ஆந்திராவில் உள்ள எஸ்.வீ. (சிறீ வெங்கடேஸ்வரா) கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் மிகவும் புகழ்பெற்றது. திருப்பதியில் உள்ள பல்கலைக்கழகம் தேவஸ்தானத்திற்கு வரும் உணவுப் பொருட்களின் தன்மையை ஆய்வு செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்பல்கலைக்கழகம் நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகளில் பால்வளம் தொடர்பான ஆய்வுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. கல்வி ஆய்வு பறிமாற்றமும் ஒப்பந்தமும் செய்துள்ளது.
ஆந்திர அரசுக்குச் சொந்தமான இந்தப் பல்கலைக் கழகத்தில் முனைவர் ரவி என்ற பேராசியர் துறைத்தலைவராக இட ஒதுக்கீடு சட்டத்தின் படி பதவி உயர்வு பெறுகிறார்.
பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்கெனவே இருந்த துறைத்தலைவரின் அறையிலிருந்த அத்தனை பொருட்களையும் அகற்றிவிடுகிறது. அங்கு வைக்கப்பட்டிருந்த குடிநீர் ஆர் ஓ கருவியைக் கூட அகற்றி எடுத்துச் சென்றுவிட்டது.
அதிர்ச்சி
துறைத்தலைவராக பெறுப்பேற்றுச்சென்ற அவர் அதிர்ச்சி அடைந்தார். அந்தத் துறையில் பணியாற்றும் பேராசிரியர்களும் ஆய்வு மாணவர்களும் வந்தால் அவர்கள் அமருவதற்கு இருக்கைகள் இல்லாததால் துறைத்தலைவர் அறையிலேயே துண்டை விரித்து அமர்ந்து ஆலோசனைகளைக் கேட்கவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
ஜாதிப் பாகுபாடு
இந்தியாவில், கல்வி நிலையங்கள் பாகுபாடற்ற அறிவை வளர்க்கும் இடங்களாகப் போற்றப்படுகின்றன. ஆனால், கெட்ட வாய்ப்பாக, உயர்கல்வி நிலையங்களில்கூட ஜாதி அடிப்படையிலான பாகுபாடும் அடக்குமுறையும் இன்றும் நீடித்துக்கொண்டிருப்பது ஒரு கசப்பான உண்மை.
இந்த நிகழ்வு தனிப்பட்ட ஒன்றல்ல. இந்தியாவின் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில், குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் மற்றும் பழங்குடியினப் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மற்றும் மாணவர்களுக்கு எதிராகப் பலவிதமான பாகுபாடுகள் நிலவுகின்றன. இது வெளிப்படையான வன்முறையாகவோ அல்லது நுட்பமான புறக்கணிப்பாகவோ இருக்கலாம். பாடத்திட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் வரலாற்றையும் பங்களிப்புகளையும் இருட்டடிப்பு செய்வது, ஆய்வுக்குழுக்களில் இருந்து ஒதுக்குவது, பதவி உயர்வு மறுப்பது, மானியங்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவது போன்ற வடிவங்களில் இந்த அடக்குமுறை வெளிப்படுகிறது.
கல்வி நிலையங்களே கூட…
உயர்கல்வி நிலையங்களில் ஜாதிவெறி அடக்குமுறை என்பது தனிநபரின் கவுரவத்தை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கல்விச் சூழலையும் சீரழிக்கிறது. இத்தகைய சம்பவங்கள், பாதிக்கப்பட்டவர்களின் மன உறுதியைக் குலைத்து, அவர்களின் செயல்திறனைப் பாதிக்கின்றன. மேலும், இது சமூகத்தில் உள்ள ஆழமான பிளவுகளைப் பிரதிபலிக்கிறது. படித்தவர்களிடமும் சாதி வெறி தொடர்வது, கல்வியின் அடிப்படைக் கொள்கைகளுக்கே எதிரானது. கல்வி, மனிதனை அறியாமையிலிருந்தும், பாகுபாடுகளிலிருந்தும் விடுவிக்க வேண்டும். ஆனால், இங்கே கல்வி நிலையங்களே பாகுபாட்டின் கருவியாக மாறுகின்றன.
இந்தியாவின் வளர்ச்சிக்கு உயர்கல்வி இன்றியமையாதது. ஆனால், அது அனைவரும் சமமாக நடத்தப்படும், கண்ணியத்துடன் வாழும் இடமாக இருக்க வேண்டும்.
சமூக நல்லிணக்கத்திற்குப் பெரும் அச்சுறுத்தல்
மதவெறியோடும், ஜாதிவெறியோடும் செயல்படும் ஹிந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகள், கடந்த 10 ஆண்டுகளாக சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.
உயர்கல்வி நிலையம், தனியார் நிறுவனங்கள், பொது இடம் என அனைத்து இடத்திலும் மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் வெறுப்பையும், பாகுபாட்டையும் விதைக்கும் ஹிந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகள் சமூக நல்லிணக்கத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.. மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டு, சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் மீது வன்முறையைத் தூண்டுவதுடன், ஜாதிய படிநிலைகளை நியாயப்படுத்தவும் முயல்கின்றன. இந்தச் செயல்கள், இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கும் சவால் விடுகின்றன. இத்தகைய மதவெறி மற்றும் ஜாதிவெறிப் போக்குகளைத் தடுத்து நிறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்
இந்தக் கூட்டம் தான் மதுரையில் முருகன் பெயரில் மாநாடு ஒன்றை நடத்தி அமைதியாக உள்ள தமிழ்நாட்டிலும் மதவெறியைத்தூண்டி மக்களை பிளவுபடுத்த முயல்கிறது. எச்சரிக்கை!
-
••••
இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளைக் கடந்துசென்றுகொண்டு இருக்கிறது. இதனை மோடி ஆட்சி ‘அம்ருத் பாரத்’ என்று கூறி புதிய பெயர் வைத்து ஆட்சி நடத்துகிறார்.
உங்கள் அப்பா தொழில் செருப்பு தைப்பது
நீயும் அதற்குச் செல்லவேண்டியதுதானே?
விமானிக்கு நேர்ந்த கொடூரம்
இண்டிகோ ஏர்லைன்ஸில் வேலைசெய்யும் பயிற்சி விமானி அவரது மூத்த அதிகாரிகளால் கடுமையான ஜாதிய அடக்குமுறை மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி உள்ளார்
இது தொடர்பாக உயரதிகாரிகள் மீது தாழ்த்தப்பட்டோர் பழங்குடியின வன்கொடுமைச்சட்டத்தின் கீழ் மூன்று பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள்ளது
அரியானா மாநிலம் குருகிராம் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒன்றில் இண்டிகோ விமானத்தில் பயிற்சி விமானியாக பணியாற்றும் தாழ்த்தபப்ட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அங்கு மூத்த அதிகாரியாக பணியாற்றும் மூன்று பேர் ஜாதிய ரீதியாக துன்புறுத்தியதாகவும், அவமதித்ததாகவும் புகார் அளித்துள்ளார்.
பயிற்சி விமானி
இவர் பெங்களூருவிலிருந்து டில்லி செல்லும் இண்டிகோ விமானத்தின் பயிற்சி விமானியாக உள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த 35 வயதான அந்த பயிற்சி விமானி, ஏப்ரல் 28 அன்று குர்காமில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தின் போது, தனது உயரதிகாரிகளான தபஸ் தே, மனிஷ் சஹானி மற்றும் கேப்டன் ராகுல் பாட்டீல் ஆகியோர் ஜாதி ரீதியாக மிகவும் மோசமாகப் பேசியதாகவும் புகார் மனுவில், கூறியுள்ளார். தபஸ் தே குப்பைத் தொட்டியில் தனது அலைபேசி மற்றும் தான் கொண்டுவந்த பையை வைக்கும்படி கூறியதுடன், குப்பை அள்ளும் உங்களுக்கு எல்லாம் விமானம் ஓட்டும் ஆசை வந்துவிட்டதா? என்று கூறி இழிவுபடுத்தினார்.
கலந்தாய்வில் அவமானம்
மேலும் கலந்தாய்வின் போது உயரதிகாரிகள் மூவரும், “நீங்கள் விமானம் ஓட்ட தகுதியற்றவர், உங்கள் தந்தையும் முன்னோர்களும் செய்த செருப்புதைக்கும் வேலையைச் செய்யலாம். எங்கள் முன்பு கைகட்டி நிற்கும் காவலாளிகளுக்கான மதிப்பு கூட உனது ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு கொடுக்கமாட்டோம்” என்று கூறியுள்ளனர்.
ஜாதி ரீதியாகத் தாக்குதல்
இந்த துன்புறுத்தல் பல நாட்களுக்குத் தொடர்ந்ததாகவும், மேலும் இங்கு எந்த பெரிய விமான நிறுவனத்திற்குச் சென்றாலும் ஒரு பயனுமில்லை. பேசாமல் விமானி வேலையை விட்டுவிட்டு செருப்பு தைக்கச் செல் என்று தன்னை இழிவு படுத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.
“அவர்கள் கூறிய கருத்துக்கள் அவமானப்படுத்துவதாக மட்டுமல்லாமல், ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த என்னை வெளிப்படையாக இழிவுபடுத்தும் நோக்கமாகக் கொண்டிருந்தன” என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சான்று ஆவணங்கள்
புகாரில் அவர் அவர்கள் பேசிய குரல் பதிவு மற்றும் ஊதியக் குறைப்பு தொடர்பான கடிதம், மற்றும் பயிற்சியை ரத்து செய்து தனக்கு வரவேண்டிய தொகையை திருப்பி அனுப்பியது, மீண்டும் துவக்கப் பயிற்சிக்கு பரிந்துரைத்தது உள்ளிட்ட சான்றுகளை வழங்கினார்.
உயரதிகாரிகள் மற்றும் நிறுவனத்தின் நெறிமுறைக் குழுவிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்ற போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தனக்கு நீதிவேண்டி தாழ்த்தப்பட்டோர் பழங்குடியின ஆணையத்தின் பிரிவை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக புகார்தாரர் தெரிவித்துள்ளார்.
குருகிராம் DLF-1 காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட FIR, SC/ST சட்டத்தின் பிரிவுகள் 3(1)(r) மற்றும் 3(1)(s) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுவெளியில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் அல்லது பழங்குடியினரை அவமானப்படுத்தும் நோக்குடன் வேண்டுமென்றே இழிவுபடுத்துதல் அல்லது அச்சுறுத்துதல் தொடர்பானவை. இந்த வழக்கில் BNS இன் பிரிவுகள் 351(2) (கிரிமினல் மிரட்டல்), 352 (சமாதானத்தை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல்), மற்றும் 3(5) (பொதுவான நோக்கம்) ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.
“நாங்கள் ஆதாரங்களைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளோம், விரைவில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் வாக்குமூலங்களையும் பதிவு செய்வோம்” என்று உதவி துணை ஆய்வாளர் தல்விந்தர் சிங் தெரிவித்தார்.