2025ஆம் ஆண்டிற்கான உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் இப்போது வெளியாகியுள்ளது. அதில் வழக்கம் போல முன்னிலை வகிக்கும் இடங்களில் அய்ரோப்பிய நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட இந்தியாவின் அண்டை நாடுகள் எந்த இடத்தில் உள்ளன என்பது குறித்தும் அப்பட்டியலில் தகவல் உள்ளது.
அய்இபி எனப்படும் பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகின் அமைதியான நாடுகள் பட்டியலை வெளியிடும். இந்தாண்டிற்கான அமைதிப் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் 99.7% உள்ளடக்கிய 163 நாடுகளை ஆய்வு செய்து இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மூன்று முக்கிய துறைகளில் 13 விஷயங் களை ஆய்வு செய்து இந்தப் பட்டியல் உருவாக்கப் பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு, உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விவகாரம், ராணுவமயமாக்கலின் அளவு ஆகியவற்றை வைத்து இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தாண்டும் இந்தப் பட்டியலில் வழக்கம் போல அய்ரோப்பிய நாடுகளே முன்னிலையில் உள்ளன. முன்னணி நாடுகள் 10இல் 8 நாடுகள் அய்ரோப்பிய நாடுகளாகவே உள்ளன.
இதில் இந்தியா 115ஆவது இடத்தில் இருக்கிறது. கடந்தாண்டும் 115ஆவது இடத்தில் இருந்த நிலையில், இந்தாண்டும் அதே நிலையிலேயே தேங்கிக் கிடக்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளில் பாகிஸ்தான் மட்டுமே மோசமான நிலையில் உள்ளது. பாகிஸ்தான் இந்த பட்டியலில் 144ஆவது இடத்தில் இருக்கிறது. மற்ற அண்டை நாடுகளில் அதிகபட்சமாக பூட்டான் 21ஆவது இடத்தில் இருக்கிறது. அதேபோல நேபாளம் 76ஆவது இடத்தில் இருக்கும் நிலையில், சீனா 98ஆவது இடத்திலும், இலங்கை 97ஆவது இடத்திலும் இருக்கின்றன. இந்த நாடுகளுக்குப் பின்னால் தான் இந்தியா 115ஆவது இடத்தில் இருக்கிறது.
‘‘நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சியின் புகழ் உலகெல்லாம் கொடி கட்டிப் பறக்கிறது. உலக நாடுகளை எல்லாம் வலம் வந்து கொண்டிருக்கிறார். பிரதமர் மோடி’’ என்று பார்ப்பனீய – முதலாளித்துவ ஊடகங்கள் தம்பட்டம் அடிப்பதில் மட்டும் குறைச்சல் இல்லை.
வேலையின்மையில் 8 விழுக்காடாக உள்ளது. (தமிழ்நாடோ இதில் வெறும் 3.5 விழுக்காடுதான் என்பதைக் கவனிக்க வேண்டும்).
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை அளிப்போம் என்று மோடி சொன்னது எல்லாம் வெறும் ‘ஜும்லா’ என்று ஓர் உள்துறை அமைச்சர் சொல்லுகிறார் என்றால் பிஜேபி தலைமையிலான ஒன்றிய அரசின் தராதரத்தைத் தெரிந்து கொள்ளலாமே!
மணிப்பூர் மாநிலத்தின் நிலை என்ன? உலகம் சுற்றும் வாலிபராகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் பிரதமர் மோடி ஒரே ஒரு முறை அந்த மாநிலத்தின் பக்கம் தலைகாட்டியதுண்டா?
உலகமே கைத் தட்டி சிரிக்கிறதே! வறுமையின் காரணமாக நாள் ஒன்றில் ஒரு வேளை உணவைத் தவற விடுவோர் கடந்த மாதத்தில் மட்டும் இந்தியாவில் 33 விழுக்காடாகும்.
மதக் கலவரங்களும், ஜாதி சச்சரவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. மத விழாக்கள் என்று பிஜேபி ஆளும் மாநிலங்களில் அரசே பெரும் பிரச்சாரம் செய்வதும், பக்தி மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கும் மக்களை இலட்சக்கணக்கில் கூடச் செய்து உயிர்ப் பலிகள் நடப்பதும் சர்வ சாதாரணமே!
மதவாத சித்தாந்தத்தை பிஜேபி அரசு கையில் எடுத்துக் கொள்வதால் இந்தியாவை அமைதியான நாடுகளின் வரிசையில் மோசமான இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. வெட்கக் கேடே!