ரூ.8,000 கோடியில்
புதிய கன்டெய்னர் துறைமுகம்
சென்னை துறைமுகத்தின் வடக்கு பகுதியில் 2 கி.மீ. தூரத்துக்கு புதிய கன்டெய்னர் துறைமுகம் அமைப்பதற்கான சாத்தியக் கூறு ஆய்வு நடந்து வருவதாக துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்தார். இது ரூ.8,000 கோடியில் அமைக்கப் படவுள்ளது என்றும், சரக்கு வாகனங்கள் நிறுத்தம், கப்பல் பழுதுபார்ப்பு நிலையம் உள்ளிட்டவை இடம்பெற உள்ளதாகவும் கூறினார். இதன்மூலம் கூடுதலாக சரக்குகளைக் கையாள முடியும் என்றார்.
ரூ.48,000 ஊதியம்
2,500 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு
பேங்க் ஆஃப் பரோடாவில் (BOB) காலியாகவுள்ள 2,500 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. வயது வரம்பு: 21 – 30. ஆன்லைன் தேர்வு, குழு கலந்துரையாடல் & நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். ஊதியம்: ரூ.48,480 முதல் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 24.
மதம் கடந்த மனிதநேயம்
வேற்றுமையில் ஒற்றுமை என்பது நமது தனித்துவமான பண்பாகும். அதனை உணர்த்தும் வகையிலான சம்பவம் கருநாடகாவில் நடந்துள்ளது. கோவில் பூசாரி ஒருவரின் 5 வயது குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்காக 60 லட்சம் பணம் தேவைப்பட்டது. இதனால் பயாஸ் என்பவரின் உதவியை நாடினார் பூசாரி. சிறுமி நிலை பற்றி இணையத்தில் காட்சிப் பதிவு வெளியிட்ட பயாஸ், 16-1/2 மணி நேரத்துக்குள் 75 லட்சம் வசூலித்து பூசாரியிடம் வழங்கியுள்ளார்.
முதல் பெண் ‘போர் விமானி’ ஆனார் ஆஸ்தா புனியா!
இந்திய கடற்படை போர் விமானத்தின் முதல் பெண் விமானியாக துணை லெப்டினன்ட் ஆஸ்தா புனியா தேர்வாகி சாதனை புரிந்துள்ளார். ‘தங்கச் சிறகுகள்’ விருதையும் அவர் பெற்றார். ஏற்கெனவே, கடல்சார் ரோந்து விமானங்கள் & ஹெலிகாப்டர்களின் விமானிகளாக பெண்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், புனிதா போர் விமானியாக பொறுப்பேற்றதன் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் கடற்படையின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளது.
இனி 8 மணி நேரத்துக்கு முன்பே ரயில் பயணிகள் பட்டியல் வெளியிடப்படும்!
ரயில் பயணங்களின் போது தற்போது 4 மணி நேரத்துக்கு முன்னதாக பயணிகளின் விவரங்கள் அடங்கிய ரயில் பயணிகள் பட்டியல் வெளியிடப்படுகிறது. இனி இது 8 மணி நேரத்துக்கு முன்னரே வெளியிடப்படும். இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஒன்றிய அரசில் 227 காலியிடங்கள்:
ரூ.35,400 ஊதியம்!
இந்திய கடற்படையில் காலியாக உள்ள 227 Chargeman (Group B) காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 18 முதல் 30 வயதுக்குட்பட்ட டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வின் மூலம் தேர்ச்சி நடைபெறும். ரூ.35,400 – 1,12,400 வரை ஊதியம் வழங்கப்படும். வரும் 18ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஏஅய் (AI) செய்த மேஜிக்:
18 ஆண்டுகள் கழித்து கர்ப்பமான பெண்!
கொலம்பியா இணையருக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லை. IVF சிகிச்சையும் பலனளிக்காமல் போக, அவர்கள் கொலம்பியா பல்கலைக்கழக கருவுறுதல் மய்யத்தை அணுகினார். அங்கு ஏஅய்(AI) உதவியுடன் விந்தணுக்களை அடையாளம் காணும் முறையில் சிகிச்சை அளிக்கப்பட, தற்போது அவர் கர்ப்பமடைந்துள்ளார். ஏஅய் மனித இனத்திற்கு பிரச்சினை எனக் கூறப்படும் நிலையில், இது போன்ற செய்திகள் நம்பிக்கை அளிக்கின்றன.