சென்னை, ஜூலை 7 பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு உள்ளது.
பீகாரில், இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கை லட்சக்கணக்கானவர்களின் வாக்குரிமையை பறிக்கும் செயல் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்து உள்ளது. இந்த சூழ்நிலையில் தேர்தல் ஆணையமும், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்து விளக்கம் அளித்துள்ளது. இதற்கிடையே தனியார் அமைப்பு ஒன்று சிறப்பு தீவிர திருத்த முகாமை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.
இதற்கிடையே பீகாரைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடை பெறும் தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை விரைவில் தொடங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அரசமைப்புச் சட்டம்
326 ஆவது பிரிவு
இந்திய அரசமைப்புச் சட்டம் 326 ஆவது பிரிவு, ஒருவர் வாக்காளர் ஆகும் தகுதியைப் பற்றி தெளிவாகக் கூறுகிறது. அதாவது அவர் இந்திய குடிமகனாகவும், 18 வயது நிரம்பியவராகவும், வாக்காளரின் தொகுதியிலேயே வசிப்பவராகவும் இருக்க வேண்டும். இந்தத் தகுதிகள் இருந்தால் மட்டுமே ஒருவர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியும்.
வெளிநாட்டவருக்கு வாக்காளர் அடை யாள அட்டை வழங்கி இருந்தால் அது ரத்து செய்யப்படும். அதேபோல் தொகுதி இருக்கும் இடத்தில் வீடு இருந்து, அவர்கள் அங்கு வசிக்காவிட்டாலும் அவர்களது பெயரும் நீக்கம் செய்யப்படும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இறுதி யாக 2005 ஆம் ஆண்டுதான் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடந்தது. அதன்பிறகு வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்த்தவர்கள் தங்களது பிறப்பு சான்றிதழை அளிக்கவேண்டும்.
தமிழ்நாட்டில் குடியுரிமை பிரச்சினைகள் பெரிதாக இருக்காது. ஆனால் மற்றொரு விவகாரத்தில் தமிழ்நாட்டிற்குப் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. பீகாரைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் தென்மாநிலங்களில்தான் வேலை செய்கின்றனர். அவர்கள் பீகாரில் இல்லாததால் அங்குள்ள வாக்காளர் பட்டிய லில் இருந்து நீக்கப்படுவார்கள்.
வசிக்கும் இடத்தில் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற நிலை உறுதி செய்யப்பட்டால், அவர்கள் வசிக்கும் பகுதியான தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் மட்டுமே பெயர் சேர்க்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இது தமிழ்நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையலாம் என்று கூறப்படுகிறது.