சென்னை, ஜூலை 7– இந்தியாவின் தென் மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்திருப்பதால் தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. மழையின் காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்திருக்கிறது.
நீர்வரத்து
தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மாநிலங்களில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.
அபாய எச்சரிக்கை
மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பிய நிலையில் அந்த அணையிலிருந்து 16 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
பில்லூர் அணையின் நீரும் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையின் நீரும் வந்துகொண்டிருப்பதால் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
தமிழ்நாட்டின் மிகப் பெரிய அணையான மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவை ஏற்கனவே எட்டியுள்ள நிலையில், அந்த அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு இரண்டு லட்சம் கன அடியைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.