மொழி தெரியாததால் வந்த விபரீதம் – நேரில் கண்ட பொதுமக்கள் வாக்குமூலம் கடலூரில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி கோர விபத்து : 3 மாணவர்கள் பலி

viduthalai
2 Min Read

கடலூர், ஜூலை 8 கடலூர் அருகே பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

நடந்தது என்ன?

கடலூர் தனியார் பள்ளி வேன் இன்று (ஜூலை.8) காலை 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. வேனை கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சங்கர் (47) ஓட்டிச் சென்றார். இந்த நிலையில் காலை சுமார் 8 மணி அளவில் வேன் கடலூர் அருகே செம்மகுப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது எதிரே வந்த விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் எதிர்பாராத விதமாக பள்ளி வேனில் மோதியது.

இதில் பள்ளி வேன் நசுங்கி கவிழ்ந்தது. இதில் தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த நிமலேஷ் (12), சின்ன காட்டுசாகையை சேர்ந்த சாருமதி (16) ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த சின்னகாட்டுசாகையை சேர்ந்த செழியன்( 15), தொண்டமாநத்தத்தை சேர்ந்த விஷ்வேஸ் ( 16), வேன் ஓட்டுநர் சங்கர்(47) ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில், படுகாயம் அடைந்த சின்னகாட்டுசாகையை சேர்ந்த செழியன் (15) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

விபத்து ஏற்பட்ட இடத்துக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த விபத்து கடலூர் பகுதியில் பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ஆலபாக்கத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இது போல இந்த மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் அந்ததந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே, உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கேட்கீப்பர் பங்கஜ் சர்மாவை (32) பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கேட்கீப்பர் பங்கஜ் சர்மாவிற்கு தமிழ் தெரியாத காரணத்தால் அவருக்கும் ஓட்டுநருக்குமிடையே சரியான புரிதல் இல்லாமல் இந்த விபத்து நடந்துள்ளதாக பொதுமக்கள் கூறினர்

இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்ச ரூபாய் வழங்கிடவும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு அய்ம்பதாயிரம் ரூபாய் வழங்கிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *