சென்னை, ஜூலை 6- கீழடி அகழாய்வுகளின் கண்டுபிடிப்புகள், தமிழர் நாகரிகத்தின் தொன்மையை வட இந்தியாவிலும் பரவச் செய்துள்ளன. இது குறித்து மனிஷ்சிங் என்பவர் வெளியிட்டுள்ள குறிப்பில், வேத நாகரிகத்தை விட கீழடி வெளிப்படுத்தி உள்ள நாகரிகம் தொன்மையானது எனத் தெரிவித்துள்ளார்.
“அகழாய்வுகளின் அரசியல், இந்திய மண்ணுக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள்” எனும் தலைப்பில் மனிஷ் சிங் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு காலத்தில், இந்தியாவின் வரலாறு வேதங்களுடன் தொடங்கியதாகவும், நமது நாகரிகம் கங்கையின் மடியில் செழித்து வளர்ந்ததாகவும் நம்பப்பட்டது என்றும் ஆரியர்களும் பார்ப்பனர்களும் இக்கருத்தை பரப்பி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிந்து சமவெளி நாகரிகம்
பின்னர். சர் ஜான் மார்ஷல் தலைமையில் நடைபெற்ற அகழாய்வு களின் முடிவில் வெளியான ‘சிந்து சமவெளி நாகரிகம், வேத நாகரிகம்’ குறித்த பொய்யான கோட்பாடுகளை தகர்த்துவிட்டதாகவும், வேத யுகத்திற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய மண்ணில் முழுமையாக வளர்ந்த நகர்ப்புற நாகரிகம் இருந்ததும், அங்கு வாழ்ந்த மக்கள் ஆரியர்கள் அல்ல என்பதும் உறுதி செய்யப்பட்டதால், ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா பிளவுபட்டபோது, நமது நாகரிகத்தின் உண்மையான பிறப்பிடம் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டது என்றும், இது கலாச்சார தேசிய வாதத்திற்கு ஏற்பட்ட பேரிடி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
70 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் எழ முயற்சிக்கும் கலாச்சார தேசியவாதம், வட இந்தியாவே இந்திய நாகரிகத்தின் தொட்டில் என பிரச்சாரம் செய்யும் நேரத்தில், மதுரை அருகே, 2016ஆம் ஆண்டு கீழடி எனும் இடத்தில் நடைபெற்ற அகழாய்வுகளில், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், மணிகள், வர்ணம் பூசப்பட்ட மட்பாண்டங்கள், குழாய்கள், வடிகால் அமைப்புகள் மற்றும் நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் உள்ளிட்ட கட்டமைப்புகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையும், இரும்பு மற்றும் வெண்கலத்திற்கான உருக்கு ஆலைகள் இருந்ததற்கான தடயங்களும் கிடைத்ததையும் சுட்டிக்காட்டி உள்ள கட்டுரையாளர்,
இது ஒரு தொழில் பெருநகரமாக இருந்திருக்கலாம் என்றும் அங்கிருந்த எழுத்து வடிவங்கள் சிந்து சமவெளி எழுத்தை ஒத்திருந்ததாகவும், வட இந்தியாவைவிட தென்னிந்தியாவில் பழமையான ஒரு நாகரிகம் இருந்தது உறுதி என்றும் தெரிவித்துள்ளார்.
அகழாய்வு நிறுத்தம்
இந்திய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியதைக் கொண்டாடுவதற்கு பதிலாக ஆய்வுக்கான நிதியை ஒன்றிய அரசு குறைத்ததுடன், அகழாய்வுகளின் தலைமை அதிகாரியை மாற்றிவிட்டு, ஆய்வறிக்கையை திரும்பப் பெறுமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், பின்னர் வந்த அதிகாரி முக்கியத்துவம்வாய்ந்த எதுவும் கிடைக்கவில்லை என்று கூறி ஒரு அறிக்கையை விரைவாகத் தாக்கல் செய்ததாகவும், அதனைத் தொடர்ந்து அகழாய்வு நிறுத்தப்பட்டதாகவும் கட்டுரையாளர் தெரிவித்துள்ளார்.
பின்னர், நீதிமன்றத்தின் தலை யீட்டைத் தொடர்ந்து அகழாய்வுப் பணிகளை தமிழ்நாடு அரசே தொடர்ந்ததாகவும், இதன் விளைவாக இலக்கியங்கள் மூலம் மட்டுமே அறியப்பட்ட சங்க காலம், தற்போது தொல்பொருள் சான்றுகளுடன் உறுதியாகி விட்டதாகவும், வட இந்தியாவுடன் தொடர்பில்லாத ஒரு பண்டைய திராவிடக் கலாச்சாரம் நிரூபிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுக்கதை
கீழடி அகழாய்வுகளில் ஒன்றிய அரசின் தலையீடு, ஆரிய நாகரிகம் உயர்ந்தது என்ற கட்டுக்கதையைப் பாதுகாப்பதையும், தென்னிந்தியாவை குறைமதிப்பீடு செய்வதையும் நோக்கமாகக் கொண்டதாகவேஉள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது, உத்தரப்பிரதேசத்தில் சரஸ்வதி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறுவது கீழடி அகழாய்வுகளை சிறுமைப்படுத்தும் நோக்கம் கொண்டவை என்றும், ஒன்றிய அரசின் பல நிறுவனங்களைப் போலவே, இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனமும் அரசியல் மயமாகி விட்டதாகவும் மனிஷ் சிங், தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.