ஹாங்காங் பல்கலைக்கழகம், (3D) முப்பரிமாண தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனிதர்களின் சுவாசத் திசுக்களையும் மற்றும் சிறு உடல் உறுப்புகளையும் உருவாக்கும் ஒரு முன்னோடி முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்தத் தகவல் ‘சவுத் சைனா’ மார்னிங் போஸ்ட் நாளிதழில் வெளியாகி உள்ளது.
வருங்காலத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் (3D) முப்பரிமாண அச்சிடப்பட்ட சுவாசப்பாதையை உருவாக்குவதில் இந்தப் பல்கலைக்கழகம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் தொற்று மய்யத்தின் பேராசிரியர் மைக்கேல் சான் சி-வாய் (Michael Chan Chi-wai) கூறுகையில், பாதிக்கப்பட்டவரின் சொந்த செல்களிலிருந்தே இந்தச் செயற்கை உறுப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தற்போதுள்ள தொழில்நுட்பங்கள் உயிரியல் பொருள்களைப் பயன்படுத்தி சுவாசப்பாதையை (3D) முப்பரிமாண முறையில் அச்சிட உதவுகின்றன. ஆனால், செல்கள் இல்லாமல் அந்தச் சுவாசப்பாதையைச் செயல்பட வைக்க முடியாது என்பதால், செல்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த புதிய முயற்சி வெறும் சுவாசப்பாதையை உருவாக்குவதோடு நின்றுவிடாமல், எதிர்காலத்தில் மற்ற முக்கிய உடல் உறுப்புகளையும், 3D பிரிண்டிங் மூலம் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகப் பேராசிரியர் சான் மேலும் தெரிவித்தார். இது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைத் துறையில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.