இரண்டாவது மாகான
சுயமரியாதை மகாநாடு – I (ஈரோடு)
இம்மாதம் 10, 11, 12, 13 தேதிகளில் ஈரோட்டில் இரண்டாவது சுயமரியாதை மகாநாடும் அதை அனுசரித்து வாலிபர் மகாநாடு, பெண்கள் மகாநாடு, மதுவிலக்கு மகாநாடு, சங்கீத மகாநாடு ஆகிய அய்ந்து மகாநாடுகள் முறையே திருவாளர்கள் பம்பாய் எம். ஆர். ஜயகர், நாகர்கோயில் பி. சிதம்பரம், டாக்டர் முத்துலட்சுமி அம்மாள், சிவகங்கை எஸ். ராமச்சந்திரன், தஞ்சை பொன்னையா ஆகியவர்கள் தலைமையில் நடைபெற்றன. இம் மகாநாடுகளுக்கு வரவேற்புக் கழக அக்கிராசனர்களாக முறையே திருவாளர் கள் ஆர். கே. ஷண்முகம், ஜே. எஸ். கண்ணப்பர், லட்சுமி அம்மாள், கார்குடி சின்னையா, காரைக்குடி சொ. முருகப்பர் ஆகியவர்கள் இருந்து வரவேற்புக் கழக சார்பாய் வரவேற்று இருக்கின்றார்கள்.
இவை தவிர மேற்படி 4 நாட்களிலும் இரவு 9 மணி முதல் நடு ஜாமம் 2 மணி 3 மணி வரையில் கொட்ட கையில் சொற்பொழிவுகளும் நடைபெற்று வந்தன. மகாநாட்டு காரியங்களை நிர்வகிக்க திருவாளர்கள் ஈரோடு சேர்மென் கே. ஏ. ஷேக்தாவுத் சாயபு, கோவை ஜில்லா போர்டு பிரசிடெண்ட் சி.எஸ்.ரத்தினசபாபதி, எஸ்.ராமநாதன் முதலியவர்கள் பொது காரியதரிசிகளாகவும் திருவாளர்கள் மு. ச. முத்துக் கருப்பஞ் செட்டியார், ஈ. வி. நஞ்சப்ப செட்டியார், எம்.சிக்கையா, கே.என். நஞ்சப்பகவுண்டர், ஏ.ஆர்.சிவாநந்தம், கி.ஆ.பெ. விஸ்வநாதம், மா.ராமசாமி, மாயவரம் சி.நடராஜன், சாமி சிதம்பரனார், கேசவலால், காளியப்பன், மு. ச. சுப்பண்ணன், சுப்பராய ஆச்சாரி, அழகிரிசாமி, எஸ்.வி.லிங்கம், எஸ். குரு சாமி, ஈ. வெ. கிருஷ்ணசாமி நாயக்கர் முதலிய பலர் தனித்தனி இலாகா காரிய தரிசிகளாகவும் திருவாளர்கள் வரதப்பன், ஆறுமுகம் ஆகியவர்கள் தொண்டர்படைத் தலைவர்களாகவும் இருந்து மகாநாட்டுக் காரியங்களை எவ்விதத்திலும் குறைவு படாமல் இனிது நடத்திக் கொடுத்தார்கள்.
மகாநாடு கூடின காலமானது சென்ற வருஷத்திய செங்கல்பட்டு மகாநாட்டைப் போலவே, அதாவது சைமன் கமிஷன் வரவினால் ஏற்பட்ட கிளர்ச்சி சந்தர்ப் பத்தைப் போலவே இவ்வருஷமும் நாட்டில் அதை விட பல மடங்கு அதிக கிளர்ச்சியும் நெருக்கடியுமான சமயம் என்று சொல்லப்படும் உப்புச் சட்டம் மீறும் கிளர்ச்சி சமயத்திலும் திரு காந்தி முதலிய பல நூற்றுக்கணக்கான கனவான்கள் சிறையிலடைப்பட்டும் அடி,சுடு, தள்ளு முதலிய பலாத்காரச் செய்கைகள் இருதரப்பிலும் நடந்து கொண்டு இருக்கும் படியான சமயத்தி லும் மகாநாடு கூட நேர்ந்ததோடு பார்ப்பனரல்லாத பிரமுகர்களுக்குள்ளும் அவர்களது கட்சிகளுக்குள்ளும் அபிப்பிராய பேதங்களும் மனத்தாங்கல்களும் ஏற்பட்டிருக்கும் சமயத்திலும் சுயமரியாதை இயக்கத் தலைவர்கள் தொண்டர்கள் என்று சொல்லப்படுபவர்களுக்குள்ளும் அபிப்பிராய பேத மேற்பட்டிருக்கின்றதாக வதந்திகள் கட்டி விட்டுக் கொண்டிருக்கும் சமயத்திலும் மூட நம்பிக்கையின் பலனால் அரசியல் கிளர்ச்சி என்பதில் பெரிதும் மக்கள் மனம் திருப்பப்பட்டு சுயமரியாதை இயக்கம், நாஸ்திக இயக்கம், பார்ப்பன துவேஷ இயக்கம், சர்க்கார் ஆதரிப்பு இயக்கம், படியாத மக்களால் நடத்தப்படும் இயக்கம், பணக்காரர்களுக்கு விரோதமான இயக்கம், பண்டிதர்களை அழிக்கும் இயக்கம், போல்ஸ்விக் இயக்கம் என்று கிருத்திரப் புத்தியுடன் பலர் விஷமப் பிரசாரம் செய்து கொண்டிருக்கும் காலத்திலும் அரசாங்கத்தாராலும் சுயமரியாதை இயக்கமானது அரசியல் சம்பந்தமான இயக்கமாதலால் அதில் சர்க்கார் ஒத்துழைக்க முடியாது என்று கருதப்பட்டு அந்தப்படியே நமக்கும் பல இலாக்காக்களுக்கும் தெரிவித்துவிட்டதுடன் அந்தப்படியே பல இலாக்காக்கள் ஒத்துழைக்காமலும் சில இலாக்காக்கள் விஷமங்களுக்கு இடம் கொடுத்துக் கொண்டும் இருந்த காலத்திலும் மற்றும் நான்கு நாள் இரவும் பகலும் இடைவிடாமல் மழை பெய்து கொண்டே இருந்த காலத்திலும் நடைபெற வேண்டியதாகிவிட்டதுடன் ஏற்பாடு செய்திருந்த தேதியை விட 15 நாள் முன்னதாக வைத்தே நடைபெற வேண்டியதாகி விட்டது.
இவ்வளவு அசவுகரியங்களுடன் நடத்த வேண்டியிருந்தாலுங் கூட சென்ற வருஷத்தை விட எவ்விதத்திலும் குறைவில்லாமலும், சில விஷயங்களில் அதற்கு மேலாகவும் சிறப்புடனும் வெற்றியுடனும் மகாநாடு நடந்தேறிற்றேயல்லாமல் எவ்விதத்திலும் குறைவு படவில்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். அன்றியும் திரு. யம். ஆர். ஜயகர் அவர்களை நாம் இம்மகாநாட்டுக்கு தலைமை வகிக்க அழைக்க வேண்டுமென்று முதல் முதல் கருதிய காலத்தில் முதலாவதாக எந்த காரணத்தைக் கொண்டு கருத நேர்ந்ததென்றால் நெல்லூர் மகாநாட்டு நடவடிக்கைகளின் காரணமாக பார்ப் பனரல்லாத தலைவர்கள் என்பவர்களுக்குள் அபிப்பிராய பேத மேற்பட்டு மூன்று நான்கு கட்சிகளாகி ஒருவரையொருவர் நசிக்கி விட வேண்டுமென்று கருதி அதற்காக ஒழுங்கையும் நியாயத்தையும் மீறி சில சமயங்களில் பார்ப்பனரல்லாதார் நன்மைகளையும் கூட பலிகொடுத்து மூர்த்தண்ணியமாக நின்று தங்கள் தங்கள் சுயநலப் பிரசாரம் செய்து வருகையில் சென்னை மாகாணத்தில் யாரைத் தலைவராகத் தெரிந்தெடுத்தாலும் அசவுகரியம் நேரிடுமென்று கருதியே வெளி மாகாணங்களில் இருந்து ஒரு கனவானை தெரிந்தெடுக்க நேர்ந்தது.
இரண்டாவதாக வெளி மாகாணத் தலைவர்களும் இங்கு வந்து நமது இயக்கத்தின் நிலைமையும் மக்களின் கருத்தையும் அறிந்து போவது நலம் என்பதாகவும் தோன்றிற்று. இந்த இரண்டு காரணங்கள் முக்கியமானதாகும். இந்த நிலையில் திரு. ஜயக்கர் அவர்கள் பெயரை நாம் உச்சரித்ததும் அவர் இந்து மகாசபைத் தலைவர் என்றும் வேத சாஸ்திரப் புராணப் பற்றுடையவரென்றும். நமக்குப் பலர் தெரிவித்தார்கள். இதேபோல் திரு. ஜயக்கருக்கும் நமது இயக்கம் கடவுள் மறுப்பு இயக்கமென்றும் மத எதிர்ப்பு இயக்கமென்றும் அவர் வருவதற்குள் கொட்டகை தீப்பற்றி எரிக்கப்பட்டு விடுமென்றும் வழியிலேயே அவர் கொல்லப்பட்டு விடக் கூடுமென்றும் பல மாதிரியான மிரட்டுக் கடிதங்களும் எழுதினார்கள்.
இதன் காரணமாக திரு. ஜயக்கர் அவர்கள் நமது சுயமரியாதை இயக்க சம்பந்தமான கொள்கைகள் நடவடிக்கைகள் ஆகிய பிரசுரங்களை அனுப்பும்படி தந்தி அடித்தார். அதற்கு நாம் உடனே “ரிவோல்ட்” பத்திரிகைகளில் சென்ற மகாநாட்டுத் தீர்மானம் தலைவர்கள் உபன்யாசம் நமது போக்கு ஆகியவைகள் அடங்கிய சில பிரதிகளை அவருக்கு அனுப்பியதில் திரு. ஜயக்கர் அக்கொள்கைகளையும் தீர்மானங்களையும் போக்கையும் ஒப்புக் கொண்டு சந்தோஷ மடைந்ததுடன் அதை அனுசரித்தே தான் தமது பிரசங்கம் இருக்குமென்று தந்தி அடித்தார். நாமும் அவரது மற்ற கொள்கைகளைப் பற்றிய விபரம் தெரியாதிருந்தாலும் தீண்டாமை விலக்கிலும் ஜாதிமுறை அழிவிலும் பெண்கள் சம சுதந்திரத்திலும் சைன்சும் மதமும் ஒத்து இருக்க வேண்டும் என்ற கருத்திலும் அவர்கள் செய்யும் காரியங்களும் பேசும் பேச்சுகளும் பத்திரிகை மூலமாகவும் நண்பர்கள் மூலமாகவும் தெரிந்திருந் ததால் அவர் வந்து தென் இந்தியா நிலைமையையும் நமது கொள்கை களையும் தெரிந்து போக ஒரு சந்தர்ப்பம் கொடுப்போம் என்றே கருதி அவரை அழைத்தோம்.
நிற்க இவ்வருஷம் மகாநாடு நடத்த ஏற்பாடு செய்திருந்த நமது வயல் பூமியில் வெள்ளாமைப் பயிர் இருந்ததாலும் வேறு சில அதாவது சித்திரா பௌர்ணமி, சித்திரைத் திருவிழா, பக்ரீத் பண்டிகை மற்றும் சிலருக்கு ஏற்பட்ட துக்க சம்பவம் ஆகிய முதலியவைகளால் 10, 15 நாள் மகாநாட்டை தள்ளி வைக்கத் தீர்மானித்து 25, 26 தேதிகளுக்கு மாற்றி தந்தி கொடுத்ததில் ஒரு வாரத்திற்கு பிறகே அந்த தேதி தங்களுக்கு சவுகரியப் படாதென்று திரு. ஜயக்கர் தெரிவித்ததால் மறுபடியும் மகாநாடு 10 நாள் இருக்க பழயபடி 15 நாள் முந்தி 10, 11 தேதிகளிலேயே நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஆகவே இத்தனை வித எதிர்ப்புகளும் அசவுகரியங்களும் போதிய சாவகாசமில்லாமையும் இருந்தும் மகாநாடானது சுமார் 2000 பெண்களும் 4000 ஆண்களும் அடங்கிய கூட்டமாகவே கடைசிவரையில் இருந்து வந்தது. இதனால் பொது ஜனங்கள் கடவுள் மறுப்புக்கும் மத எதிர்ப்புக்கும் போல்ஸ்விஷத்திற்கும் படியாத மக்கள் தலைமைக்கும் பணக்காரர்கள் ஒழிவுக்கும் பண்டிதர்கள் அழிவுக்கும் சர்க்கார் ஆதரிப்புக்கும் பயப்படாத மக்களாகி விட்டார்கள் என்பது நன்றாய் வெளியாய் விட்டது.
உதாரணமாக ஒத்துழையாமை கிளர்ச்சி நடந்த காலத்தில் பல தாலூகா ஜில்லா மகாநாடுகளிலும் மாகாண மகாநாட்டிலும் தலைமை வகித்தல் ஆஜ ராகி பேசுதல் பிரமுகராயிருத்தல் ஆகிய பல காரியங்கள் நடத்தி யிருக்கின்றோம்.
மற்றும் பார்ப்பனரல்லாதார் இயக்க மகாநாடுகள் பலதையும் சென்று பார்த்திருக்கின்றோம். அவைகள் அவ்வளவிலும் அதிகமான ஜனங்கள் வந்த மகாநாடென்று சொல்லிக் கொள்ளப்படும் மதுரை மகாநாட்டை விட குறைந்தது மிகவும் நான்கு ஐந்து பங்கு மக்கள் அதிகமாக இம்மகாநாட்டிற்கு அதுவும் நெருக்கடியும் அசௌகரியமுமான இந்த சந்தர்ப்பத்தில் வந்திருந்தார்கள் என்பது கவனிக்கத் தக்கதாகும். கொட்டகையானது 50 அடி அகலத் திலும் 120 அடி நீளத்திலும் போடப்பட்டிருந்ததானாலும் மக்கள் அக்கொட்டகை முழுவதும் நிறைந்து இருந்தார்களென்றால் மழையும் உற்சவமும் மற்ற அசௌகரியங்களும் இல்லாதிருந்திருக்குமானால் கொட்டகை இடம் போதாதென்றே சொல்ல வேண்டும்.
– தொடரும்
குடி அரசு – தலையங்கம் – 18.05.1930