சென்னை, ஜூலை.8- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (7.7.2025)ஒரே நாளில் 10 துறை சார்ந்த அதிகாரிகளுடன், துறை செயல்பாடுகள் குறித்து 4 மணிநேரம் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
4 மணி நேரம் ஆய்வுக்கூட்டம்
சென்னை தலைமைச்செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை,இயற்கை வளங்கள் துறை, போக்குவரத்து தகவல் தொழில்நுட்பவியல் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, பள்ளிக்கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை ஆகிய 10 துறைகளின் செயல்பாடுகள் குறித்து தனித்தனியே ஆய்வுக் கூட்டம் நடத்தினார். சுமார் 4 மணி நேரம் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிலப் பயன்பாட்டு தகவல் அமைப்பு, நீடித்த நிலையான சுரங்கக் கொள்கையை உருவாக்கும் பணிகள், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களின் செயல்பாட்டுத் திறன், சேவை வழங்கல் மற்றும் நிதி நிலையை மேம்படுத்தும் திட்டம், சமூக நீதி விடுதிகளின் செயல்பாடுகள், 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படைக் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் திறன் வளர்க்கும் திட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார்.
அறிவுறுத்தல்
அதேபோல, அமைப்பு சாரா நலவாரியங்களில் பதிவுபெற்ற தொழிலாளர்க ளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங் குவது, ஆதிதிராவிட, பழங்குடியின தொழில் முனைவோர் களை ஊக்குவிக்கும் திட்டத்தின் செயல்பாடுகள், புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் அமைக்கப்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு வளாகங்கள் கட்டுமான பணிகள் போன்ற பல்வேறு துறை திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து அதன் விவரங்களை கேட்டறிந்தார். துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் அனைத்தையும் உரிய காலத்திற்குள் விரைவாக முடிக்க உயர் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி தலைமைச் செயலாளர் முருகானந்தம், பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்ட அரசு துறை செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திட்டக்குழு அறிக்கை
இதற்கிடையே சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, துணை முதலமைச்சரும், மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணைத்தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் ஆகியோர் சந்தித்து, மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகளை வழங்கினர்.
அதன்படி தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இல்லாத சுரங்கங்களின் மறுசீரமைப்பு சாத்திய கூறுகளை மதிப்பீடு செய்தல், குழந்தைகளின் ஊட்டச்சத்து – முக்கிய சவால்களும், தீர்க்கும் உத்திகளும், தமிழ்நாட்டில் இரண்டாம் நிலை நகரங்களில் நகர்ப்புற மீள்தன்மையை மேம்படுத்துவதற்கான இயற்கை அடிப்படையிலான தீர்வுகளின் கட்டமைப்பு, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வெப்பம் அழுத்தம், தமிழ்நாட்டில் கட்டமைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் கால நிலை-பத்தாண்டுகளுக்கான மதிப்பீடு ஆகிய நான்கு அறிக்கைகளை வழங்கி, அதனை செயல்படுத்த பரிந்துரை செய்து இருக்கிறார்கள்