76 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 2 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள் என மொத்தம் ரூ.54.80 கோடியில் கட்டப்பட்டுள்ள வருவாய் துறை கட்டிடங்களையும் முதலமைச்சர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வுகளில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், சா.மு.நாசர், தலைமைச் செயலர் முருகானந்தம், பொதுத் துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தக்கர், சிறப்பு செயலர் சஜ்ஜன்சிங் ரா.சவான், வருவாய் துறை செயலர் அமுதா, வருவாய் நிர்வாக ஆணையர் சாய்குமார், சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநர் கே.வி.முரளிதரன், அயலக தமிழர் நலன், மறுவாழ்வு துறை ஆணையர் வள்ளலார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *