சென்னை, ஜூலை 7- நான் முதல்வன் திட்டத்தில் 41 லட்சம் மாணவர் களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டு உள்ளது என்றும், 14 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
‘நான் முதல்வன் திட்டம்’
தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு, அவரது கடும் உழைப்பின் மூலம் சிறப்பான பல வெற்றிக்கனிகளை படைத்து வருகிறது. அதன்படி, கடந்த நான்கு ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட துறைகளில் 2,59,072 இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் தொடர்பான குறுகிய காலத்திறன் பயிற்சிகளை வழங்கியுள்ளது.
1,13,940 தொழிலாளர்களுக்கு முன் கற்றல் அங்கீகார சான்றிதழ், 15,890 இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகள், பொறியியல் கல்லூரிகளில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 41 கட்டாயத்திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு உள்ளன. கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, 29 அரசு பொறியியல் கல்லூரிகளில் ரூ.30.17 கோடி மதிப்பீட்டில் திறன் மற்றும் வேலை வாய்ப்பு மய்யம் முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
விரிவாக்கம்
2022-2023ஆம் கல்வியாண்டு முதல் “நான் முதல்வன்” திட் டம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு இதுவரை 25,63,235 மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு உள்ளன. பாலிடெக்னிக் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் நான் முதல்வன் திட்டம் விரிவாக்கம் செய்யப் பட்டு. 2023-2024 முதல் இதுவரை 8,242 விரிவுரையாளர்களும், 3,77,235 மாணவர்களும் பயிற்சி பெற்று உள்ளனர்.
தொழிற்பயிற்சி நிலையங்களில் 1,07,341 மாணவர்களுக்கு வேலைவாய்ப்புத்திறன் சார்ந்த அடிப்படை ஆங்கிலப்பாடப் பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயனடைந்தோர் மொத்தமாக இத்திட்டத்தின் கீழ் 41,38,833 மாணவர்களும், 1,00,960 விரிவுரையாளர்களும் பயிற்சி பெற்றுள்னர் என்பது குறிப்பிடத்தக்கது..
உயர்கல்வி வழிகாட்டுதல்
கடந்த 4 ஆண்டுகளில் 272 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த முகாம்கள் வாயிலாக மொத் தம் 2,60,682 மாணவர்களில் 63,949 மாணவர்கள் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற்று உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களிலும் நடைபெற்ற கல்லூரிக்கனவு நிகழ்ச்சி மூலமாகவும், அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மூலமாகவும் 1,87,000 மாணவர்கள் பயன் அடைந்து உள்ளனர். நடப்பு கல்வி ஆண் டில் 81,149 மாணவர்கள் பயன் அடைந்து உள்ளனர். 2024ஆம் ஆண்டுக்கான இந்தியா திறன் போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்டு 6 தங்கப்பதக்கங்கள், 8 வெள்ளிப் பதக்கங்கள், 9 வெண்கலப் பதக்கங்கள், 17 சிறப்பு பதக்கங்கள் என மொத்தம் 40 பதக்கங்கள் வென்று தேசிய அளவில் மூன்றாவது இடத்தைப் பெற்றனர்.
மகளிர் உரிமைத்தொகை
குடிமைப்பணித் தேர்வில் 2022ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து 36 இளைஞர்களும், 2023ஆம் ஆண்டில் 47 இளைஞர்களும் தேர்ச்சி பெற்றனர். 2024-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து 57பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று வெற்றி கண்டவர்கள் என்பது, நான் முதல்வன் திட் டத்திற்கு கிடைத்துள்ள தனிப் பெருமையாகும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.15 கோடி மகளிரின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.1,000 நேரடியாகவரவு வைக்கப்படுகிறது. 2023-2024ஆம் ஆண்டுக்கு ரூ.8,123.83 கோடியும், 2024-2025ஆம் ஆண்டுக்கு ரூ.13,721.50 கோடியும் இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இது வரை உதவி பெறாதவர்களுக்கும் விரைவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவுள்ளது.
பட்டா
1.6.2021 முதல் 25.4.2025 வரை 14,45,109 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளன. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 86,217 பட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதுவரை 15,015 வரைபட மனை பிரிவுகளுக்கும், 5,496 கட்டிட வரைபடங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு புரட்சிகரமான திட்டத்தின் மூலம், சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை எண்ணிலடங்கா மக்கள் நலம் பெறத் துணை புரியும் மகத்தான துறையாகவளர்ந்து பயனளித்து, ‘திராவிட மாடல்’ அரசுக்கு பெருமைகள் சேர்த்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.