ராலே, ஜூலை 6 வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 38ஆவது ஆண்டுவிழா வட கரோலினா மாநி லத்தின் ராலே நகரில் ஜூலை 3,4,5 நாட் களில் சிறப்பாக நடந்தது.
விழாவில் குன்றக்குடி பெரிய அடிகளார், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு இவர்களின் நூற்றாண்டு விழாவாகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவர்களைப் பற்றிய ஒளிப்படம் சிறப்பாக இருந்தது.
அடிகளார் தந்தை பெரியாருடன் இணைந்து ஜாதி ஒழிப்பில் ஈடுபட்டதும் நல்லகண்ணு அய்யாவின் வாழ்க்கைப் பயணமும் பெருமையுடன் காண்பிக்கப் பட்டன. சிறப்புப் பேச்சாளராகப் புலவர்
ந. செந்தலை கவுதமன் இருவர் பற்றியும் பல தெரியாத செய்திகளை எடுத்துரைத்தார் அடிகளார் கோவில்களுக்குச் செல்வார். ஆண்டவனை வணங்குவார். ஆனால் அங்கு திருநீறு வாங்கமாட்டார். கடவுளுக்கும் எனக்கும் இடையே தரகர் எதற்கு என்று கேட்பார்.
நல்லகண்ணு அய்யா தாம் பட்ட இன் னல்களை எல்லாம் தாங்கிப் பொதுப் பணியில் அர்ப்பணித்துக் கொண்டதை விவரித்தார்.
பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலையுலகில் இருந்து மாரி செல்வராசு, லிங்குசாமி போன்றவர்கள், நக்கீரன் கோபால், செய்தியாளர் நிர்மலா பெரியசாமி, பசுமைத் தாயகம் மூலமாக ஈழத் தமிழர்களுக்கு ஜெனிவாவில் அய்க்கிய நாட்டு உறுப்பினர் பேச்சுரிமை வாங்கித்தந்த சவுமியா அன்புமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தாய்த் தமிழ் பள்ளி ஆசிரியர்கள் வெற்றிச்செழியன், காளிதாசன் வந்து இன்றைய கல்வி நிலை பற்றிச் சொன்னார்கள்.
வி.அய்.டி. வேந்தர் விசுவநாதன் தொடர்ந்து ஆதரவளித்து வந்து பங்கேற் றார். மின்னிசோட்டாத் தமிழ்ச் சங்கம் மிகவும் புரட்சிகரமான சதிர் தான் பரதமாகியது எனபதை இசை நாடகமாக – – நமது இசை, நடனம் பின்னர் கருநாடகமாகவும் பரதமாகவும் மாற்றப்பட்டது என்பதையும் இசை, நடனத்தில் திணிக்கப்பட்ட பார்ப்பனீயத்தை வெளிப்படுத்திக் காட்டினர். மருது பாண்டியர் கதை இசை நாடகமாக்க் காட்டப்பட்டது.
பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளால் குழந்தைகள் தங்கள் திறமைகளைக் காட்டினர். திருக்குறள் தேனீ போட்டியில் நூற்றுக் கணக்கில் பரிசு் பெற்றனர்.
இலக்கிய வினாடி வினா சிறப்பாக நடந்தது. இலக்கியக் கேளவிகளுக்கு இரண்டு அணிகளும் போட்டிப் போட்டு பதில்கள் அளித்தனர். மேலும் பல் வேறு நிகழ்ச்சிகள், நடனங்கள், கிராமிய இசை , பேச்சுகள் நடந்தன.
பல தமிழ்ச் சங்கங்கள் தங்கள் திறமை களைக் காட்சிப் படுத்தினார்கள். சிறுவர் சிறுமியர் திறமைகள் அனைவரையும் வியக்க வைத்தது.
பெரியார் பன்னாட்டமைப்பின் இணை அமர்வு சிறப்பாக நடந்தது. புலவர் ந. செந்தலை கவுதமன் திராவிட இயக்க வரலாற்றைப் பாடமாக எடுத்துத் திராவிடத் தலைவர்கள், தந்தை பெரியார் பற்றிச் சிறப்பாக உரையாற்றினார்.
பெரியார் உலகம் காணொலி காட்டப் பட்டது.
பெரியார் புத்தக நிலையத்தில் பெரியார் உலகம் ஒளிப்பதிவு தொடர்ந்து காட்டப் பட்டது. பலரும் பல கேள்விகளை அனைவரும் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.
நன்கொடை அளிக்கும் வழி முறைகள் சொல்லப்பட்டன என பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர் சோம. இளங்கோவன் தெரிவித்துள்ளார்.