திருச்சி, ஜூலை 6– இந்திய ஒலிம்பிக் அமைப்பால் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வரும், தேசிய அளவிலான 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான ஒலிம்பியாட் போட்டிகளில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் 139 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
ஆங்கிலம், கணக்கு, அறிவியல், பொது அறிவு மற்றும் ஓவியம் போன்ற பல்வேறு பாடங்கள் சார்ந்த பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் ஆங்கிலப் பாடப் பிரிவில் மூன்றாம் வகுப்பு மாணவி பி.பார்கவி தங்கப் பதக்கமும், கணக்குப் பாடத்தில் ஏழாம் வகுப்பு மாணவி எஸ்.தன்யாஶசிறீ தங்கப் பதக்கமும், ஓவியப் பிரிவில் மூன்றாம் வகுப்பு மாணவர் பி.ஆரிஸ் அக்ரம், அய்ந்தாம் வகுப்பு மாணவர்.வீ.ஹரீஸ், ஏழாம் வகுப்பு மாணவர் ஏ. சிறீஹரீஸ், பத்தாம் வகுப்பு மாணவி ஆர்.காவ்யாயினி ஆகியோர் தங்கப் பதக்கமும், பொது அறிவுப் போட்டி பிரிவில் 10ஆம் வகுப்பு மாணவி என்.அனுஷ்கா தங்கப் பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும், மூன்றாம் வகுப்பு மாணவி எஸ்.அர்ஷின் மாநில அளவில் கணக்குப் பாடப் பிரிவில் நான்காம் இடத்தோடு, சிறப்பிடம் பெற்று, தங்கப் பதக்கமும் ரூ.1000 ரொக்கப் பரிசும் பெற்றுள்ளார்.
மூன்றாம் வகுப்பு மாணவி எஸ்.வேதவித்யா மற்றும் பத்தாம் வகுப்பு மாணவி.டி.சோனல் ஸ்டெஃபினா ஆகியோர் ஓவியப் போட்டியில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்று தங்கப் பதக்கமும் வென்றுள்ளனர்.
இத்தகைய சாதனைகள் படைத்ததன் மூலம் சிறந்த பங்களிப்பு மற்றும் சிறப்பிடம் பெற்ற பள்ளிகளுக்கு வழங்கப்படும் “தங்கப் பள்ளி விருதும் (Golden School Award) வென்று பள்ளிக்கு பெருமை தேடித் தந்துள்ளனர், இதில், இந்த விருது தொடர்ந்து ஆறாவது முறையாகப் பெற்று திருச்சி , பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தங்கள் அளப்பரிய சாதனைகள் மூலம் பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளைப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் ஆகியோர் பாராட்டி, தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.
சிறந்த முதல்வர் விருது
இந்தியன் ஒலிம்பியாட் நிறுவனத்தின் சார்பில், 2024-2025 கல்வியாண்டில் நடைபெற்ற 12ஆவது இந்தியத் திறன் ஒலிம்பியாட் நிகழ்வில் மாணவர்களை வெற்றிகரமாக வழிநடத்தி, தேர்வுகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்கத் தூண்டி அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் மாணவர்களின் வளர்ச்சிக்காக செயல்பட்டமைக்காக சிறந்த ஆசிரியர்களுக்கான விருதினை பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியர்கள். கிருபா சங்கர், சிவராமகிருஷ்ணன் இளங்கலை ஆசிரி யர்கள் மஞ்சுளா, ராஜாத்தி, நளினி, நந்தினி, ராதிகா ஆகிய ஏழு ஆசிரியப் பெருமக்கள் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும், இந்த நிறுவனம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைச் சிறந்த முறையில் ஒருங்கிணைத்து, சிறப்பான பங்களிப்பை வழங்கி வருவதோடு, தொடர்ந்து ஆறாவது முறையாக தங்கப் பள்ளி விருதினைப் பெறுவதற்குக் காரணமாக விளங்கிய பள்ளி முதல்வர் டாக்டர்.க.வனிதாவுக்கு “சிறந்த முதல்வர்” விருதினையும் வழங்கி சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.