இன்று (8.7.2025) காலை 8 மணியளவில், கடலூர் அருகே செம்மகுப்பம் பகுதியில் பள்ளி வாகனம் ஒன்று, ரயில்வே கேட்டைக் கடக்க முயன்றபோது எதிரே வந்த விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதிய விபத்தில், மூன்று மாணவர்கள் பலியான கொடுமை மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
வட நாட்டைச் சேர்ந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா என்பவருக்கு மொழி தெரியாததால், இந்த விபத்து ஏற்பட்டது என்பது – ரயில்வே நிர்வாகத்தின் மோசமான நடைமுறைக்கு எடுத்துக்காட்டாகும்.
திடீர் விபத்தால் உயிரிழந்த மூன்று குழந்தைகளின் பெற்றோருக்கும், குடும்பத்திற்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சற்றும் தாமதியாமல், குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.5 லட்சம் வழங்கியும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கிட முதலமைச்சர் உடனடியாக உத்தரவிட்டிருப்பது ‘திராவிட மாடல்’ அரசின் மனிதநேய அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.
மொழி தெரியாதவர்களைத் தமிழ்நாட்டில் பணியமர்த்துவதால் ஏற்படும் இந்த விபரீதத்திற்கு ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
8.7.2025
குறிப்பு: விபத்து குறித்த விரிவான தகவல் 2 ஆம் பக்கம் காண்க.