சென்னை, ஜூலை 8 தமிழ்நாடு முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ஜூலை 15 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கான விண்ணப்ப விநியோகம் நேற்று (7.7.2025) தொடங்கியது. தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று திட்டம் குறித்து விளக்கி, விண்ணப்பங்களை வழங்கினர்.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தமிழ்நாட்டின் அனைத்து நகர்ப்புற, ஊரக பகுதிகளிலும் ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.
நகர்ப்புறங்களில் 3,768, ஊரக பகுதிகளில் 6,232 என மொத்தம் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இதில், நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகளும், ஊரக பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்பட உள்ளன. அத்துடன், மருத்துவ முகாம்களும் நடத்தப்பட உள்ளன. இது மட்டுமின்றி, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கான விண்ணப்பம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மகளிர் உரிமை தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் இருந்தால், இந்த முகாமுக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் விநியோகம்
இந்நிலையில், இந்த முகாம்களில் பயன் பெறுவதற்கான விண்ணப்ப படிவங்களை வீடு வீடாக விநியோகம் செய்யும் பணி தமிழ்நாடு முழுவதும் நேற்று (7.7.2025) தொடங்கியது. இப்பணியில் ஒரு லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வீடு வீடாகச் சென்று, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படும் பல்வேறு அரசுத் துறைகளின் திட்டங்கள், சேவைகள், அதில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து விளக்கி வருகின்றனர்.
முகாம் தொடர்பான தகவல் கையேடு, விண்ணப்பப் படிவங்களையும் வழங்கி வருகின்றனர் சட்டப்பேரவை உறுப்பினர்கள், வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சிமன்றத் தலைவர்கள் உள்ளிட்டோரும் சென்று படிவங்களை வழங்கி வருகின்றனர். சென்னையில் 200 வார்டுகள் உள்ள நிலையில், நேற்று 6 வார்டுகளில் முகாம் தொடர்பான விண்ணப்பங்கள், கையேடுகளை தன்னார்வலர்கள் வழங்கினர். இப்பணியில் 2 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இங்கு மொத்தம் 400 முகாம்கள் நடைபெற உள்ளன.