தனக்குப் பெருமை வந்ததா, இல்லையா? தனக்குப் பதவி வந்ததா, இல்லையா? என்று கவலைப்படாமல், கொள்கையை மட்டுமே முன்னிலைப்படுத்திய ஒரு மாபெரும் கொள்கை வீரரே ந.மா.முத்துக்கூத்தன் கவிஞர் ந.மா. முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழாவில் (26.5.2025) தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை!

viduthalai
8 Min Read

சென்னை, ஜூலை 6– தனக்குப் பெருமை வந்ததா, இல்லையா? தனக்குப் பதவி வந்ததா, இல்லையா? தன்னை பெரிய அளவில் உயர்த்திருக்கிறார்களா, இல்லையா? என்று, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், கொள்கையை மட்டுமே முன்னிலைப் படுத்திய ஒரு மாபெரும் கொள்கை வீரருடைய நூற்றாண்டு விழா- முத்துக்கூத்தனின் நூற்றாண்டு விழா  என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.

முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழா:
தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்பு

கடந்த 26.5.2025 அன்று சென்னை, கோட்டூரில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் நடைபெற்ற முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழாவில், நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்..

அவரது சிறப்புரை வருமாறு:

கலைமாமணி – கொள்கைவேள்
ந.மா.முத்துக்கூத்தன்

இந்த நூற்றாண்டு விழா மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் நடைபெறக்கூடிய விழாவாகும்.

கலைமாமணி ந.மா.முத்துக்கூத்தன் அவர்கள் ‘கொள்கைவேள்’ என்று நூற்றாண்டு மலரில் நான் எழுதிய என்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். கலைத்துறையில் ஒரே கொள்கையோடு, பல நேரங்களில்,பலர் இருப்பதில்லை. அவரவர்க்கு சூழ்நிலை, நிர்ப்பந்தங்கள் எல்லாம் உண்டு. அவர்களுக்கென்று சில ஆசாபாசங்கள் உண்டு.

கொள்கையை முன்னால் நிறுத்திய
ஒரு மாபெரும் கலைஞர்

ஆனால், இவை அத்தனையும் தாண்டி, இறுதிவரை, தான் கொண்ட கொள்கைக்காக,  தன்னுடைய வாழ்க்கை மேம்பாட்டைப் பின்னால் தள்ளி, கொள்கையை முன்னால் நிறுத்திய ஒரு மாபெரும் கலைஞர் இருந்தார் என்றால், அவர் கலைமாமணி கொள்கை வீரர் முத்துக்கூத்தன் அவர்களாவார்.

அவருக்கு நாம் இப்போது நூற்றாண்டு விழாவினை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

அப்படிப்பட்ட இந்த நூற்றாண்டு விழாவிற்கு வருகை தந்திருக்கின்ற உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நூற்றாண்டு விழா மலரைப் பெற்றுள்ள கொள்ளுப் பெயர்த்திகள், பெயரன்கள் – இந்த நூற்றாண்டு விழா அழைப்பிதழில் மிகச் சிறப்பாக அவர்களுடைய பெயர்களைப் போட்டிருக்கிறார்கள்.

மற்றவர்கள் எல்லாம் வி.வி.அய்.பி. இல்லை. அவர்கள்தான் வி.வி.வி.அய்.பி.

பெயர் வரிசையிலும் கொள்கை இருக்கிறது

அதில்கூட ஒரு சிறப்பு என்னவென்றால், அந்த பெயர் வரிசையிலும் கொள்கை இருக்கிறது. கொள்கைப் பெயர்த்திகள் முன்னால்; பெயரன்கள் அடுத்துதான்.

இந்த ஆண்டு சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு நிறைவு விழா. எனவே, ஒரு நூற்றாண்டு, இன்னொரு நூற்றாண்டு என பெயர்ச்சி ஆக்கியிருக்கின்றது என்பதற்கு ஓர் அடையாளம்.

‘‘ஆசைக்கு ஒரு பெண்; ஆஸ்திக்கு ஓர் ஆண்’’ என்று நம்முடைய நாட்டில் ஒரு பழமொழியைச் சொல்வார்கள்.

பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு
என்று ஆக்கிய இயக்கம்!

ஒரு குடும்பத்தில் ஆண் குழந்தை பிறந்தால், அந்த ஆண் குழந்தைக்கு சொத்து சேரவேண்டும்; பெண் குழந்தையை கொஞ்சுவதோடு சரி; ஆனால், சொத்தில் பெண்களுக்கு உரிமை இல்லை என்று இருந்ததை, சொத்துக்கும் உரிமை உண்டு என்று ஆக்கிய இயக்கம்தான் – தந்தை பெரியாருடைய சுயமரியாதை இயக்கம்- திராவிட இயக்கம்.

இன்றைக்கு அத்தனை பெண் குழந்தைகளுக்கும் சொத்தில் உரிமை உண்டு.

இது கையை மேலே தூக்கி, கையைக் காட்டியதால் வந்தது கிடையாது. இது முழுக்க முழுக்கப் போராடி, எந்தப் பெண்களுக்குப் புரியாமல் இருந்ததோ, அந்தப் பெண்களுக்கு அறிவுறுத்தி, போராடியதன் விளைவாக வந்தது.

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் வேதனை!

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அரும்பாடுபட்டு பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்பதற்காக ஒரு சட்டத்தை உருவாக்கி, நாடாளுமன்றத்தில் முட்டிப் பார்த்தார். அதில் தோற்றுவிட்டார். அதனால், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

ஒன்றிய சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர், பிரதமர் நேருவிடம், ‘‘நீங்கள்கூட நான் கொண்டு வந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு உதவி புரியவில்லையே’’ என்று வேதனைப்பட்டு கேட்டார்.

தனக்குப் பிரதமர் பதவியோ, மற்ற அமைச்சர் பதவியோ கிடைக்கவில்லை என்பதற்காக அம்பேத்கர் அவர்கள் தன்னுடைய பதவியிலிருந்து விலகவில்லை.

ஆண்களைப் போலவே, பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் இந்து லாவில். அதற்கென இந்து சட்டத் திருத்தத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை ஏற்கவில்லை அப்படி. ஏற்காதபோது,  இந்தப் பதவியிலிருந்து எனக்கு என்ன லாபம்? என்று சொல்லி, தன்னுடைய பதவியைத் தூக்கி எறிந்தார்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி!

அதே நாடாளுமன்றத்தில், அதே கொள்கைகளை நிலை நிறுத்தியது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி!.

திராவிட முன்னேற்றக் கழகம், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, ஒன்றியத்தில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்தபோதுதான் அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

தந்தை பெரியார் அவர்கள், 1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாட்டில், பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.

ந.மா.முத்துக்கூத்தன் வாழ்ந்த
தெருவுக்கு, அவரது பெயர்!

ஆகவே, அப்படிப்பட்ட ந.மா.முத்துக்கூத்தன் வாழ்ந்த தெருவுக்கு, ந.மா.முத்துக்கூத்தன் பெயர் வைத்த மறைமலைநகர் நகராட்சித் தலைவர் அவர்களுக்கு. இந்த அரங்கமே நன்றி செலுத்துகிறது; தாய்க்கழகம் பாராட்டுகிறது.

இதில் சிறப்பு என்னவென்றால், மறைமலை நகர் நகராட்சித் தலைவர் இங்கே வந்திருக்கின்றார். ந.மா.முத்துக்கூத்தன், கலைவாணன் போன்றவர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

அந்த மாநாட்டில்தான், ஜாதி ஒழிப்புத் தீர்மானமும் கொண்டு வந்தார்கள்.

ஜாதிக்கட்சித் தலைவர்கள்கூட, ஜாதிப் பட்டத்தைத் தன் பெயருக்குப் பின்னால் போடுவதற்கு வெட்கப்படுகின்ற மண், பெரியார் மண், தமிழ் மண்ணாகும்.

பெண் – ஆண் என்ற பேதமில்லாமல், 2006 ஆம் ஆண்டு – ஆண்களுக்கு என்னென்ன சொத்துரிமை இருக்கிறதோ, அவ்வளவும் பெண்களுக்கும் உண்டு என்று அந்தச் சட்டத்தைக் கொண்டு வந்த ஆண்டாகும்.

பதறிப் போன சங்கராச்சாரியார்

சங்கராச்சாரியார் நிலை என்ன? ‘‘அய்யோ, பெண்களுக்குச் சொத்துரிமை கொடுக்கப் போறாளாமே’’ என்று அப்போது பதறியிருக்கிறார்.

இதை நாங்கள் சொல்லவில்லை, அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய ‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற புத்தகத்தில் இதற்கான ஆதாரம் உள்ளது.

‘‘இதென்ன அநியாயம்; பொம்பளக்குப் போய் சொத்துக் கொடுக்கப் போறாளாமே? அப்படி கொடுத்தால், கண்டவ பின்னாலே ஓடிடுவாளே?’’ என்று சங்கராச்சாரியார் சொல்லியிருக்கிறார்.

எவ்வளவு கொச்சைப்படுத்தி சொல்லியிருக்கிறார். இப்படித்தான் இன்றைக்கு நடக்கிறதா?

அப்படிப்பட்ட ஓர் இடத்தை, அவ்வளவு பெரிய செல்வாக்கு உள்ள இடத்தை, அசைத்துக் காட்டி, வெற்றி பெற்ற இயக்கம் திராவிட இயக்கம்.

கொள்கையை மட்டுமே
முன்னிலைப்படுத்திய கொள்கை வீரர்!

தனக்குப் பெருமை வந்ததா, இல்லையா? தனக்குப் பதவி வந்ததா, இல்லையா? தன்னை பெரிய அளவில் உயர்த்திருக்கிறார்களா, இல்லையா? என்று, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், கொள்கையை மட்டுமே முன்னிலைப்படுத்திய ஒரு மாபெரும் கொள்கை வீரருடைய நூற்றாண்டு விழா- முத்துக்கூத்தனின் நூற்றாண்டு விழா! எனவே, இது ஒரு தனி நபருடைய நூற்றாண்டு விழா அல்ல!

எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், ஒரு விழா என்றால், முதலில் ஆண்களைப்  பாராட்டுவதுதான் வழக்கம். ஆனால், அஸ்திவாரம் முழுவதும் வாழ்விணையர்கள்தான். அவர்கள் தெளிவாக இருந்தால்தான், ஆண்கள் பொது வாழ்க்கைக்கு வர முடியும்.

‘திராவிட மாடல்’ ஆட்சியில்
மேலும் சீரமைத்திருக்கின்றார்கள்!

இந்தக் கட்டடம் அண்ணா நூற்றாண்டு விழா நூலகக் கட்டடமாகும். இந்தத் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் மிகவும் அற்புதமாக மேலும் சீரமைத்திருக்கின்றார்கள். இந்த மண்டபத்திற்கு நான் புதிதாக வந்திருக்கின்றேன். இவை அத்தனையும் எதனால் வந்தது தெரியுமா? இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது.

இதுபோன்ற ஒரு நூற்றாண்டு விழா நூலகக் கட்டடம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, பெரிய அளவிற்கு இதைப்பற்றி திட்டமிட்டார்கள். அதற்கு மாற்றாக,  கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, நாங்கள் மிகப்பெரிய அளவிற்குத் திட்டமிட்டோம்.

நானும், நாசரும் தேசிய நூலகத்திற்கு அழைக்கப்பட்டு அப்போது இதுகுறித்துப் பேசினோம், பல ஆண்டுகளுக்கு முன்பு.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக தங்கம் தென்னரசு அவர்கள் இருந்தார்.

இங்கே அரசியல் பேச விரும்பவில்லை. இங்கே எல்லா கட்சிக்காரர்களும் இருப்பார்கள். இருந்தாலும், கொள்கையைச் சொல்லவேண்டும். இதுபோன்ற ஒரு திட்டம் வரக்கூடாது என்பதற்காக, பழைய ஆட்சியினர் தடுத்தனர்.

அன்றைய முதலமைச்சர், ஜெயிலுக்குப் போன சங்கராச்சாரியாரை அழைத்து, ஏனென்றால், பல சங்கராச்சாரியார்கள் இருப்பதால், ஓர் அடையாளத்திற்காக சொல்கிறேன். ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலைந்தவர்தான் காஞ்சி ஜெயேந்திர சங்கராச்சாரியார்.

இந்தக் கட்டடம் வரக்கூடாது என்பதற்காக வேறு ஏற்பாடுகளைச் செய்தனர்!

அவரை அழைத்து, ஒரு பள்ளம் தோண்டச் சொல்லி, பூமி பூஜை செய்து, ஒரு பெரிய ஹோமம் நடத்தி, அந்த ஹோமத் தீயில் பட்டுப்புடவைகளைப் போட்டுக் கொளுத்தி, அது ஸநாதன சம்பிரதாயமாம். இங்கே இந்தக் கட்டடம் வரக்கூடாது என்பதற்காக வேறு ஏற்பாடுகளைச் செய்தனர். அந்த இடத்தில்தான், கலைஞர் அவர்கள், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைக் கட்டினார்.

எவ்வளவு பெரிய சமுதாய மாற்றம் பாருங்கள்; இடத்தில் மாற்றம்; கருத்தில் மாற்றம்; வரிசையில் மாற்றம்; மற்றவர்களுக்கு ஏமாற்றம்.

அதற்கடுத்ததாக, நம்முடைய சவுரிராஜன் அவர்கள். அவரை கழக இளைஞரணியில் இருந்து தயார் செய்ததே நாங்கள்தான். ஆனால், இதுவரையில் தெரியாத ஒரு படத்தைக் காட்டினார்.

ஸ்திரிபாட்’’ என்று பெயர்!

நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் நான், இப்போது சொன்னேன். ‘‘அந்தக் காலத்தில் நாடகத்தில் பெண் வேடம் போட்டால், அதற்கு ஸ்திரிபாட்’’ என்று பெயர்.

ஒருமுறை அண்ணா அவர்கள் வேடிக்கையாக சொன்னார், ‘‘ஒரு கிராமத்தில் நாடகம் நடந்தது, அந்த நாடகத்தில், ஸ்திரிபாட் வேடம் தரித்தவர் மிகப் பிரமாதமாக நடித்தார்; காதல் சீன்கள் எல்லாம் இருந்தன. அந்த ஊரைச் சேர்ந்த மிராசுதாரர், அவருடைய மகனுக்குத் திருமணத்திற்காக பெண் தேடிக் கொண்டிருந்தார். அவர், ஸ்திரிபாட் வேடத்தில் நடித்த பெண்ணைத்தான் என் மகனுக்கு திருமணம் செய்யப் போகிறேன் என்று சொன்னபோது, அவரிடம், ‘‘யோவ், அது பெண் இல்லை, ஆண் என்று சொல்லப்பட்டது’’ என்று அண்ணா எடுத்துக்காட்டினார்.

அப்படிப்பட்ட ஒரு வரலாறு இருந்தது. அந்த வரலாறையெல்லாம் மாற்றி, தோழர் சவுரிராஜன் அவருடைய நட்பு மிகப்பெரிய அளவிற்கு இருக்கிறது.

தோழர் பொள்ளாச்சி உமாபதி!

அதேபோல, கொள்கைக்காக இருக்கக்கூடிய தோழர் பொள்ளாச்சி உமாபதி அவர்களாவார்கள். கொள்கைக்காக எந்த விலையையும் கொடுப்பதற்குத் தயாராக இருக்கக்கூடிவர்.

அதேபோன்று, நம்முடைய அருமை திரைப்பட நடிகர் நாசர் அவர்கள். திரைப்படத்தில் நடித்தாலும், கொள்கையோடு இருப்பவர். அவர் எந்த வேடத்தில் வேண்டுமானாலும் நடிப்பார். அது அவருடைய கலை, அவருடைய தொழில்.

கட்சியில்லை, கொள்கை உண்டு!

ஆனால், ஒரு தெளிவு, நல்ல ஆழ்ந்த புலமை, சிந்தனை, சமூகப் பார்வையோடு, கொள்கையோடு இருக்கக்கூடியவர்தான் நடிகர் சங்கத் தலைவர் நம்முடைய நாசர் அவர்கள். அவருக்குக் கட்சியில்லை, கொள்கை உண்டு.

பெரியார்தான் சொன்னார், ‘‘நான் எப்போதும் கட்சிக்காரனாக இருந்ததில்லை; கொள்கைக்காரனாக இருந்திருக்கின்றேன்’’ என்றார்.

அருமைத் தங்கை விஜயா தாயன்பன்

அதேபோல, என்னுடைய அருமைத் தங்கை விஜயா தாயன்பன். விஜயாவும் இருக்கிறார்; தாயன்பனும் இருக்கிறார். அதுதான் மிகவும் பாராட்டவேண்டிய விஷயம். இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் மிகத் தெளிவானவர்கள். கொள்கையில் தீவிரமானவர்கள். எல்லா வகையிலும் இந்த அரசாங்கம், தாமதமானாலும், அங்கீகரித்து இருக்கிறது.

(தொடரும்)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *