மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில் சி.பி.அய். விசாரணை முதலமைச்சரின் நேர்மையைக் காட்டுகிறது! தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை பேட்டி!

viduthalai
2 Min Read

சிவகங்கை, ஜூலை 7- சிவகங்கை மாவட்டம் திருப் புவனம் மடப்புரத்தில் மடப்புரம் காளியம்மன்கோவில் காவலாளி அஜித்குமார் கடந்த 29ஆம் தேதி தங்க நகை திருட்டுவழக்கில் காவலர்களால் தாக்கப்பட்டதில் மரணம் அடைந்தார்.

அவரது மரணம் குறித்து பொதுமக்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு தற்பொழுது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஆஷிஸ்ராவத் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். மானா மதுரை டி.எஸ்.பி.சண்முகசுந் தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அஜித்குமார் வீட்டிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வந்து ஆறுதல் தெரிவித்தவாறு உள்ளார்கள்.

இந்த நிலையில் 4.7.2025 மாலை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அஜித் குமார் படத்திற்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினார். தாயார் மாலதி, சகோதரர் நவீன் குமார் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது.

சி.பி.அய். விசாரணை

நகை திருட்டு வழக்கில் அஜித்குமார் மீது காவலர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதல் கண்டனத்திற்குரியது . இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெற கூடாது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து உள்ளார். சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது வரவேற்கத்தக்கது. அ.தி.மு.க ஆட்சியில் சாத்தான்குளம் கொலைக்கு சி.பி.அய். விசாரணை கேட்டபொழுது அதற்கு மறுத்தவர்கள் இப்பொழுது சி.பி.அய்.விசாரணை குறித்து பேசுவதற்கே பயப்படுகிறார்கள். அஜித்குமார் மீது குற்றம் சாட்டப்பட்ட நிகிதா என்பவருக்கும் பா.ஜ.க. மேனாள் தலைவர் ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி சமூக ஊடகங்களில் முகநூலில் ஏராளமான தகவல் வந்து கொண்டிருக்கின்றது.

வரவேற்கத்தக்கதாகும்

எனவே நிகிதாவையும் காவல் துறையினர் நீதிமன்றமும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் அவரிடம் விசாரித்தால் பல்வேறு உண்மைகள் தெரிய வரும். இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டுள்ளார்கள் என்பது தெரிய வரும். இது குறித்து பொதுமக்களிடம் ஏராளமான சந்தேகங்கள் உள்ளது.

காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் அவர்கள் இந்த பிரச்சினையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து சி.பி.அய். விசாரணைக்கு உத்திர விட்டதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. இது முதலமைச்சரின் நேர்மையைக் காட்டுகிறது. மேலும் அவரது தாயார் வேண்டுகோளின்படி அவர்களுக்கு வீட்டுமனை பட்டாவும் அவர் சகோதரன் நவீன்குமாருக்கு காரைக்குடி ஆவின் நிலையத்தில் வேலை பணி நியமன உத்தரவு தந்தது வரவேற்கத்தக்கதாகும்.

அவர் திருப்புவனத்தில் இருந்து காரைக்குடி செல்வதற்கு அதிக நேரமாகும். இதனால் அருகில் உள்ள மதுரை ஆவின் நிலையத் திற்கு பணியினை மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் . இது குறித்து முதலமைச்சரிடம் நேரில் சென்று வலியுறுத்த உள்ளேன். இந்த சம்பவத்தில் முதலமைச்சர் அவர்களின் நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி முழுமனதாக வரவேற்கிறது. இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *